Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

சொர்ணகடேஸ்வரர் கோவில், திருநெல்வெணெய்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருநெல்வெணெய் (தற்போது நெய்வணை என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்சொர்ணகடேஸ்வரர், வெண்ணையப்பர்
இறைவி பெயர்நீலமலர்க்கன்னி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது 1. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள உளுந்தூர்பேட்டையிலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் எலவானாசூர் வந்து பின் அங்கிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் எறையூர் வந்தடைந்து அங்கிருந்து பிரியும் பாதையில் வடகுரும்பூர் வழியாக 4 கி.மீ. தொலைவில் உள்ள நெய்வெணையை அடையலாம். எறையூரிலிருந்து நெய்வெணை செல்ல நகரப் பேருந்து உள்ளது. இந்தப் பாதையே நல்ல சாலை.

2. உளுந்தூர்பேட்டையிலிருந்து திருவெண்ணைநல்லூர் செல்லும் சாலை வழியில் இடதுபுறம் ரிஷிவந்தியம் செல்லும் சாலை பிரிகிறது. இவ்வழியே சென்றும் நெய்வணை தலத்தை அடையலாம்.இது ஒரு குறுகிய சாலை. இந்த வழியில் நெய்வணை தலம் உளுந்தூர்பேட்டையிலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோவில்
நெய்வணை கிராமம், கூவாடு அஞ்சல்
வழி எறையூர், உளுந்தூர்பேட்டை வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
PIN - 607201

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். கோவில் குருக்கள் வீடு அருகிலேயே உள்ளது. ஆலய குருக்களைத் தொடர்பு கொண்டு எந்நேரமும் தரிசிக்கலாம்.

ஆலய தொடர்புக்கு: கிருஷ்ணமூர்த்தி குருக்கள், கைபேசி: 9047785914
temple location map

நெய்வணை ஆலயம் இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம் - 2-வது வழி
May by google

நான்கு முறமும் சுற்று மதிலுடன் ஒரு முகப்பு வாயில் மட்டுமே கொண்டு இவ்வாலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலுக்கு முன்பாக நந்தி மற்றும் பலிபீடம் உள்ளன. கொடிமரமில்லை. முகப்பு வாயில் கடந்து உள்ளே சென்றால் நேரே மூலவர் சந்நிதி அமைந்துள்ளது. மூலவர் சந்நிதி வாயிலின் வெளியே மகாவிஷ்ணு சங்கு சக்ரதாரியாகத் திருமகளுடன் அழகாகக் காட்சி தருகிறார். துவாரபாலகரை தொழுது உள்வாயில் கடந்து உள்ளே சென்றால் கருவறையில் சிவன் சுயம்பு லிங்கமாக ருத்ராட்ச பந்தலின் கீழ் அருட்காட்சி தருகிறார். ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் மகாசிவராத்திரியன்று அதிகாலையில் இறைவன் திருமேனி மீது சூரிய ஒளி விழுகிறது. சனகர், சனகாதி முனிவர்கள் நால்வரும் சுவாமியை பூஜித்து வணங்கியுள்ளனர்.

வெளிப் பிராகாரத்தில் விநாயகர் சந்நிதியுள்ளது. அதையடுத்து வள்ளி தெய்வயானை உடனாகிய ஆறுமுக சுவாமி மயில் வாகனத்துடன் காட்சி தருகிறார். மயில் இடதுபுறம் திரும்பி உள்ளது. முருகர் சந்நிதி பின்புறம் காசி விஸ்வநாதர் சந்நிதி மற்றும் ஸ்படிக லிங்கம் சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதி தனிக் கோயிலாகப் பக்கத்தில் உள்ளது. அம்பாள் நீலமலர்க்கன்னி கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் சந்நிதிக்கு வெளியே நேர் எதிரில் நால்வர் சந்நிதி உள்ளது. உள்ளனர். ஞானசம்பந்தர் கையில் தாளமின்றி, கை கூப்பிய நிலையிலும், சுந்தரர், நடன சுந்தரராகவும் காட்சி தருகின்றார். அப்பர் பெருமானும் கை கூப்பிய நிலையில் காணப்ண்டுகிறார்.

