Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

விகிர்த நாதேஸ்வரர் கோவில், வெஞ்சமாக்கூடல்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்வெஞ்சமாக்கூடல்
இறைவன் பெயர்விகிர்த நாதேஸ்வரர்
இறைவி பெயர்விகிர்தேஸ்வரி
பதிகம்சுந்தரர் - 1
எப்படிப் போவது கரூரில் இருந்து அரவங்குறிச்சி செல்லும் சாலையில் சுமார் 14 கி.மி. தென்மேற்கே பயணம் செய்தால் ஆறு ரோடு பிரிவு என்ற இடம் வரும். அங்கிருந்து பிரியும் ஒரு கிளைச் சாலயில் சுமார் 8 கி.மி. சென்றால் இந்த சிவஸ்தலத்தை அடையலாம்.
ஆலய முகவரி அருள்மிகு
விகிர்த நாதேஸ்வரர் திருக்கோவில்
வெஞ்சமாக்கூடல் அஞ்சல்
வழி மூலப்பாடி
அரவக்குறிச்சி வட்டம்
கரூர் மாவட்டம்
PIN - 639109

கோவில் விபரங்கள்: குடகனாற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள இந்த சிவஸ்தலம் கோவில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. குடகனாறுடன் ஒரு சிற்றாறு கலக்குமிடமான கூடுதுறையில் இருப்பதாலும் வெஞ்சன் என்ற அசுரன் வழிபட்டதாலும் இத்தலம் வெஞ்சமாக்கூடல் என்று பெயர் பெற்றது. ஐந்து நிலை கோபுரமும் பெரிய பிரகாரமும் உடைய இக்கோவிலில் உள்ள இறைவன் விகிர்த நாதேஸ்வரர் என்றும், இறைவி விகிர்த நாதேஸ்வரி என்றும் அறியப்படுகிறார்கள். மூலஸ்தானத்தில் உள்ள பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் 5 அடி உயரமும், அம்பாளின் உருவச் சிலை 2.5 அடி உயரமும் உள்ளது. இறைவன் விகிர்த நாதேஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். தேவர்களின் அரசனாகிய இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொள்வதற்காக இங்கு வந்து இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான் என்பது ஐதீகம். சுந்தரர் பாடலுக்கு மகிழ்ந்து சிவபெருமான் ஒரு கிழவராக வந்து தன் இரு குமாரர்களை தம் பக்தையான ஒரு மூதாட்டியிடம் ஈடு காட்டிப் பொன் பெற்று சுந்தரருக்கு பரிசு வழங்கினார் என்று இத்தலத்து வரலாறு கூறுகிறது. இக்கோவிலின் வெளிச்சுற்றுச் சுவரில் காமதேனு லிங்கத்திற்கு பால் சொரிவது போன்ற சின்னங்கள் நிறைய காணப்படுகின்றன. பாண்டியர் காலத்து கல்வெட்டுகளில் இருந்து பாண்டிய மன்னர்கள் இக்கோவிலுக்குச் செய்த தானங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடன் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் மயில் மீது கால் வைத்தமர்ந்து கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அருணகிரிநாதரின் திருப்புகழில் ஒரு பாடல் இத்தலத்திற்குரியது.

சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. எறிக்கும் கதிர் வேய் உதிர் முத்தம்மோடு
ஏலம்இலவங்கம் தக்கோலம் இஞ்சி
செறிக்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டித்
திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரைமேல்
முறிக்கும் தழைமா முடப்புன்னை ஞாழல்
குருக்கத்திகள் மேற்குயில் கூவல் அறா
வெறிக்கும் கலைமா வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

2. குளங்கள் பலவும் குழியும் நிறையக்
குடமாமணி சந்தனமும் அகிலும்
துளங்கும் புனலுற் பெய்துகொண்டு மண்டித்
திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரைமேல்
வளம் கொள் மதில் மாளிகை கோபுரமும்
மணி மண்டபமும் இவை மஞ்சுதன்னுள்
விளங்கும் மதி தோய் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

3. வரை மான் அனையார் மயில்சாயல் நல்லார்
வடிவேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சத்
திரையார் புனலுள் பெய்துகொண்டு மண்டித்
திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரைமேல்
நிரையார் கமுகும் நெடுந்தாள் தெங்கும்
குறுந்தாள் பலவும் விரவிக் குளிரும்
விரையார் பொழில் சூழ் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

4. பண் நேர் மொழியாளை ஓர் பங்கு உடையாய்
படு காட்டு அகத்து என்றும் ஓர் பற்று ஒழியாய்
தண்ணால் அகிலும் நல சாமரையும்
அலைத்து எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரைமேல்
மண்ணார் முழவும் குழலும் இயம்ப
மடவார் நடமாடு மணி அரங்கில்
விண்ணார் மதிதோய் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

5. துளை வெண்குழையும் சுருள்வெண்தோடும்
தூங்கும் காதில் துளங்கும் படியாய்
களையே கமழும் மலர்க் கொன்றையினாய்
கலந்தார்க்கு அருள் செய்திடும் கற்பகமே
பிளை வெண்பிறையாய் பிறங்கும் சடையாய்
பிறவாதவனே பெறுதற்கு அரியாய்
வெளை மால் விடையாய் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

6. தொழுவார்க்கு எளியாய் துயர் தீர நின்றாய்
சுரும்பார் மலர்க்கொன்றை துன்றும் சடையாய்
உழுவார்க்கு அரிய விடையேறி ஒன்னார்
புரம் தீ எழ ஓடுவித்தாய் அழகார்
முழவார் ஒலி பாடலோடு ஆடல் அறா
முதுகாடு அரங்கா நடம் ஆட வல்லாய்
விழவார் மறுகின் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

7. கடமா களியானை உரித்தவனே
கரிகாடு இடமா அனல்வீசி நின்று
நடமாட வல்லாய் நரையேறு உகந்தாய்
நல்லாய் நறுங்கொன்றை நயந்தவனே
படமாயிரமாம் பருத்துத்திப் பைங்கண்
பகுவாய் எயிற்றோடு அழலே உமிழும்
விடவார் அரவா வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

8. காடும் மலையுந் நாடுமு இடறிக்
கதிர் மாமணி சந்தனமும் அகிலும்
சேடன் உறையும் இடம் தான் விரும்பி
திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரைமேல்
பாடல் முழவும் குழலும் இயம்பப்
பணைத்தோளியர் பாடலொடு ஆடல் அறா
வேடர் விரும்பும் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

9. கொங்கார் மலர்க்கொன்றை அந்தாரவனே
கொடுகொட்டி ஓர் வீணை உடையவனே
பொங்கு ஆடு அரவும் புனலும் சடைமேல்
பொதியும் புனிதா புனம் சூழ்ந்து அழகார்
துங்கார் புனலுள் பெய்துகொண்டு மண்டித்
திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரைமேல்
வெங்கார் வயல்சூழ் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

10. வஞ்சிநுண் இடையார் மயில்சாயல் அன்னார்
வடிவேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும்
வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும்
வேண்டுதியே என்று தான் விரும்பி
வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர்கோன்
வனப்பகை அப்பன் வன்தோண்டன் சொன்ன
செஞ்சொல் தமிழ் மாலைகள் பத்தும் வல்லார்
சிவலோகத்து இருப்பது திண்ணம் அன்றே.
கொங்கு நாட்டில் உள்ள மற்ற சிவஸ்தலங்கள்
திருநணா (பவானி) திருச்செங்கோடு கருவூர் (கரூர்)
திருமுருகபூண்டி திருப்பாண்டிக்கொடுமுடி திருப்புக்கொளியூர் (அவிநாசி)