Shiva Temples of Tamilnadu
தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
அதிகை வீரட்டேஸ்வரர் கோவில், திருவதிகை
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருவதிகை |
| இறைவன் பெயர் | அதிகை வீரட்டேஸ்வரர் |
| இறைவி பெயர் | திரிபுரசுந்தரி |
| பதிகம் | திருநாவுக்கரசர் - 16 திருஞானசம்பந்தர் - 1 சுந்தரர் - 1 |
| எப்படிப் போவது | கடலூரில் இருந்து திருவஹீந்திபுரம், பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் பேருந்தில் சென்று திருவதிகை கோவில் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மி. சென்றால் அதிகை வீரட்டேஸ்வரர் கோவிலை அடையலாம். பண்ருட்டிக்கு அருகில் சுமார் 2 கி.மி. தொலைவில் உள்ளது. சென்னை, கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், சிதம்பரம் முதலிய ஊர்களிலிருந்து பண்ருட்டிக்குப் பேருந்து வசதி உள்ளது. |
| ஆலய முகவரி |
அருள்மிகு அதிகை வீரட்டேஸ்வரர் திருக்கோவில் திருவதிகை பண்ருட்டி அஞ்சல் கடலூர் மாவட்டம் PIN - 607106 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். |
தல புராண வரலாறு: சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார். வித்யுந்மாலி, தாருகாட்சன், கம்லாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் அசுரகள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர். மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார். இச்சமயம் ஒவ்வொரு உறுப்பும் தன்னால் தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று நினைத்து கர்வம் கொள்ளத் தொடங்கின. இறைவன் இவ்வாறு ஒவ்வொருவரும் கர்வம் கொண்டிருப்பதைக் கண்டார். தன் பங்கு இல்லாமல் இப்படையில் எந்த ஒரு பயனும் இல்லை என்று அவர்களுக்குப் புரிய வைக்க நினைத்து, தேவர்களின் செருக்கு அடங்கப் புன்னகையும், சிவபூஜை தவறாத திரிபுர அசுரர்கள் உய்யுமாறு தண்ணகையும், சிவபூஜை தவறிய முப்புரவாசிகள் மடியுமாறு வெந்நகையும் ஆகிய இம்மூன்றையும் இத்தல சிவபெருமான் செய்தார். அவர் சிரித்த உடனேயே கோட்டைகள் மூன்றும் பொடிப்பொடியாக பொசுங்கிப் போயின. இச்சம்பவம் நடந்த இடம் தான் திருவதிகை.
திருநாவுக்கரசர்: திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்ற ஊரில் புகழனார் மாதினியார் தம்பதிகளுக்கு மகளாக திலவதியும், மகனாக மருள்நீக்கியாரும் பிறந்தனர். மருள்நீக்கியார் வளர்ந்தவுடன் சமண சமயத்தில் ஈடுபாடு கொண்டு சமண சமயத்தைச் சார்ந்து தருமசேனர் என்று பெயரோடு வாழ்ந்து வருகிறார். தமக்கை திலவதியாரோ தனக்கு மணம் புரிய நிச்சயிக்கப்பட்ட கலிப்பகையார் போரில் இற்ந்துபோக, இனி தனக்கு திருமணம் வேண்டாம் என்று வெறுத்து சைவ சமயம் சார்ந்து இறைப்பணி செய்து வாழ்ந்து வருகிறார். தம்பி சமண மதத்தில் இருந்து விலகி சைவ சமயம் சார அருள்புரிய வேண்டி சிவபெருமானிடம் முறையிடுகிறார். இந்நிலையில் தம்பி தருமசேனரை கொடிய சூலைநோய் தாக்குகிறது. சூலைநோயின் கொடுமை தாங்கமுடியாமல் தம்பி துன்பப்படுவதைக் கண்ட திலகவதி திருவதிகை இறைவனிடம் கூட்டிச் சென்று அங்குள்ள திருநீறை அவருக்குப் பூசி இறைவன் மேல் மனமுருகிப் பாடச் சொல்கிறார். அவ்ரும்
கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன் நான் அறியேன் ஏற்றாய அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாது என் வயிற்றின் அகம் படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன் அதி கைக்கெடில வீரட்டானத் துறை அம்மானே
என்ற பாடலுடன் தொடங்கும் பதிகத்தைப் பாடி சூலை நோய் நீங்கப் பெற்றார். மேலும் நாவுக்கரசர் என்று சிவபெருமானால் அழைக்கப்பட்டு தருமசேனராக இருந்தவர் திருநாவுக்கரசர் என்று சிவபெருமான் சூட்டிய திருநாமத்துடன் சைவ சமயத்திற்குப் பெரும் தொண்டு செய்யத் தொடங்கினார். தனது சூலை நோய் நீங்கப் பாடிய பதிகமே இவர் பாடிய முதல் பதிகமாகும்.