இத்தலத்து கல்வெட்டு ஓன்றில் இத்தல இறைவன் பெயர் "பொற்குடங் கொடுத்தருளிய நாயனார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய வழக்கில் வடமொழிப் பெயரான சொர்ணகடேஸ்வரர் என்று அழைக்கப்படும் இத்தல இறைவனை வணங்கி வழிபடுவர்களுக்கு செல்வத்தை வாரி வழங்கக் கூடியவர்.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இத்தலத்தைப் பற்றி பதிகம் பாடும் போது சம்பந்தர், வரிசையாக உலகெங்கும் பரந்த தொன்மையான புகழினையுடைய திருநெல்வெண்ணெய் என்றும் (3-வது பாடல்), நீர்வளம் மிக்க தொன்மையான புகழ் பொருந்திய திருநெல்வெண்ணெய் என்றும் (4-வது பாடல்), நிலவுலகெங்கும் நிறைந்த தொன்மையான புகழையுடைய திருநெல்வெண்ணெய் என்றும் (11-வது பாடல்), இத்தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

1. நல்வெணெய் விழுதுபெய் தாடுதிர் நாடொறும்
நெல்வெணெய் மேவிய நீரே
நெல்வெணெய் மேவிய நீருமை நாடொறுஞ்
சொல்வணம் இடுவது சொல்லே.  

2. நிச்சலும் அடியவர் தொழுதெழு நெல்வெணெய்க்
கச்சிள அரவசைத் தீரே
கச்சிள அரவசைத் தீருமைக் காண்பவர்
அச்சமொ டருவினை யிலரே.  

3. நிரைவிரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
அரைவிரி கோவணத் தீரே
அரைவிரி கோவணத் தீருமை யலர்கொடு
உரைவிரிப் போருயர்ந் தோரே. 

4. நீர்மல்கு தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
ஊர்மல்கி உறையவல் லீரே
ஊர்மல்கி உறையவல் லீருமை யுள்குதல்
பார்மல்கு புகழவர் பண்பே.  

5. நீடிளம் பொழிலணி நெல்வெணெய் மேவிய
ஆடிளம் பாப்பசைத் தீரே
ஆடிளம் பாப்பசைத் தீருமை அன்பொடு
பாடுளம் உடையவர் பண்பே.  
6. நெற்றியோர் கண்ணுடை நெல்வெணெய் மேவிய
பெற்றிகொள் பிறைநுத லீரே
பெற்றிகொள் பிறைநுத லீருமைப் பேணுதல்
கற்றறி வோர்கள்தங் கடனே.  

7. நிறையவர் தொழுதெழு நெல்வெணெய் மேவிய
கறையணி மிடறுடை யீரே
கறையணி மிடறுடை யீருமைக் காண்பவர்
உறைவதும் உம்மடிக் கீழே. 

8. நெருக்கிய பொழிலணி நெல்வெணெய் மேவியன்
றரக்கனை யசைவுசெய் தீரே
அரக்கனை யசைவுசெய் தீருமை யன்புசெய்
திருக்கவல் லாரிட ரிலரே. 

9. நிரைவிரி சடைமுடி நெல்வெணெய் மேவியன்
றிருவரை யிடர்கள்செய் தீரே
இருவரை இடர்கள்செய் தீருமை யிசைவொடு
பரவவல் லார்பழி யிலரே.  

10. நீக்கிய புனலணி நெல்வெணெய் மேவிய
சாக்கியச் சமண்கெடுத் தீரே
சாக்கியச் சமண்கெடுத் தீருமைச் சார்வது
பாக்கியம் உடையவர் பண்பே.  

11. நிலமல்கு தொல்புகழ் நெல்வெணெய் ஈசனை
நலமல்கு ஞானசம் பந்தன்
நலமல்கு ஞானசம் பந்தன செந்தமிழ்
சொலமல்கு வார்துய ரிலரே.  

திருநெல்வெண்ணெய் சொர்ணகடேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

neyvanai temple

முகப்பு வாயில் முன் நந்தி, பலிபீடம்

neyvanai temple entrance

முகப்பு வாயில்

Nandhi

முன் கால் மடக்கிய நிலையில் நந்தி


நால்வர் சந்நிதி

temple inside view

ஆலயத்தின் உட்புறத் தோற்றம்


வள்ளி தெய்வானை சமேத முருகர்


காசி விஸ்வநாதர், விசாலாட்சி

Sornagateswarar

மூலவர் சொர்ணகடேஸ்வரர்


நால்வர் சந்நிதி


Copyright © 2004 - 2019 - www.shivatemples.com - All rights reserved