பசுபதிநாதர் கோவில், கருவூர் ( கரூர் )
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | கருவூர் (கரூர்) |
| இறைவன் பெயர் | பசுபதிநாதர், ஆநிலையப்பர் |
| இறைவி பெயர் | சுந்தரவல்லி, அலங்காரவல்லி |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | கரூர் நகரின் மத்தியில் கோவில் உள்ளது. கோயமுத்தூர் மற்றும் ஈரோட்டில் இருந்து சுமார் 70 Km தொலைவிலும், திருச்சியில் இருந்து சுமார் 75 Km தொலைவிலும் கரூர் உள்ளது. கரூர் ரயில் நிலையம் திருச்சி - ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது. |
கோவில் அமைப்பு: கொங்குநாட்டு சிவஸ்தலங்களில் கரூரில் உள்ள சிவாலயம் பெருமை மிக்கதும் பெரிய அளவில் அமைந்துள்ளதும் ஆகும்.இந்த சிவஸ்தலம் கோவில் சுமார் 2.65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோவில் ராஜகோபுரம் ஏழு நிலைகளையும் ஏழு கலசங்களையும் கொண்டது. உட்கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. இரு கோபுரங்களுக்கும் இடையே புகழ்ச்சோழர் மண்டபம் உள்ளது. புகழ்ச்சோழர் 63 நாயன்மார்களில் ஒருவர். கோவில் நல்ல சுற்று மதிலோடு கூடியது. கிழக்கு மேற்காக 465 அடி நீளமும், தெற்கு வடக்காக 205 அடி நீளமும் உடையது. முன் கோபுரம் 120 அடி உயரம் உள்ளது. கோபுரத்தில் புராணக் கட்சிகளை விளக்கும் சுதைச் சிற்பங்கள் அழகுடன் காட்சி தருகின்றன. கோவிலுக்குள் 2 பிரகாரங்கள் உண்டு. கோவிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் காணவேண்டிய ஒன்றாகும். கிழக்கு நோக்கி உள்ள கல்யாண பசுபதிநாதர், ஆநிலையப்பர் என்று வழங்கப்படும் மூலவர் ஒரு சுயம்பு லிங்கம் ஆகும். சுமார் இரண்டடி உயரம் உள்ள இந்த சிவலிங்கம் சற்றே சாய்ந்தாற்போலக் காட்சியளிக்கிறது. பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சூரியனின் ஒளி லிங்கத்தின் மீது படும்படியாக கோவில் அமைப்பு இருப்பது ஒரு சிறப்பம்சம் ஆகும்.உட்பிரகாரத்தில் தெற்குச்சுற்றில் 63 நாயன்மார்கள் எழுந்தருளியுள்ளனர். அவர்களில் எரிபத்த நாயனாருக்கு தனிசந்நிதி இருக்கிறது. மேற்குச் சுற்றில் விநாயகர், கஜலட்சுமி, ஆருமுகன் ஆகியோரின் திரு உருவங்கள் உள்ளன. வடக்குச் சுற்றில் பஞ்சலிங்க மூர்த்திகள் உள்ளனர். ஈசன் சந்நிதியில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று ஒரு வாயிலைக் கடந்தால் அம்மன் சுந்தரவல்லி சந்நிதி தெற்கு பார்த்தபடி அமைந்திருக்கிறது. இந்த சந்நிதியின் இடது புறம் க்ழக்கு நோக்கி அலங்காரவல்லி என்ற அம்மனின் பழைய கோவில் இருக்கிறது. பிரம்மா, காமதேனு ஆகியோர் இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டுள்ளனர். காமதேனு வழிபடும் போது ஏற்பட்ட குளம்பின் தழும்பு இப்போதும் சிவலிங்கத்தின் மீது காணலாம். கந்த புராண காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் முசுகுந்த சக்ரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டதாக பெருமை பெற்றது இந்த சிவஸ்தலம். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் வாழ்ந்து இக்கோவிலில் உள்ள சிவனுடன் ஐக்கியமானதால் அவருக்கு தெற்குப் பிரகாரத்தில் கன்னி மூலையில் கிழக்கு நோக்கி கருவூர் சித்தர் சந்நிதி உள்ளது.
கி.பி. 14ம் நூற்றாண்டில் கருவூருக்கு வந்த அருணகிரிநாதர் இக்கோவிலில் உள்ள முருகனை பற்றி தன்னுடைய திருப்புகழில் பாடியுள்ளார். எறிபத்த நாயனார், புகழ் சோழ நாயனார் ஆகியோர் வாழ்ந்து பேறு பெற்ற பெருமையுடையது கருவூர் சிவஸ்தலம்.
திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம்
தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ் சுண்ட லாருயி ராய தன்மையர் கண்ட னார்கரு வூரு ளானிலை அண்ட னாரரு ளீயும் அன்பரே. நீதி யார்நினைந் தாய நான்மறை ஓதி யாரொடுங் கூட லார்குழைக் காதி னார்கரு வூரு ளானிலை ஆதி யாரடி யார்தம் அன்பரே. விண்ணு லாமதி சூடி வேதமே பண்ணு ளார்பர மாய பண்பினர் கண்ணு ளார்கரு வூரு ளானிலை அண்ண லாரடி யார்க்கு நல்லரே. முடியர் மும்மத யானை யீருரி பொடியர் பூங்கணை வேளைச் செற்றவர் கடியு ளார்கரு வூரு ளானிலை அடிகள் யாவையு மாய ஈசரே. பங்க யம்மலர்ப் பாதர் பாதியோர் மங்கை யர்மணி நீல கண்டர்வான் கங்கை யர்கரு வூரு ளானிலை அங்கை யாடர வத்தெம் மண்ணலே. தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில் மேவர் மும்மதி லெய்த வில்லியர் காவ லர்கரு வூரு ளானிலை மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே. பண்ணி னார்படி யேற்றர் நீற்றர்மெய்ப் பெண்ணி னார்பிறை தாங்கு நெற்றியர் கண்ணி னார்கரு வூரு ளானிலை நண்ணி னார்நமை யாளும் நாதரே. கடுத்த வாளரக் கன்க யிலையை எடுத்த வன்றலை தோளுந் தாளினால் அடர்த்த வன்கரு வூரு ளானிலை கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே. உழுது மாநிலத் தேன மாகிமால் தொழுது மாமல ரோனுங் காண்கிலார் கழுதி னான்கரு வூரு ளானிலை முழுது மாகிய மூர்த்தி பாதமே. புத்தர் புன்சம ணாதர் பொய்யுரைப் பித்தர் பேசிய பேச்சை விட்டுமெய்ப் பத்தர் சேர்கரு வூரு ளானிலை அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே. கந்த மார்பொழிற் காழி ஞானசம் பந்தன் சேர்கரு வூரு ளானிலை எந்தை யைச்சொன்ன பத்தும் வல்லவர் சிந்தை யிற்றுய ராய தீர்வரே.
| கொங்கு நாட்டில் உள்ள மற்ற சிவஸ்தலங்கள் | ||
|---|---|---|
| திருநணா ( பவானி ) | திருச்செங்கோடு | திருமுருகபூண்டி |
| திருப்பாண்டிக்கொடுமுடி | அவினாசி (திருப்புக்கொளியூர்) | வெஞ்சமாக்கூடல் |
63 நாயன்மார்களில் மூவர் பெண்கள். அவர்கள் காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசி மற்றும் இசைஞானியார் ஆவர்.