சங்கமேஸ்வரர் கோவில், திருநணா ( பவானி )
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருநணா (பவானி) |
| இறைவன் பெயர் | சங்கமேஸ்வரர் |
| இறைவி பெயர் | வேதநாயகி, வேதாம்பிகை |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | பவானி சேலத்தில் இருந்து 56 Km தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 15 Km தொலைவிலும் உள்ளது. பேருந்து வசதிகள் சேலம், ஈரோட்டில் இருந்து பவானிக்கு உள்ளது. அருகில் உள்ள ரயில் நிலயம் ஈரோடு. |
கோவில் அமைப்பு: பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இரண்டு வாயில்கள். கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது.
வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து சென்றால் இந்தக் கோவிலின் மூலவரான சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இது ஒரு சுயம்பு லிங்கம். சுப்பிரமணியக் கடவுளாம் முருகனுக்கு அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிக்கு நடுவில் சந்நிதி அமந்திருப்பது இந்தக் கோவிலின் சிறப்பம்சம்.
அம்பிகை வேதநாயகியின் பெருமைக்கு வில்லியம் காரோ என்ற ஆங்கிலேயர் அளித்த தந்தக் கட்டில் ஒன்று சான்றாய்த் திகழ்கிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டுவந்த காலத்தில் வில்லியம் காரோ என்பவர்தான் பவானி பகுதிக்கு கலெக்டராக இருந்தார். அம்பிகை வேதநாயகியின் பெருமையையும் அழகையும் மக்கள் வியந்து பேசுவது கண்ட காரோ தாமும் அம்பிகையைக் காண விரும்பினார். இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்லலாம் என்பதால், மதில் சுவரில் சாளரம் பொன்று மூன்று துளைகளைச் செய்து காரோ அதன் மூலம் அம்பிகையைக் காண வழி செய்தனர். காரோவும் அம்பிகையை அச்சாளரத்தின் மூலம் தினந்தோறும் கண்டு வழிபட்டு வந்தார். அந்தத் துளைகள் இன்றுமுள்ளன. ஒருமுறை காரோ தனது இல்லத்தின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது அம்பிகை வேதநாயகியைப் போன்று வடிவுடைய பெண் ஒருத்தி அவரைத் தட்டி எழுப்பி கையைப் பற்றி விரைவாக வெளியே அழைத்துச் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டு திடுக்கிட்டு விழித்து எழுந்த காரோ பரபரப்புடன் மாடியிலிருந்து கீழே ஓடினார். அடுத்த நிமிடமே காரோ குடியிருந்த இல்லத்து மாடி இடிந்து கீழே விழுந்தது. தான் பிழைத்தது அம்பிகையின் அருள் என்று போற்றி, அம்பிகைக்கு தந்தத்தால் ஆன கட்டில் செய்து காணிக்கையாக அம்பிகைக்கு அளித்தார். அதில் தனது கையொப்பமும் இட்டார். இச்சம்பவம் நடந்தது 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும்.
இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். முருகன் சந்நிதிக்கு அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை ஜுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது. கோவிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்கள் திரு உருவங்கள் உள்ளன.
இலந்தை மரம் இக்கோவிலின் தலவிருட்சமாகும். வேதமே மரவடிவெடுத்து வந்திருப்பதாக ஐதீகம். இக்கோவிலில் உள்ள சனீஸ்வர பகவான் சந்நிதி மிகவும் பெயர் பெற்றது. இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று மக்கள் நம்புகின்றனர். மேலும் இக்கோவிலில் உள்ள அமுதலிங்கம் சிறப்புடையதாகும். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் எனபது மக்களின் நம்பிக்கையாகும்.
திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம்
பந்தார் விரல்மடவாள் பாகமா நாகம்பூண் டேற தேறி அந்தார் அரவணிந்த அம்மா னிடம்போலும் அந்தண் சாரல் வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டு பாடச் செந்தேன் தெளியொளிரத் தேமாக் கனியுதிர்க்குந் திருந ணாவே. நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான் மற்றொருகை வீணை யேந்தி ஈட்டுந் துயரறுக்கும் எம்மா னிடம்போலு மிலைசூழ் கானில் ஓட்டந் தருமருவி வீழும் விசைகாட்ட முந்தூ ழோசைச் சேட்டார் மணிகள் அணியுந் திரைசேர்க்குந் திருந ணாவே. நன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள் பாகமாய் ஞால மேத்த மின்றாங்கு செஞ்சடையெம் விகிதர்க் கிடம்போலும் விரைசூழ் வெற்பில் குன்றோங்கி வன்றிரைகள் மோத மயிலாலுஞ் சாரற் செவ்வி சென்றோங்கி வானவர்க ளேத்தி அடிபணியுந் திருந ணாவே. கையில் மழுவேந்திக் காலிற் சிலம்பணிந்து கரித்தோல் கொண்டு மெய்யில் முழுதணிந்த விகிர்தர்க் கிடம்போலு மிடைந்து வானோர் ஐய ரவரெம் பெருமா னருளென்றென் றாத ரிக்கச் செய்ய கமலம் பொழிதே னளித்தியலுந் திருந ணாவே. முத்தேர் நகையா ளிடமாகத் தம்மார்பில் வெண்ணூல் பூண்டு தொத்தேர் மலர்ச்சடையில் வைத்தா ரிடம்போலுஞ் சோலை சூழ்ந்த அத்தேன் அளியுண் களியா லிசைமுரல ஆலத் தும்பி தெத்தே யெனமுரலக் கேட்டார் வினைகெடுக்குந் திருந ணாவே. வில்லார் வரையாக மாநாகம் நாணாக வேடங் கொண்டு புல்லார் புரமூன் றெரித்தார்க் கிடம்போலும் புலியு மானும் அல்லாத சாதிகளு மங்கழல்மேற் கைகூப்ப அடியார் கூடிச் செல்லா வருநெறிக்கே செல்ல அருள்புரியுந் திருந ணாவே. கானார் களிற்றுரிவை மேல்மூடி ஆடரவொன் றரைமேற் சாத்தி ஊனார் தலையோட்டி லூணுகந்தான் றானுகந்த கோயி லெங்கும் நானா விதத்தால் விரதிகள்நன் னாமமே யேத்தி வாழ்த்தத் தேனார் மலர்கொண் டடியார் அடிவணங்குந் திருந ணாவே. மன்னீ ரிலங்கையர்தங் கோமான் வலிதொலைய விரலா லூன்றி முந்நீர்க் கடல்நஞ்சை யுண்டார்க் கிடம்போலும் முநனைசேர் சீயம் அன்னீர் மைகுன்றி அழலால் விழிகுறைய வழியு முன்றில் செந்நீர் பரப்பச் சிறந்து கரியொளிக்குந் திருந ணாவே. மையார் மணிமிடறன் மங்கையோர் பங்குடையான் மனைக டோ றும் கையார் பலியேற்ற கள்வன் இடம்போலுங் கழல்கள் நேடிப் பொய்யா மறையானும் பூமி யளந்தானும் போற்ற மன்னிச் செய்யார் எரியாம் உருவ முறவணங்குந் திருந ணாவே. ஆடை யொழித்தங் கமணே திரிந்துண்பார் அல்லல் பேசி மூடு உருவம் உகந்தார் உரையகற்றும் மூர்த்தி கோயில் ஓடு நதிசேரும் நித்திலமும் மொய்த்தகிலுங் கரையில் சாரச் சேடர் சிறந்தேத்தத் தோன்றி யொளிபெருகுந் திருந ணாவே. கல்வித் தகத்தால் திரைசூழ் கடற்காழிக் கவுணி சீரார் நல்வித் தகத்தால் இனிதுணரும் ஞானசம் பந்தன் எண்ணுஞ் சொல்வித் தகத்தால் இறைவன் திருநணா ஏத்து பாடல் வல்வித் தகத்தான் மொழிவார் பழியிலரிம் மண்ணின் மேலே.
| கொங்கு நாட்டில் உள்ள மற்ற சிவஸ்தலங்கள் | ||
|---|---|---|
| திருச்செங்கோடு | கருவூர் (கரூர்) | திருமுருகபூண்டி |
| திருப்பாண்டிக்கொடுமுடி | அவினாசி (திருப்புக்கொளியூர்) | வெஞ்சமாக்கூடல் |
தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களில் அமர்ந்த நிலையில் அம்பிகை கோவில் கொண்டுள்ள ஒரே திருத்தலம் திருமணஞ்சேரி ஆகும்