Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

தீர்த்தபுரீஸ்வரர் கோவில், திருநெல்வாயில் அரத்துறை

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருநெல்வாயில் அரத்துறை (இன்றைய நாளில் திருவட்டுறை, திருவட்டத்துறை என்ற் பெயர்களில் வழங்குகிறது)
இறைவன் பெயர்தீர்த்தபுரீஸ்வரர், அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர்
இறைவி பெயர்ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர் - 1
எப்படிப் போவது தொழுதூர் - விருத்தாசலம் சாலையில் தொழுதூரிலிருந்து 20 கி.மி. தொலைவில் கொடிகளம் என்ற இடத்தில் பிரியும் மண் சாலையில் ஒரு கி.மி. சென்று இத்தலத்தை அடையலாம். மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான பெண்ணாகடத்தில் இருந்து தென்மேற்கே சுமார் 6 கி.மி. தொலைவில் திருநெல்வாயில் அரத்துறை தலம் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் (அரத்துறைநாதர்) திருக்கோவில்
திருவட்டுறை அஞ்சல்
திட்டக்குடி வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN - 606111

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்

தலப் பெருமை: இத்தலம் திருவரத்துறை என்றும் வழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தருக்கு அரத்துறைநாதர் முத்துச் சிவிகையும், முத்துக்குடையும், முத்துச் சின்னங்களையும் வழங்கி அருளிய தலம் இதுவாகும். திருஞானசம்பந்தர் சீர்காழியில் உமையம்மை கையால் ஞானப்பால் பெற்று பதிகம் பாடி சைவ சமயத்தை சிறப்பிக்க சிவபெருமான் குடி கொண்டிருக்கும் தலங்களுக்கெல்லாம் திருயாத்திரை தொடங்கினார். சம்பந்தர் சிறு பாலகனாக இருந்ததால் அவருடைய தந்தையார் சம்பந்தரைத் தூக்கிக் கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது. திருதூங்காணைமாடம் சிவஸ்தலத்தை தரிசித்து திருநெல்வாயில் அரத்துறை நோக்கி செல்லும் போது தந்தை தோள்மீது எழுந்தருள்வதை விட்டு நடந்தே சென்றார். சம்பந்தர் தன் சிற்றடிகள் நோக நடந்து செல்வதைக் கண்டு யாவரும் வருந்தினர். அன்றிரவு திருநெல்வாயிலிலுள்ள அடியார்கள், மற்றும் கோவில் பணியாளர்கள் கனவில் இறைவன் தோன்றி சம்பந்தர் கால்கள் நோகாமல் இருக்க தான் முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் அளிப்பதாகவும் அவற்றை சம்பந்தரிடம் சேர்த்து அவரை ஆலயத்திற்கு அழைத்து வரும்படியும் ஆணையிட்டார். இதே போன்று சம்பந்தர் கனவிலும் தோன்றி இவ்விபரங்களைக் கூறி முத்துச் சிவிகையில் ஏறிக்கொண்டு தன்னை தரிசிக்க வருபடியும் ஆணையிட்டர். மறுநாள் காலை திருநெல்வாயில் அரத்துறை அடியார்கள், கோவில் பணியாளர்கள் ஆலயத்தை திறந்து பார்க்க அங்கு முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் ஆகியவை இருக்கக் கண்டு இறைவனை கைகளைக் கூப்பி வணங்கினர். பின்னர் அவற்றை எடுத்துக் கொண்டு சென்று சம்பந்தரிடம் கொடுத்து, அவரை முத்துச் சிவிகையில் உட்கார வைத்து, முத்துக்குடை நிழலில் அரத்துறைநாதர் ஆலயம் அழைத்து வந்தனர். சம்பந்தரும் ஆலயம் வந்து இறைவனைத் தொழுது பதிகம் பாடி வணங்கினார்.

தீர்த்தபுரீஸ்வரர் ஆலயம் கிழக்கு நோக்கிய முகப்பு வாயிலுடன் அமைந்துள்ளது. முகப்பு வாயில் கடந்து உட்சென்றால் வெளிப் பிரகாரத்தில் விநாயகர், சமயக்குரவர்கள் நால்வர், வான்மீகிமுனிவர், சப்த கன்னியர்கள், பூத, பவிஷ்ய, வர்த்தமான லிங்கங்கள், மகாவிஷ்ணு, ஜோதிலிங்கம் முதலிய சந்நிதிகள் உள்ளன. அடுத்து அண்ணாமலை, ஆதிசேஷன், வள்ளி தெய்வயானை சமேத முருகன், தண்டாயுதபாணி சந்நிதிகளையும், சேர சோழ பாண்டிய மன்னர்கள் பெயரில் உள்ள இலிங்க மூர்த்திகளையும் தரிசிக்கலாம். காசி விசுவநாதரும் விசாலாட்சியுடன் காட்சி தருகிறார். கஜலட்சுமி, சந்தான குரவர்கள், பைரவர், சூரியசந்திரர் சந்நிதிகளும் அடுத்துள்ளன.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கிய சந்நிதியில் அருள்பாலிக்கிறார். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் உள்ளனர். நடராசர் சிவகாமி தரிசனம், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், சண்டேஸ்வரர், பைரவர் ஆகியோரின் மூர்த்தங்களைத் தரிசித்தபின் உள்ளே சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம். உள் சுற்றில் இடதுபுறம் நவக்கிரக சந்நிதி, சனிபகவானுக்குச் சந்நிதி உள்ளது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித்தனியே கொடிமரமும் பலிபீடமும் நந்தியும் உள்ளன.

வெள்ளாறு நதியில் வெள்ளப்பெருக்கெடுத்த போது அதனால் சேதம் உண்டாகாதிருக்க நந்தி தலையை திருப்பி பார்க்க வெள்ளம் வடிந்தது என்றும், இதனால் இத்தலத்தில் நந்தியின் தலை சற்று திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. மகாவிஷ்ணு, ஆதிசேஷன், சனி, செவ்வாய், வால்மிகி முனிவர், சனகர், சேர, சோழ, பாண்டியர்கள் ஆகியோர் வழிபட்டதலம். வெள்ளாற்றின் கரையிலுள்ள புண்ணியத்துறைகளில் இத்தலமும் ஒன்றாகும். மக்களின் பாவங்களை நீக்க இறைவன் இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது.

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப்பெற்ற சிவஸதலங்களில் இத்தலமும் ஒன்றாகும்.