Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

சுடர்கொழுந்தீசர் கோவில், தூங்கானை மாடம் (பெண்ணாகடம்)

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்தூங்கானை மாடம் (பெண்ணாகடம்)
இறைவன் பெயர்சுடர்கொழுந்தீசர், கடந்தை நாதர், புஷ்பவனேஸ்வரர்
இறைவி பெயர்கடந்தை நாயகி, ஆமோதனாம்பிகை
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது தேவாரப் பாடல்களில் தூங்கானை மாடம் என்று குறிப்பிடப்பட்டுள்ள சிவஸ்தலம் தற்போது பெண்ணாகடம் அல்லது பெண்ணாடம் என்று வழங்கப்படுகிறது. விருத்தாசலம் நகரில் இருந்து தென்மேற்கே 18 Km தொலைவில் பெண்ணாடம் இருக்கிறது. சென்னையில் இருந்து பெண்ணாடம் சுமார் 235 Km தொலைவில் இருக்கிறது.
ஆலய முகவரி அருள்மிகு
சுடர்கொழுந்தீசர் திருக்கோவில்
பெண்ணாடம் அஞ்சல்
திட்டக்குடி வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN - 606105

தேவகன்னியர், தெய்வலோகப் பசுவான காமதேனு, வெள்ளை யானை இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் பெண்ணாகடம் (பெண் + ஆ + கடம்) என்று வழங்குகிறது. ஆலயத்திற்கு தூங்கானை மாடம் என்று பெயர்.

திருநாவுக்கரசர் தூங்கானைமாடம் தலத்திற்கு வந்தபோது தான் சமணநெறியில் ஈடுபட்டு சிலகாலம் இருந்ததை நினைத்து வருந்தினார். சமணர் குழுவிலே, சமண நெறியிலே வாழ்ந்துவந்த இந்த மெய்யுடம்புடன் வாழ விரும்பவில்ல என்றும் சிவபெருமானுடைய அடையாளங்களை என் உடம்பிலே இட்டால் நான் வாழ்வேன் என்றும் வேண்டிக்கொண்டு திருப்பதிகம் ஒன்று பாடினார்.

பொன்னார் திருவடிக் கொன்றுண்டு 
விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண் 
டேலிருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென் 
மேற்பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை 
மாடச் சுடர்க்கொழுந்தே.
 
ஆவா சிறுதொண்ட னென்நினைந் 
தானென் றரும்பிணிநோய்
காவா தொழியிற் கலக்குமுன் 
மேற்பழி காதல்செய்வார்
தேவா திருவடி நீறென்னைப் 
பூசுசெந் தாமரையின்
பூவார் கடந்தையுள் தூங்கானை 
மாடத்தெம் புண்ணியனே.  
 
இப்பதிகத்தில் 3,4,5,6,7,8,9-ம் பாடல்கள் சிதைந்து போயின.  
 
கடவுந் திகிரி கடவா 
தொழியக் கயிலையுற்றான்
படவுந் திருவிர லொன்றுவைத் 
தாய்பனி மால்வரைபோல்
இடபம் பொறித்தென்னை ஏன்றுகொள் 
ளாயிருஞ் சோலைதிங்கள்
தடவுங் கடந்தையுள் தூங்கானை 
மாடத்தெந் தத்துவனே.  

என்ற பதிகம் பாடி முடித்தவுடன் ஒருவரும் அறியாமல் ஒரு பூதம் வந்து திருநாவுக்கரசர் திருத்தோளிலே பூவிலைச்சூலப் பொறியும், இடபப்பொறியும் ஆகிய சிவச்சின்னங்களை இட்டது. அவற்றைக் கண்டு அப்பர் பெருமகிழ்வுடன் இறைவனை விழுந்து பணிந்தார். திருநாவுக்கரசர் வாழ்க்கையில் இத்தகைய அற்புதம் நிகழ்ந்த தலம் தூங்கானைமாடம்.