Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

திருநாவலேஸ்வரர் கோவில், திருநாவலூர்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருநாவலூர் (இன்றைய நாளில் இவ்வூர் திருநாமநல்லூர் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்திருநாவலேஸ்வரர், பக்த ஜனேஸ்வரர்
இறைவி பெயர்சுந்தரநாயகி, மனோண்மனி
பதிகம்சுந்தரர் - 1
எப்படிப் போவது 1. சென்னை - திருச்சி தேசீய நெடுஞ்சாலையில் விழுப்புரம் தாண்டி செல்லும் போது மடப்பட்டு என்ற ஊர் வரும் அதைத் தாண்டி பிரதான சாலையில் உள்ள திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகே பிரிந்து பண்ருட்டி செல்லும் சாலையில் 2 கி.மீ சென்றால் ஊரையடையலாம். சாலையோரத்தில் ஊரின் முதலிலேயே கோயில் உள்ளது.
2. பேருந்தில் செல்வோர் விழுப்புரத்திலிருந்து அரசூர், மடப்பட்டு வழியாக உளுந்தூர்ப்பேட்டை செல்லும் பேருந்தில் ஏறி கெடிலம் நிறுத்தம் (திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ள இடமே "கெடிலம் நிறுத்தம்" என்று சொல்லப்படுகிறது) என்று கேட்டு அங்கு இறங்கினால் திருக்கோவிலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் பேருந்துகள் வரும். அவற்றில் ஏறி 2 கி.மீ சென்று ஊரையடைந்து மேற்சொல்லியவாறு கோயிலை அடையலாம். கோயில் உள்ள இடத்தில் பேருந்துகள் நிற்கும்.
3. அருகிலுள்ள பெரிய ஊர் பண்ருட்டி விழுப்புரம் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து உளுந்தூர் பேட்டை செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் திருநாவலூர் அமைந்துள்ளது. பண்ருட்டியில் இருந்து திருநாவலூருக்கு பேருந்து வசதி உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு பக்த ஜனேஸ்வரர் திருக்கோவில்
திருநாவலூர் அஞ்சல்
உளுந்தூர்பேட்டை வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
PIN - 607204

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலய குருக்கள் முத்துசாமி சிவம் - கைபேசி எண்: 94433 82945

ஆலய குருக்கள்: செந்தில் குருக்கள்: கைபேசி எண்: 9486150809
Tirunavalur route map

விழுப்புரத்தில் இருந்து திருநாவலூர்
செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

கெடில நதியின் வட கரையில் அமைந்துள்ள இவ்வாலயத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சி தருகிறது. கோபுரத்தையடுத்து இடதுபுறம் உள்ளே சுந்தரர் சந்நிதி உள்ளது. திருநாவலூர் சுந்தரரின் அவதாரத் தலம். தனது இரு மனைவியர் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் சூழ, எதிரில் வெள்ளையானை நிற்க, சுந்தரர் கையில் தாளமேந்தி காட்சி தருகிறார். பூலோக வாழ்க்கையை நீத்து, சுந்தரர் கயிலாயம் சென்றபோது, யானை மீது சென்றதாக வரலாறு கூறுகிறது. எனவே சுந்தரருக்கு எங்கே சந்நிதி அமைத்தாலும் யானை வாகனமே அமைப்பது வழக்கம். உள் இடம் மிகவும் விசாலமாக உள்ளது. கோபுர வாயில் கடந்தவுடன் எதிரில் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி முதலியன உள்ளன. கொடிமர விநாயகர். சுந்தர விநாயகராகக் காட்சி தருகிறார். உள்வாயிலைக் கடந்ததும் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளன. நால்வர், இரு மனைவியருடன் சுந்தரர், நடராசர், சிவகாமி, முருகன், விநாயகர், வள்ளி, தெய்வயானை முதலிய உற்சவத் திருமேனிகள் உள்ளன. நேரே மூலவர் பக்த ஜனேஸ்வரர் சிறிய கருவறையில் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். பங்குனி மாதம் 23 முதல் 27 ஆம் நாள் வரை சூரியனின் ஒளிக் கதிர்கள் கருவறையில் நுழைந்து மூலவர் மீது படுகின்றன. நடராச சபை உள்ளது. உள்பிராகாரத்தில் நரசிங்க முனையரையர் பூசித்த மிகப் பெரிய சிவலிங்க மூர்த்தம் உள்ளது.

