Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

பழம்பதிநாதர் கோவில், திருப்புனவாயில்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருப்புனவாயில்
இறைவன் பெயர்பழம்பதிநாதர், விருத்தகிரீஸ்வரர்
இறைவி பெயர்கருணைநாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர் - 1
எப்படிப் போவது அறந்தாங்கியில் இருந்து 38 கி.மி. பயணம் செய்து மீமிசால் அடைந்து அங்கிருந்து 4 கி.மி. சென்றால் திருப்புனவாயில் அடையலாம். திருவாடானை, ஆவுடையார் கோவில் ஆகிய இடங்களில் இருந்தும் இத்தலத்திற்குச் செல்லலாம். இத்தலம் வங்கக் கடற்கரையோரம் அமைந்துள்ளது. திருச்சியிலிருந்து புதுக்கோட்டை, அறந்தாங்கி வழியாகவும், மதுரையிலிருந்து காரைக்குடி, அறந்தாங்கி வழியாகவும் இத்தலத்தை அடையலாம்.
ஆலய முகவரி அருள்மிகு
விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில்
திருப்புனவாயில் அஞ்சல்
ஆவுடையார்கோவில் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம்
PIN - 614629

தமிழகத்திலேயே மிக அதிக சுற்றளவுள்ள ஆவுடையாருடன் கூடிய லிங்கம் புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோவில். ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாமல், செய்த தவறுக்காக பிரம்மா படைக்கும் தொழிலை இழக்க வேண்டியதாயிற்று. பார்வதியின் அறிவுரைப்படி, பூலோகத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, மீண்டும் தனது தொழிலைப் பெற பூஜை செய்து வந்தார். லிங்க அபிஷேகத்திற்காக தீர்த்தம் ஒன்றை உருவாக்கினார். பிரம்மன் உருவாக்கிய தீர்த்தம் என்பதால் "பிரம்ம தீர்த்தம்" என்ற பெயர் ஏற்பட்டது. நான்கு முகங்களைக் கொண்டவர் என்பதால், லிங்கத்தின் நான்கு பகுதிகளிலும் சிவமுகத்தை உருவாக்கினார். இது சதுர்முக லிங்கம் எனப்பட்டது. இந்த லிங்கமே இங்கு வழிபாட்டில் இருந்தது. பிற்காலத்தில், இரண்டாம் சுந்தர பாண்டியன், சோழநாட்டு பாணியையும், பாண்டியநாட்டு பாணியையும் கலந்து ராஜகோபுரமும், விமானமும் மிக உயரமாக அமைக்கப்பட்ட ஒரு கோயிலை எழுப்பினான். மூலஸ்தானத்தில் பிரமாண்டமான ஆவுடையாருடன் கூடிய லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவரை "விருத்தபுரீஸ்வரர்" என அழைத்தனர். விருத்தம் என்றால் பழமை. எனவே இவர் பழம்பதிநாதர் என்றும் அழைக்கப் படுகிறார். பிரம்மாவே வணங்கிய தலம் என்பதால், இது மிகப்பழமையான ஊராகக் கருதப்படுகிறது.

65 அடி உயரத்தில் கிழக்கு நோக்கிய ராஜகோபுரமும், கோயிலின் வெளியே பிரம்ம தீர்த்தமும் அமைந்துள்ளது. இறைவன் கிழக்கு நோக்கி தனி சந்நிதியில் காட்சி தருகிறார். இக்கோவிலில் உள்ள நந்தியும் ஆவுடையாரும் (லிங்க பீடம்) மிகவும் பெரியதாக உள்ளது. சுவாமிக்கு மூன்று முழம் துணியும், ஆவுடையாருக்கு 30 முழம் துணியும் வேண்டும். "மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று " என்ற வாசகம் இத்தலத்து இறைவனைப் பற்றியதாகும். பாண்டிய நாட்டில் உள்ள 14 சிவஸ்தலங்களும் இங்கு இருப்பதாக ஐதீகம். அதற்கேற்ப கோவிலுக்குள் 14 சிவலிங்கங்கள் இருக்கின்றன. மஹாவிஷ்னு, பிரம்மா, இந்திரன், சூரியன், சந்திரன், எமதர்மன், வசிஷ்டர், அகத்தியர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சுவாமி சந்நிதியின் சுற்றுப்மிரகாரத்தில், பஞ்ச விநாயகர், தட்சிணாமூர்த்தி, தல விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், பிரம்மா, சண்டிகேஸ்வரர், கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன. கருவறை வெளிப்பபறச் சுவற்றின் மேற்கு மாடத்தில் சிவன் சன்னதிக்கு பின்புறம் லிங்கோத்பவருக்கு பதிலாக பெருமாளும், அனுமனும் உள்ளனர். இறைவியின் சந்நிதி சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்மனுக்கு எதிரில் குடவறை காளி சன்னதி உள்ளது.

