Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருச்செங்கோடு

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருச்செங்கோடு
இறைவன் பெயர்அர்த்தநாரீஸ்வரர், மாதொரு பாகர்
இறைவி பெயர்பாகம்பிரியாள்
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது ஈரோட்டில் இருந்து 18 கி.மி. தொலைவிலும், சேலத்தில் இருந்து 27 கி.மி. தொலைவிலும், திருச்செங்கோடு உள்ளது. பேருந்து வசதிகள் சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் இருந்து திருச்செங்கோட்டிற்கு இருக்கின்றன.
ஆலய முகவரி அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்
திருச்செங்கோடு
நாமக்கல் மாவட்டம்
PIN - 637211

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Tiruchengode route map

ஈரோடில் இருந்து திருச்செங்கோடு செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

கோவில் அமைப்பு: தேவாரப் பதிகங்களில் கொடிமாடச் செங்குன்றூர் என்று பாடப்பெற்ற சிவஸ்தலம் தற்போது திருச்செங்கொடு என்று கூறப்படுகிறது. இந்த சிவஸ்தலத்தில் உள்ள கோவில் மேற்கு நோக்கி ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இந்த மலை செந்நிறமாக இருப்பதால், செங்கோடு என்ற பெயர் ஏற்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1900 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்குச் செல்ல சுமார் 1250 படிக்கட்டுக்கள் கொண்ட வழியில் ஏறியும் அல்லது மலைப்பாதை வழியாக பேருந்து மற்றும் கார் மூலம் செல்லலாம். மேலே செல்லும் வழியில் பல மண்டபங்கள் உள்ளன. குன்றின் உச்சிக்குக் சென்றவுடன் வடதிசையில் 5 நிலை ராஜ கோபுரம் நம்மை வரவேற்கிறது. கோவிலின் மதில் சுவர் கிழக்கு மேற்காக 260 அடி நீளமும், வடக்கு தெற்காக 170 அடி நீளமும் கொண்டதாக அமைந்துள்ளது. மேற்கு கோபுரம் 3 நிலைகளுடன் காட்சி அளிக்கிறது. வடக்கு கோபுர வாயில் வழியாக நுழைந்து 20 படிகள் கீழிறங்கி வெளிப் பிரகாரத்தை அடையலாம். இத்தலத்தில் இறைவி தவம் செய்து இறைவனது திருமேனியில் ஒரு பகுதியைத் தம்முடையதாகப் பெற்றார் என்று புராணம் கூறும். திருச்செங்கொடு மலை அடிவாரத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது

அர்த்தநாரீஸ்வரர், மாதொரு பாகர் என்று அழைக்கப்படும் மூலவர் சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். தலையில் ஜடாமகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடப்புறம் சேலையும் அணிவிப்பர். மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கும். அப்போது அர்த்தநாரீஸ்வரருக்கு அர்ச்சகர்கள் தாலி அணிவிப்பர். அம்பிகை தனியே இல்லாததால் இவ்வாறு செய்கிறார்கள்.

இந்தக் கோவிலில் வடக்குப் பிரகாரத்திலுள்ள கிழக்கு நோக்கி உள்ள செங்கோட்டு வேலவர் சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. தினமும் உச்சிக்காலத்தில் மட்டும் இவருக்கு அபிஷேகத்துடன் முதல் பூஜை நடக்கிறது. அருணகிரிநாதர் தனது "திருப்புகழில்" இத்தலத்து முருகனைப் பற்றி பாடியுள்ளார். செங்கோட்டு வேலவர் சந்நிதிக்கு முன்புள்ள மண்டபத்திலுள்ள தூண்களில் காணப்படும் சிற்பங்கள் மிகுந்த கலை நுணுக்கத்துடன் சிற்ப வேலைப்பட்டிற்கு ஒரு சான்றாகக் காட்சி அளிக்கின்றன.

சிவனின் இடப்பாகம் பெற அம்பாள் பூஜித்த லிங்கம், மூலஸ்தானத்திற்குள் உள்ளது. காலை, மதியம், மாலையில் நடக்கும் பூஜையின்போது மட்டும் இந்த லிங்கத்தை அர்த்தநாரீஸ்வரர் அருகில் வைத்து பூஜிப்பர். இந்த பூஜைகளை அம்பிகையே செய்வதாக ஐதீகம். உச்சிக்காலத்தில் இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கும்.

படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. நாக தோஷங்கள் நீங்குவதற்காக இங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். ஆதிசேஷன், மஹாவிஷ்னு ஆகியோர் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர். ஆதிகேசவப் பெருமாள் என்ற பெயரில் மஹாவிஷ்னு தனிக்கோயிலில் காட்சி தருகிறார். வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது இவருக்கு தனியே கொடியேற்றி 10ம் நாளில் திருக்கல்யாணமும், பின் தேரோட்டமும் நடக்கும். சிவராத்திரியன்று இரவில் இவருக்கு 4 கால பூஜை நடப்பது விசேஷம். ஏகாதசி நாட்களில் கருடசேவை சாதிப்பார்.

