Shiva Temples of Tamilnadu
தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
நர்த்தன வல்லபேஸ்வரர் கோவில், திருக்கூடலையாற்றூர்
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருக்கூடலையாற்றூர் |
| இறைவன் பெயர் | நர்த்தன வல்லபேஸ்வரர், நெறிகாட்டுநாயகர் |
| இறைவி பெயர் | பராசக்தி, ஞானசக்தி |
| பதிகம் | சுந்தரர் - 1 |
| எப்படிப் போவது | வெள்ளாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய இரண்டு நதிகள் கூடும் இடத்தில் திருக்கூடலையாற்றூர் சிவஸ்தலம் அமைந்திருக்கிறது. இத்தலத்திற்குச் செல்ல விருத்தாசலத்தில் இருந்து புவனகிரி செல்லும் பாதையில் சென்று வளயமாடதேவி என்னும் இடத்தில் இறங்கிச் செல்ல வேண்டும். விருத்தாசலத்தில் இருந்து சுமார் 23 கி.மி. தொலைவில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து காவாலக்குடி செல்லும் பேருந்தில் சென்று அதை அடுத்துள்ள இத்தலத்தை அடையலாம். சிதம்பரத்திலிருந்து இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் உள்ளது. சிதம்பரம் - காவாலகுடி நகரப் பேருந்து உள்ளது. கும்பகோணம் - சேத்தியாதோப்பு சாலையில் குமாரகுடி என்ற இடத்தை அடைந்து, அங்கிருந்து ஸ்ரீ முஷ்ணம் போகும் பாதையில் பிரிந்து 2 கி.மீ. சென்று, பின் காவாலகுடி செல்லும் சாலையில் திரும்பி, 2 கி.மீ. சென்று காவாலகுடியை அடைந்து, அடுத்துள்ள கூடலையாற்றூரை அடையலாம். கோயில் வரை வாகனங்கள், பேருந்து செல்லும். |
| ஆலய முகவரி |
அருள்மிகு நர்த்தன வல்லபேஸ்வரர் திருக்கோவில் திருக்கூடலையாற்றூர் காவலாகுடி அஞ்சல் காட்டுமன்னார் கோவில் வட்டம் கடலூர் மாவட்டம் PIN - 608702 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
![]() Map courtesy by: Yahoo Maps | |
கோவில் அமைப்பு: இவ்வாலயத்தின் பழமையான ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. கோபுர வாயலி வழியே உள்ளே நுழைந்தால் நந்திதேவர் மட்டும் காணப்படுகிறார். கொடிமரம் பலிபீடம் இல்லை. வெளிச் சுற்றில் பக்கவாயில் உள்ளது. அமுத விநாயகர், விசுவநாத லிங்கம், ஆறுமுகர், ஞானசக்தி அம்பாள் முதலிய சந்நிதிகள் உள்ளன. அம்பாள் நின்ற திருக்கோலம். இத்தேவி மிகவும் சக்திவாய்ந்த அம்மை என்று மக்கள் போற்றி வழிபடுகின்றனர். மூலவர் விமானம் இரு தள அமைப்புடையது. படிகளேறி மேலே சென்றால் அழகிய மண்டபம் உள்ளது. துவார கணபதியை வணங்கி உட்சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம். கம்பீரமான சிவலிங்க திருமேனி. கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரமன், அஷ்டபுஜ துர்க்கை முதலியவைகள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதி எதிரில் உள்ளது. சுவாமிக்கு வலதுபுறம் பராசக்தி அம்பாள் சந்நிதி உள்ளது. இதுவும் நின்ற திருக்கோலமே. நடராச சபையில் சிவகாமி மூர்த்தமும் உள்ளது. சித்திரை மாதம் முதல் மூன்று தேதியில் மூலவரின் மீது சூரிய ஒளிபட்டு சூரியபூஜை நடக்கிறது.
எமதர்மராஜாவின் உதவியாளரான சித்திரகுப்தருக்கு சன்னதி இருப்பது ஒரு சில கோயில்களில் மட்டுமே. அந்த சிறப்பையும் இக்கோயில் பெற்றுள்ளது. இங்குள்ள சித்ரகுப்தர் உற்சவ மூர்த்தியாக ஒரு கையில் எழுத்தாணியுடன் மறுகையில் ஏடும் கொண்டு காட்சி தருகிறார். இக்கோயிலில் நவக்கிரக சந்நிதியில்லை. மூலவரைத் தரிசித்து விட்டு வரும்போது வலதுபுறம் சனிபகவான் சந்நிதி மட்டும் உள்ளது. பொதுவாக சிவன் கோயில்களில் சிவனுடன் ஒரு அம்மன் சன்னதி இருப்பது வழக்கம். ஆனால் திருக்கூடலையாற்றூரில் உள்ள நர்த்தன வல்லபேஸ்வரர் கோயிலில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன. ஞானசக்தி, பராசக்தி என்ற பெயர்களில் இரண்டு அம்மன் அருள்பாலிக்கிறாள். ஞானசக்தி சந்நிதிதியில் குங்குமமும், பராசக்தி சந்நிதியில் விபூதியும் பிரசாதமாக தரப்படுகிறது. இவர்களை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு விருத்தியாகும். ஆற்றல் பெருகும் என்பது நம்பிக்கை.