கோவில் அமைப்பு: கோவில் சுமார் 7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் 7 நிலைகளுடனும், 7 கலசங்களுடனும் காட்சி தருகிறது. கோயிலுக்கு முன்னால் பதினாறுகால் மண்டபம் உள்ளது. இதைத் திருநீற்று மண்டபம் என்றழைக்கிறார்கள். இம்மண்டபத் தூண்களில் ரிஷபாரூடர், அப்பர், மயில் வாகனன் முதலிய சிற்பங்களும், இக்கோயிலைத் திருப்பணி செய்வித்த செட்டியார் சிற்பங்களும் உள்ளன. கோபுர வாயிலின் இரு பக்கமும் நாட்டியக் கலையின் 108 தாண்டவ லட்சணங்களை விளக்கும் வகையில் பெண்கள் அழகிய சிற்பங்களாகக் காட்சி அளிக்கின்றனர். வலப்பக்கத்தில் சற்று உயரத்தில் திரிபுமெரித்த கோலம் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் கஜசம்ஹாரகோலம். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழந்தவுடன் உட்புறத்தில் மற்றொரு பதினாறுகால் மண்டபம் உள்ளது. திறந்த வெளி முற்றத்தின் தென்பக்கம் சங்கர தீர்த்தமும், வடப்பக்கம் 5 அடி உயரமுள்ள பத்மாசனக் கோலத்தில் காணப்படும் ஒரு புத்தர் சிலையும் உள்ளன. 2வது கோபுர வாயிலின் வெளிப்புறம் விநாயகர், கொடிமரம், பலிபீடம் ஆகியவை உள்ளன. 5 நிலைகளையுடைய இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு பெரிய நந்தியின் உருவசிலைக் காணப்படுகிறது. ஒருபுறம் முருகப் பெருமானும், மறுபுறம் கணபதியும் காட்சியளிக்கின்றனர். 2வது சுற்றின் தென்புறத்தில் திருநாவுக்கரசருக்கும், அவர் தமக்கை திலகவதிக்கும் தனித் தனியாக சந்நிதி உள்ளது. அதற்கடுத்து பைரவர், சனீஸ்வரர், மற்றும் துர்க்கையம்மன் சந்நிதிகள் உள்ளன. அதன்பின் இறைவி பெரியநாயகி சந்நிதி இருக்கிறது. அம்பிகையின் கோவில் வாசலில் இருந்து இறைவி சந்நிதி விமானத்தைக் காணலாம். விமானத்தில் உள்ள சுதை வேலைப்பாடு சிற்பங்கள் பல வண்ணங்களில் நம் கருத்தைக் கவரும். இவைகளில் பிரச்சித்தமான வடிவம் திரிபுராந்தகர் சிற்பம். 12 திருக்கரங்கள், சூலம் ஏந்திய கை ஒன்று, வில்லேந்திய கை ஒன்று, ஒரு கால் தேர்த்தட்டிலும், மற்றொரு காலை உயர்த்தியும் வில் வளைத்து நிற்கிறார்.