அர்த்தநாரீஸ்வரர் சதயம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக இருப்பதால், இந்நாளில் சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க இவரை வணங்கி வரலாம்.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், தமிழக சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு சிறந்த உறைவிடமாகும். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் குதிரை அல்லது யாளிமீது உள்ள வீரர்களைத் தாங்கிய சுமார் 30 ஒற்றைக் கற்றூண்கள் சிற்ப வேலைப்பாடுமிக்கவை. செங்கோட்டு வேலவர் சந்நிதி முன்னுள்ள மண்டபத்தில் வீரபத்திரர், மன்மதன், ரதி, காளி முதலிய ஒற்றைக் கல்லினாலான சிற்பங்கள் உள்ளன. இம்மண்டபத்தின் கூரைப் பகுதியில் கல்லினாலான கவிழ்ந்த தாமரை மலர், கிளிகள், கல்சங்கிலிகள் ஆகிய சிற்ப விநோதங்கள் உள்ளன.

நாகேஸ்வரரின் கருவறை, சிற்ப வேலைப்பாடுமிக்கது. கருவறை முன்மண்டபத்தில் குதிரை அல்லது யாளி மீதுள்ள வீரர்களின் கற்றூண் சிற்பங்கள் உள்ளன. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சிற்பங்கள் முன்னோர் நமக்கு விட்டுச் சென்றுள்ள கலைச்செல்வங்கள் ஆகும்.

திருச்செங்கோடு ஆலயம் புகைப்படங்கள்

Tiruchengode temple photo Tiruchengode temple photo Tiruchengode temple photo Tiruchengode temple photo Tiruchengode temple photo Tiruchengode temple photo

திருச்செங்கோடு ஆலயம் புகைப்படங்கள்

Tiruchengode temple photo Tiruchengode temple photo Tiruchengode temple photo Tiruchengode temple photo
கொங்கு நாட்டில் உள்ள மற்ற சிவஸ்தலங்கள்
திருநணா (பவானி)
கருவூர் (கரூர்)
திருமுருகபூண்டி
திருப்பாண்டிக்கொடுமுடி
அவினாசி (திருப்புக்கொளியூர்)
வெஞ்சமாக்கூடல்

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள இப்பதிகம் 1-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. வெந்த வெண்ணீறு அணிந்து விரிநூல் 
திகழ்மார்பில் நல்ல பந்து அணவும் விரலாள் 
ஒருபாகம் அமர்ந்து அருளிக் கொந்து அணவும் 
பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.

2. அலை மலி தண்புனலோடு அரவமு சடைக்கு 
அணிந்து ஆகம் மலைமகள் கூறு உடையான் 
மலையார் இளவாழைக் குலை மலி தண்பொழில் 
சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
தலை மகனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.

3. பால் அன நீறுபுனை திருமார்பில் 
பல்வளைக்கை நல்ல ஏல மலர்க்குழலாள் 
ஒருபாகம் அமர்ந்து அருளிக் கோல மலர்ப்பொழில் 
சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்
நீல நல்மாமிடற்றான் கழல் ஏத்தல் நீதியே. 

4. வார் உறு கொங்கை நல்ல மடவாள் திகழ் 
மார்பில் நண்ணும் கார் உறு கொன்றையொடும் 
கதநாகம் பூண்டு அருளிச் சீர் உறும் அந்தணர் 
வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
நீரி உறு செஞ்சடையான் கழல் ஏத்தல் நீதியே. 

5. பொன் திகழ் ஆமையொடு புரிநூல் திகழ் 
மார்பில் நல்ல பன்றியின் கொம்பு அணிந்து 
பணைத்தோளியோர் பாகமாகக் குன்றன 
மாளிகை சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வானில் மின் 
திகழ் செஞ்சடையான் கழல் ஏத்தல் மெய்ப்பொருளே. 

6. ஓங்கிய மூவிலை நல் சூலம் ஒரு கையன் 
சென்னி தாங்கிய கங்கையொடு மதியம் 
சடைக்கு அணிந்து கோங்கு அணவும் பொழில் சூழ் 
கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த பாங்கன 
தாள் தொழுவார் வினையாய பற்று அறுமே. 

7. நீடு அல்ர் கொன்றையொடு நிமிர்புன்சடை 
தாழ வெள்ளை வாடல் இடை தலையில் 
பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க் கோடல் வளம் 
புறவில் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
சேடன தாள் தொழுவார் வினையாய தேயுமே.

8. மத்தநல் மாமலரும் மதியும்வளர் கொன்றையுடன் 
துன்று தொத்து அலர் செஞ்சடைமேல் துதைய 
உடன்சூடிக் கொத்து அலர் தண்பொழில் சூழ் 
கொடிமாடச் செங்குன்றூர் மேய தத்துவனைத் 
தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.

9. செம்பொனின் மேனியனாம் பிரமன் திருமாலும் 
தேட நின்ற அம் பவளத்திரள் போல் ஒளியாய 
ஆதிபிரான் கொம்பு அணவும் பொழில் சூழ் 
கொடிமாடச் செங்குன்றூர் மேய நம்பன தாள் 
தொழுவார் வினையாய நாசமே.

10. போதியர் பிண்டியர் என்று இவர்கள் புறங்கூறும் 
பொய்ந்நூல் ஓதிய கட்டுரை கேட்டு உழல்வீர் 
வரிக்குயில்கள் கோதிய தண்பொழில் சூழ்  
கொடிமாடச் செங்குன்றூர் நின்ற வேதியனைத் 
தொழநும் வினையான வீடுமே. 

11. அலைமலி தண்புனல் சூழ்ந்து அழகு ஆர் 
புகலிந்நகர் பேணும் தலைமகன் ஆகி நின்ற தமிழ் 
ஞானசம்பந்தன் கொலைமலி மூவிலையான் 
கொடிமாடச் செங்குன்றூர் ஏத்தும் நலம்மலி 
பாடல் வல்லார் வினையான நாசமே.