Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருச்செங்கோடு

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருச்செங்கோடு
இறைவன் பெயர்அர்த்தநாரீஸ்வரர், மாதொரு பாகர்
இறைவி பெயர்பாகம்பிரியாள்
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருச்செங்கோடு சேலத்தில் இருந்து 27 Km தொலைவில் உள்ளது. பேருந்து வசதிகள் சேலத்தில் இருந்து திருச்செங்கோட்டிற்கு உள்ளது.

கோவில் அமைப்பு: தேவாரப் பதிகங்களில் கொடிமாடச் செங்குன்றூர் என்று பாடப்பெற்ற சிவஸ்தலம் தற்போது திருச்செங்கொடு என்று கூறப்படுகிறது. இந்த சிவஸ்தலத்தில் உள்ள கோவில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1900 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்குச் செல்ல 1200 படிக்கட்டுக்கள் கொண்ட வழியில் ஏறியும் அல்லது மலைப்பாதை வழியாக பேருந்து மற்றும் கார் மூலம் செல்லலாம். மேலே செல்லும் வழியில் பல மண்டபங்கள் உள்ளன. குன்றின் உச்சிக்குக் சென்றவுடன் வடதிசையில் 5 நிலை ராஜ கோபுரம் நம்மை வரவேற்கிறது. கோவிலின் மதில் சுவர் கிழக்கு மேற்காக 260 அடி நீளமும், வடக்கு தெற்காக 170 அடி நீளமும் கொண்டதாக அமைந்துள்ளது.

அர்த்தநாரீஸ்வரர், மாதொரு பாகர் என்று அழைக்கப்படும் மூலவர் சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது. இந்தக் கோவிலில் கிழக்கு நோக்கி உள்ள செங்கோட்டு வேலவர் சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அருணகிரிநாதர் தனது "திருப்புகழில்" இத்தலத்து முருகனைப் பற்றி பாடியுள்ளார். செங்கோட்டு வேலவர் சந்நிதியில் காணப்படும் சிற்பங்கள் மிகுந்த கலை நுணுக்கத்துடன் சிற்ப வேலைப்பட்டிற்கு ஒரு சான்றாகக் காட்சி அளிக்கின்றன.

படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. நாக தோஷங்கள் நீங்குவதற்காக இங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். ஆதிசேஷன், மஹாவிஷ்னு ஆகியோர் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம்

வெந்தவெண் ணீறணிந்து விரிநூல் திகழ்மார்பின் நல்ல
பந்தணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்
கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.

அலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணிந் தாகம்
மலைமகள் கூறுடையான் மலையார் இளவாழைக்
குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
தலைமக னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே.

பாலன நீறுபுனை திருமார்பிற் பல்வளைக்கை நல்ல
ஏலம லர்க்குழலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்
கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்
நீலநன் மாமிடற்றான் கழலேத்தல் நீதியே. 

வாருறு கொங்கைநல்ல மடவாள் திகழ்மார்பில் நண்ணுங்
காருறு கொன்றையொடுங் கதநாகம் பூண்டருளிச்
சீருறும் அந்தணர்வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
நீருறு செஞ்சடையான் கழலேத்தல் நீதியே. 

பொன்றிகழ் ஆமையொடு புரிநூல் திகழ்மார்பில் நல்ல
பன்றியின் கொம்பணிந்து பணைத்தோளியோர் பாகமாகக்
குன்றன மாளிகைசூழ் கொடிமாடச் செங்குன்றூர் வானில்
மின்றிகழ் செஞ்சடையான் கழலேத்தல் மெய்ப்பொருளே. 

ஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னி
தாங்கிய கங்கையொடு மதியஞ் சடைக்கணிந்து
கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள்தொழுவார் வினையாய பற்றறுமே. 

நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடைதாழ வெள்ளை
வாடலுடை தலையிற் பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க்
கோடல் வளம்புறவிற் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
சேடன தாள்தொழுவார் வினையாய தேயுமே.

மத்தநன் மாமலரும் மதியும்வளர் கொன்றையுடன் துன்று
தொத்தலர் செஞ்சடைமேல் துதைய வுடன்சூடிக்
கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
தத்துவனைத் தொழுவார் தடுமாற் றறுப்பாரே.

செம்பொனின் மேனியனாம் பிரமன்திரு மாலுந்தேட நின்ற
அம்பவ ளத்திரள்போல் ஒளியாய ஆதிபிரான்
கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
நம்பன தாள்தொழுவார் வினையாய நாசமே.

போதியர் பிண்டியரென் றிவர்கள் புறங்கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுரைகேட் டுழல்வீர் வரிக்குயில்கள்
கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
வேதியனைத் தொழநும் வினையான வீடுமே. 

அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார் புகலிந்நகர் பேணுந்
தலைமக னாகிநின்ற தமிழ்ஞான சம்பந்தன்
கொலைமலி மூவிலையான் கொடிமாடச் செங்குன்றூ ரேத்தும்
நலம்மலி பாடல்வல்லார் வினையான நாசமே. 


கொங்கு நாட்டில் உள்ள மற்ற சிவஸ்தலங்கள்
திருநணா ( பவானி ) கருவூர் (கரூர்) திருமுருகபூண்டி
திருப்பாண்டிக்கொடுமுடி அவினாசி (திருப்புக்கொளியூர்) வெஞ்சமாக்கூடல்

 


திருஞானசம்பந்தருக்காக நந்தி விலகிய தலங்கள் பட்டீஸ்வரம் மற்றும் திருப்பூந்துருத்தி ஆகும்.