இத்தலம் நான்கு யுகத்திலும் நான்கு பெயர்களுடன் இருந்ததாகக் கருதப்படுகிறது. எனவே, நான்கு தலவிருட்சங்கள் இருந்துள்ளன. எல்லோராலும் ஒதுக்கப்படும் கள்ளியும் இங்கு தல விருட்சமாக உள்ளது என்பதில் இருந்து, இறைவன் வெறுக்கக்கூடியவற்றையும் ஆட்கொள்பவர் என்பது வெளிப்படுகிறது. கிருதயுகத்தில் வஜ்ரவனம், இந்திரபுரம் என்ற பெயருடன் சதுர கள்ளியையும், திரேதாயுகத்தில் பிரம்மபுரம் என்ற பெயருடன் குருந்தமரத்தையும், துவாபரயுகத்தில் விருத்தகாசி என்ற பெயருடன் மகிழ மரத்தையும், கலியுகத்தில் பழம்பதி என்ற பெயருடன் புன்னை மரத்தையும் தல விருட்சமாக கொண்டுள்ளது. இவை நான்கும் நான்கு வேதங்களாக வணங்கப்படுகின்றன. நான்கு வேதங்களும் பூசித்த பெருமை உடையது இத்தலம். இத்தலத்தின் தீர்த்தமாக இலக்ஷ்மி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகியவை உள்ளன.

சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது

1. சித்தம் நீநினை என்னொடு சூளறும் வைகலும்
மத்த யானையின் ஈருரி போர்த்த மணாளனூர்
பத்தர் தாம்பலர் பாடிநின் றாடும் பழம்பதி
பொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப்புன வாயிலே.

2. கருது நீமனம் என்னொடு சூளறும் வைகலும்
எருது மேற்கொளும் எம்பெரு மாற்கிட மாவது
மருத வானவர் வைகும் இடம்மற வேடுவர்
பொருது சாத்தொடு பூசல றாப்புன வாயிலே.

3. தொக்கா யமனம் என்னொடு சூளறும் வைகலும்
நக்கான் நமை யாளுடை யான்நவி லும்மிடம்
அக்கோ டரவார்த் தபிரா னடிக் கன்பராய்ப்
புக்கா ரவர் போற்றொழி யாப்புன வாயிலே.

4. வற்கென் றிருத்திகண்டாய் மனமென்னொடு சூளறும் வைகலும்
பொற்குன்றஞ் சேர்ந்ததோர் காக்கைபொன் னாமது வேபுகல்
கற்குன்றுந் தூறுங் கடுவெளி யுங்கடற் கானல்வாய்ப்
புற்கென்று தோன்றிடு மெம்பெரு மான்புன வாயிலே.

5. நில்லாய் மனம் என்னொடு சூளறும் வைகலும்
நல்லான் நமை யாளுடை யான்நவி லும்மிடம்
வில்லாய்க் கணை வேட்டுவர் ஆட்ட வெகுண்டுபோய்ப்
புல்வாய்க் கணம் புக்கொளிக் கும்புன வாயிலே.

6. மறவல் நீமனம் என்னொடு சூளறும் வைகலும்
உறவும் ஊழியு மாயபெம் மாற்கிட மாவது
பிறவு கள்ளியின் நீள்கவட் டேறித்தன் பேடையைப்
புறவங் கூப்பிடப் பொன்புனஞ் சூழ்புன வாயிலே.

7. ஏசற்று நீநினை யென்னொடு சூளறும் வைகலும்
பாசற் றவர் பாடிநின் றாடும் பழம்பதி
தேசத் தடியவர் வந்திரு போதும் வணங்கிடப்
பூசற் றுடிபூச லறாப் புன வாயிலே.

8. கொள்ளி வாயின கூரெயிற் றேனங் கிழிக்கவே
தெள்ளி மாமணி தீவிழிக் கும்மிடஞ் செந்தறை
கள்ளி வற்றிப்புல் தீந்துவெங் கானங் கழிக்கவே
புள்ளி மானினம் புக்கொளிக் கும்புன வாயிலே.

9. எற்றே நினை என்னொடுஞ் சூளறும் வைகலும்
மற்றேதும் வேண்டா வல்வினை யாயின மாய்ந்தறக்
கற்றூறு கார்க் காட்டிடை மேய்ந்தகார்க் கோழிபோய்ப்
புற்றேறிக் கூகூ எனஅழைக் கும்புன வாயிலே.

10. பொடியாடு மேனியன் பொன்புனஞ் சூழ்புன வாயிலை
அடியார் அடியன் நாவல வூரன் உரைத்தன
மடியாது கற்றிவை யேத்தவல் லார்வினை மாய்ந்துபோய்க்
குடியாகப் பாடிநின் றாடவல் லார்க்கில்லை குற்றமே.

11. சித்தம் நீநினை என்னெடு சூளுறும் வைகலும்
மத்த யானையின் ஈருரி போர்த்த மணாளனூர்
பத்தர் தாம்பலர் பாடிநின் றாடும் பழம்பதி
பொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப்புன வாயிலே.