3வது சுற்றில் தான் மூலவர் அதிகை வீரட்டேஸ்வரர் சந்நிதி இருக்கிறது. கருவறையில் காட்சி அளிக்கும் வீரட்டேஸ்வரர் 16 பட்டைகளுடன் கூடிய சுயம்பு லிங்கம் ஆவார். இவருக்குப் பின்னால் கருவறைச் சுவற்றில் பார்வதி, சிவன் கல்யாணத் திருக்கோலம் காட்சி தருகிறது. மூலஸ்தானத்தின் மேல் உள்ள விமானம் பல்லவர் காலத்தைச் சார்ந்தது. இறைவன் கருவறை விமானம் நிழல் பூமியில் சாயாதபடிக் கட்டப்பட்டுள்ளது. கருடன், பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர் ஆகியோர் இத்தலத்தில் வீரட்டேஸ்வரரை பூஜித்திருக்கின்றனர்.
உள் சுற்றின் தென்மேற்கே உள்ள பஞ்சமுக லிங்கம் காணவேண்டிய ஒன்று. இதுவம் பல்லவர் காலத்தைச் சார்ந்தது. இத்தகைய பஞ்சமுக லிங்கம் தமிழ்நாட்டில் வேறெங்கும் காண முடியாது. மூன்று திக்குகளை நோக்கி நானகு முகங்கள் உள்ளன. ஒரு முகம் மேல் நோக்கி உள்ளதாக ஐதீகம். எனவே பஞ்சமுக லிங்கம் என்று கூறுவர். இது ஒரு அரிய தரிசனம் ஆகும். வரிசையாகப் பல சிவலிங்கத் திருமேனிகள் உள்ளன. யாகசாலை, நவக்கிரக சந்நிதிகளையடுத்து, நடராச சபை உள்ளது.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் ஆறுமுகப் பெருமான் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார். உற்சவரும் தன் இரு தேவியருடன் சணமுகப் பெருமானாகக் காட்சி தருகிறார்.
திருநாவக்கரசர் உழவாரப்பணி செய்த இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில் தங்கி இத்தலப் பெருமானை வழிபட்டார். சுந்தரர் இரவு மடத்தில் தூங்கிக் கொண்டு இருந்த போது அவரின் மேல் யாரோ காலால் இடிப்பது தெரிந்து சுந்தரர் நகர்ந்து படுத்தார். மீண்டும் யாரோ அவர் தலையில் கால் படும்படி படுக்க, சுந்தரர் எழுந்து காலால் தலையை தீண்டியவரை கடுமையாகப் பேச, பின் இறைவன் தான் இவ்வாறு திருவிளையாடல் செய்துள்ளார் என்பதைப் புரிந்து கொண்டு அவரை வணங்கினார். இவ்வாறு சுந்தரர் இறைவனிடம் திருவடி தீட்சை பெற்றதும், பல்லவனான மகேந்திர வர்மனின் மனத்தை மாற்றிச் சமண் பள்ளிகளை இடித்துக் குணபரவீச்சரம் என்ற கோவிலை எழுப்பச் செய்ததும் இத்தலத்தின் பெருமையைப் பறைசாற்றும் நிகழ்ச்சிகளாம்.
| திருவதிகை வீரட்டேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள் | ||
|---|---|---|
![]() இராஜகோபுர வாயிலுக்கு எதிரிலுள்ள 16 கால் மண்டபம் |
![]() 2-ம் கோபுர வாயிலுக்கு எதிரிலுள்ள 16 கால் மண்டபம் |
|
![]() 5 நிலை இரண்டாம் கோபுரம் |
![]() 2-ம் கோபுர வாயிலுக்கு முன்னுள்ள பலிபீடம், கொடிமரம், நந்தி |
|
![]() நந்தியெம் பெருமான் |
![]() சுவாமி சந்நிதிக்குச் செல்லும் வழி |
|
![]() அம்பாள் சந்நிதி முன்னுள்ள பலிபீடம், கொடிமரம், நந்தி |
![]() வெளிப் பிரகாரம் |
|
![]() தல விருட்சம் சரக்கொன்றை |
![]() தல விருட்சம் அருகிலுள்ள சரக்கொன்றை நாதர் சந்நிதி |
|
![]() 63 நாயன்மார்களின் அணிவகுப்பு |
![]() வெளிப் பிரகாரத்தில் வரிசையாக உள்ள லிங்கங்கள் | |