தலப்பெருமை: மகரிஷி அகத்தியர் இத்தலத்தில் தான் கற்ற வித்தைகள் மறக்காமல் இருக்க இறைவனை பிரார்த்தித்தார். எனவே, இங்கு குழந்தைகளை அழைத்து வந்து, படித்த பாடங்கள் மறக்காமல் இருக்க இறைவனை வேண்டிக் கொள்கின்றனர். மேலும் பிரம்மாவும் சரஸ்வதியும் விஜயம் செய்த தலம் இது. எனவே கல்விக்கு தொடர்பான பிரார்த்தனைகளைச் செய்ய ஏற்ற தலமாக இதைக் கருதுகின்றனர். பிரம்மாவும், சரஸ்வதியும் இங்கு தவம் புரிந்து சிவனின் நர்த்தனம் கண்டார். எனவேதான் இத்தல இறைவன் நர்த்தன வல்லபேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் நவக்கிரகத்திற்கு சந்நிதி கிடையாது. தனி சந்நிதியில் பொங்கு சனீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
சுந்தரர் திருமுதுகுன்றம் தலத்தை தரிசிக்க சென்றபோது, இத்தலத்தை வணங்காமல் சென்றார். இறைவன் அந்தணராக வந்து சுந்தரர் முன்செல்ல, சுந்தரர் அவரைத் திருமுதுகுன்றத்திற்கு வழி யாதெனக் கேட்டார். அந்தணராக வந்த இறைவனோ கூடலையாற்றுருக்கு வழி இது என்று கூறி மறைய, திடுக்கிட்ட சுந்தரர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டார் என்பது வரலாறு. சுந்தரமூர்த்தி நாயனார் வந்த அந்தணர் சிவபெருமானே என்று அறிந்து இறைவன் திருவருளை வியந்து பாடியருளிய இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் கூடலையாற்றூர் இறைவன் தன் முன் வந்த அதிசயத்தை தான் அறிந்து கொள்ளாமல் போனதை குறிப்பிடுகிறார். தனது பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர்களது வினை, பற்றறக் கெடுதல் திண்ணம் என்று கடைசி பாடலில் குறிப்பிடுகிறார்.
1. வடிவுடை மழுவேந்தி மதகரி உரிபோர்த்துப் பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடுங் கொடியணி நெடுமாடக் கூடலை யாற்றூரில் அடிகளிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 2. வையகம் முழுதுண்ட மாலொடு நான்முகனும் பையர விளவல்குற் பாவையொ டும்முடனே கொய்யணி மலர்ச்சோலைக் கூடலை யாற்றூரில் ஐயனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 3. ஊர்தொறும் வெண்டலைகொண் டுண்பலி இடுமென்று வார்தரு மென்முலையாள் மங்கையொ டும்முடனே கூர்நுனை மழுவேந்திக் கூடலை யாற்றூரில் ஆர்வனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 4. சந்தண வும்புனலுந் தாங்கிய தாழ்சடையன் பந்தண வும்விரலாள் பாவையொ டும்முடனே கொந்தண வும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில் அந்தணன் வழிபோந்த அதிசயம் அறியேனே. 5. வேதியர் விண்ணவரும் மண்ணவ ருந்தொழநற் சோதிய துருவாகிச் சுரிகுழல் உமையோடுங் கோதிய வண்டறையுங் கூடலை யாற்றூரில் ஆதியிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 6. வித்தக வீணையொடும் வெண்புரி நூல்பூண்டு முத்தன வெண்முறுவல் மங்கையொ டும்முடனே கொத்தல ரும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில் அத்தனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 7. மழைநுழை மதியமொடு வாளர வஞ்சடைமேல் இழைநுழை துகிலல்குல் ஏந்திழை யாளோடுங் குழையணி திகழ்சோலைக் கூடலை யாற்றூரில் அழகனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 8. மறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனும் பிறைநுதல் மங்கையொடும் பேய்க்கண முஞ்சூழக் குறள்படை யதனோடுங் கூடலை யாற்றூரில் அறவனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 9. வேலையின் நஞ்சுண்டு விடையது தானேறிப் பாலன மென்மொழியாள் பாவையொ டும்முடனே கோலம துருவாகிக் கூடலை யாற்றூரில் ஆலனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 10. கூடலை யாற்றூரிற் கொடியிடை யவளோடும் ஆடலு கந்தானை அதிசயம் இதுவென்று நாடிய இன்றமிழால் நாவல வூரன்சொற் பாடல்கள் பத்தும்வல்லார் தம்வினை பற்றறுமே.