பொல்லாப் பிள்ளையார், சேக்கிழார், நால்வர், அறுபத்துமூவர், வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர், ஆறுமுகர் முதலிய சந்நிதிகளும், தொடர்ந்து யுகலிங்கங்களும், கஜலட்சுமி சந்நிதிகளும் உள்ளன. கருவறைச் சுவரில் சண்டேசுரர் வரலாறு சிற்பங்கள் வடிவில் - பால் கறப்பது, தந்தையார் மரத்தின் மீதேறிப் பார்ப்பது, திருமஞ்சனம் செய்வது, தந்தையின் கால்களைத் துண்டிப்பது, இறைவன் கருணை செய்வது ஆகியவை யாவும் வடிக்கப்பட்டுள்ளது. நவக்கிரக சந்நிதியில் சுக்கிரனுக்கு எதிராக அவர் வழிபட்ட சுக்கிரலிங்கம் உள்ளது. நவக்கிரகங்களின் நடுவில் உள்ள சூரியன் திசைமாறி மேற்கு நோக்கி மூலவரைப் பார்த்தவாறு உள்ளார். பக்கத்தில் பைரவர் திருமேனிகளும் சூரியனும் உள்ளார்.

அம்பாள் கோயில் தனியே அழகான முன் மண்டபத்துடன் அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பிகை நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். வடக்குச் சுற்றில் தல மரங்களான நாவல் மரங்களை அம்மன் சந்நிதிக்கு அருகில் காணலாம். இந்த ஊருக்கு நாவலூர் எனும் பெயர் ஏற்பட காரணம் இதுவே. இத்தலத்தின் விருட்சமான நாவல் மரம் ரோகிணி நட்சத்திற்குரிய மரமாகும். ஆகவே ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தல இறைவனையும், அம்பாள் மனோண்மணியையும் மாதத்தில் ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் வழிபடுவது நலனைத் தரும்.


ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜப் பெருமாள்

மகாவிஷ்ணு வழிபட்ட தலம்: இரண்யன் என்ற அசுரன் (பிரகலாதனின் தந்தை) தேவர்களை மிகவும் கொடுமைப் படுத்தி வந்தான். தேவர்களும், முனிவர்களும் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர். மகாவிஷ்ணுவும் இரண்யனை வதம் செய்ய முடிவு செய்தார். ஆனாலும் வரங்கள் பல பெற்ற இரண்யன் தனக்கு மரணம் நிலத்திலும், நிரிலும், வானிலும், ஆயுதங்களாலும், மனிதர்களாலும், தேவர்களாலும், விலங்குகளாலும், பகலிலும், இரவிலும், அரண்மனை உள்ளேயும், வெளியிலும் ஏற்படக்கூடாது என்ற வரமும் பெற்றிருந்தான். இப்படிப்பட்ட இரண்யனை அழிக்க மகாவிஷ்ணு திருநாவலூர் தலத்து இறைவனான பக்தஜனேஸ்வரரை வழிபட்டார். நரசிம்ம அவதாரம் எடுத்து, தூணில் இருந்து வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்ய வேண்டிய ஆற்றலை திருமாலுக்கு வழங்கிய தலம் தான் திருநாவலூர். இத்தலத்தில் மகாவிஷ்ணு தனிக்கோவில் கொண்டுள்ளார். ஆலய பிரகாரத்தின்.வடக்குச் சுற்றில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜப் பெருமாள் என்ற பெயரில் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். உயரமாக அமைந்த இந்தச் சந்நிதிக்குப் படிகளேறிப் போக வேண்டும். முகப்பு மண்டமும், மகா மண்டபமும் கூடிய இந்த சந்நிதியில் கிழக்கு நோக்கி ஆறடி உயரத்தில் வரதராஜப் பெருமாள் ஆஜானுபாகுவாக காட்சி தருகிறார். சந்நிதிக்கு எதிரில் கருடன் சிற்பம் உள்ளது.

கோஷ்ட மூர்த்தமாகவுள்ள தட்சிணாமூர்த்தி ரிஷபத்தின் முன்னால் நின்று வலக்கையை ரிஷபத்தின் மீது ஊன்றி, மறுகையில் சுவடியேந்தி நிற்கும் கோலத்தில் காட்சி தருகிறார். சுக்ரபகவான் இத்தலத்தில் இறைவனை வணங்கி பூஜித்து வக்ர தோஷம் நிவர்த்தி பெற்றதாக தல வரலாறு குறிப்பிடுகிறது. சுக்கிரனால் நிறுவி வழிபடப்பட்ட லிங்கம் நவகிரகங்களுக்கு அருகே அமைந்துள்ளது. இந்த லிங்கத்துக்கு வெள்ளிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள் நடக்கும்.

திருப்புகழ் தலம்: இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி நின்றவாறு எழுந்தருளியுள்ளார்.

இவ்வாலயத்தின் தீர்த்தங்கள் கெடில நதியும், கோமுகி தீர்த்தமும் ஆகும். கெடிலநதி ஊருக்குத் தெற்கே ஒரு கி.மீ தூரத்திலும், கோமுகி தீர்த்தம் கோயிலுக்கு மேற்கிலும் இருக்கின்றன.

சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சுந்தரர் தனது பதிகத்தில் இறைவன் திருவெண்ணைநல்லூரில் மூல ஆவணம் காட்டி தன்னை அடிமை கொண்டதையும், இறைவனால் "வன்றொண்டன்" என்னும் பெயரைப் பெற்றதையும் குறிப்பிடுகிறார். "நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப்பாடலை விரும்பியும், கற்றும் கேட்பவரது வினைகள் வலியற்று ஒழியும்" என்று தனது பதிகத்தின் கடைசி பாடலில் குறிப்பிடுகிறார்.

1. கோவலன் நான்முகன் வானவர் கோனுங்குற் றேவல்செய்ய
மேவலர் முப்புரந் தீயெழு வித்தவன் ஓரம்பினால்
ஏவல னார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை யாளுங்கொண்ட
நாவல னார்க்கிட மாவது நந்திரு நாவலூரே. 

2. தன்மையி னாலடி யேனைத்தாம் ஆட்கொண்ட நாட்சபைமுன்
வன்மைகள் பேசிட வன்றொண்டன் என்பதோர் வாழ்வுதந்தார்
புன்மைகள் பேசவும் பொன்னைத்தந் தென்னைப்போ கம்புணர்த்த
நன்மையி னார்க்கிட மாவது நந்திரு நாவலூரே. 

3. வேகங்கொண் டோ டிய வெள்விடை ஏறியோர் மெல்லியலை
ஆகங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டார்
போகங்கொண் டார் கடற் கோடியின் மோடியைப் பூண்பதாக
நாகங்கொண் டார்க்கிட மாவது நந்திரு நாவலூரே.

4. அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினிற் சேவினை ஆட்சிகொண்டார்
தஞ்சங்கொண் டாரடிச் சண்டியைத் தாமென வைத்துகந்தார்
நெஞ்சங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டு
நஞ்சங்கொண் டார்க்கிட மாவது நந்திரு நாவலூரே. 	

5. உம்பரார் கோனைத்திண் டோ ள்முரித் தாருரித் தார்களிற்றைச்
செம்பொனார் தீவண்ணர் தூவண்ண நீற்றரோர் ஆவணத்தால்
எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட
நம்பிரா னார்க்கிட மாவது நந்திரு நாவலூரே. 

6. கோட்டங்கொண் டார்குட மூக்கிலுங் கோவலுங் கோத்திட்டையும்
வேட்டங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டார்
ஆட்டங்கொண் டார்தில்லைச் சிற்றம் பலத்தே அருக்கனைமுன்
நாட்டங்கொண் டார்க்கிட மாவது நந்திரு நாவலூரே. 

7. தாயவ ளாய்த்தந்தை யாகிச் சாதல் பிறத்தலின்றிப்
போயக லாமைத்தன் பொன்னடிக் கென்னைப் பொருந்தவைத்த
வேயவ னார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட
நாயக னார்க்கிட மாவது நந்திரு நாவலூரே. 

8. வாயாடி மாமறை ஓதியோர் வேதிய னாகிவந்து
தீயாடி யார்சினக் கேழலின் பின்சென்றோர் வேடுவனாய்
வேயாடி யார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட
நாயாடி யார்க்கிட மாவது நந்திரு நாவலூரே. 

9. படமாடு பாம்பணை யானுக்கும் பாவைநல் லாள்தனக்கும்
வடமாடு மால்விடை ஏற்றுக்கும் பாகனாய் வந்தொருநாள்
இடமாடி யார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட
நடமாடி யார்க்கிட மாவது நந்திரு நாவலூரே. 

10. மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத் தான்வலி யைநெரித்தார்
அடக்கங்கொண் டாவணங் காட்டிநல் வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்
தடுக்கவொண் ணாததோர் வேழத்தி னையுரித் திட்டுமையை
நடுக்கங்கண் டார்க்கிட மாவது நந்திரு நாவலூரே. 	

11. நாதனுக் கூர்நமக் கூர்நர சிங்க முனையரையன்
ஆதரித் தீசனுக் காட்செயும் ஊரணி நாவலூரென்
றோதநற் றக்கவன் றொண்டனா ரூரன் உரைத்ததமிழ்
காதலித் துங்கற்றுங் கேட்பவர் தம்வினை கட்டறுமே. 

திருநாவலூர் திருநாவலேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


5 நிலை இராஜகோபுரம்


கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம்


தன் இரு மனைவியருடன் சுந்தரர்


அம்மன் சந்நிதிக்குச் செல்லும் வழி


பிராகாரத்தில் சிவலிங்கம்


நவக்கிரக சந்நிதி


சுவாமி சந்நிதிக்குச் செல்லும் வழி


வள்ளி, தெய்வானை சமேத முருகர்


மூலவர் பக்தஜனேஸ்வரர்


அம்பாள் மனோண்மனி


Copyright © 2004 - 2019 - www.shivatemples.com - All rights reserved