Shiva Temples of Tamilnadu
தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
வீரட்டேஸ்வரர் கோவில், திருக்கோவிலூர்
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருக்கோவிலூர் |
| இறைவன் பெயர் | வீரட்டேஸ்வரர் |
| இறைவி பெயர் | சிவானந்தவல்லி |
| பதிகம் | திருநாவுக்கரசர் - 1 திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | பெண்ணையாற்றின் தென்கரையில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. திண்டிவனம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் செல்ல பேருந்து வசதிகள் இருக்கின்றன. மற்றொரு பாடல் பெற்ற தலமான அறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) இங்கிருந்து சுமார் 3 கி.மி. தொலைவில் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை இங்கிருந்து 35 கி.மி. தொலைவில் இருக்கிறது. |
| ஆலய முகவரி |
அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில் கீழையூர், திருக்கோவிலூர் அஞ்சல் திருக்கோயிலூர் வட்டம் விழுப்புரம் மாவட்டம் PIN - 605757 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும் |
![]() Map courtesy by: Yahoo Maps | |
சிவபெருமான் வீரச் செயல்கள் புரிந்த அட்டவீரட்டத் தலங்களில் அந்தாகாசுரனை வதைத்த தலம், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திரிவிக்ரமப் பெருமாள் வைணவ ஆலயமும், "ஒருவர்படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்" என்று சொல்லப்படும் முதல் மூன்று ஆழ்வார்களின் வரலாற்று நிகழ்ச்சி இடம் பெற்ற தலம், தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவனும், திருமுறை கண்ட சோழன் என்று போற்றபடுவனும் ஆன ராஜராஜன் பிறந்த தலம் என்று பல பெருமைகளை உடையது திருக்கோவலூர் தலம். திருக்கோவலூர் மேலூர், கீழையூர் என இருபிரிவுகளாக உள்ளது. அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்றான வீரட்டேஸ்வரர் கோவில் கீழையூர்ப் பகுதியில் தெண்பெண்ணையாற்றின் கரையிலும், மேலூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திரிவிக்ரமப் பெருமாள் வைணவ ஆலயமும் உள்ளன.
வீரட்டேஸ்வரர் கோவிலும், அம்பாள் சிவானந்தவல்லி கோவிலும் தனித்தனி கோவில்களாக சுற்று மதிலுடன் மேற்கு நோக்கி அருகருகே அமைந்துள்ளன.சுவாமி கோவிலுக்கு இடதுபுறம் அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இரண்டு கோவில்களுக்கும் 3 நிலை கோபுரங்கள் உள்ளன. கோபுரங்களுக்கு முன்னால் விசாலமான வெளியிடம் உள்ளது.
சுவாமி கோவில் கோபுர வழியே உள்ளே நுழைந்ததும் கவசமிட்ட கொடிமரம், முன்னால் நந்தி உள்ளதைக் காணலாம். வெளிப்பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. முகப்பு வாயிலில் மேலே பஞ்சமூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன. முன்தூணில் இடதுபுறம் மெய்ப்பொருள்நாயனார் சிற்பம் உள்ளது. வலதுபுறம் கணபதியின் சந்நிதி உள்ளது. ஒளவையாரால் வழிபடப்பட்ட விநாயகர் இவர். சுந்தரர் வெள்ளை யானை மீதேறியும், அவரது தோழரான சேரமான் பெருமாள் நாயனார் குதிரை மீதேறியும் கைலாயம் செல்லும் போது ஒளவையாரையும் உடன் வருமாறு அழைத்தனர். அச்சமயம் இத்தல கணபதியை வழிபட்டுக்கொண்டிருந்த ஒளவையா வர மறுத்து வழிபாட்டைத் தொடர்ந்தார். வழிபாடு முடிந்த பிறகு ஒளவையாரை தனது துதிக்கையால் சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கயிலையை அடைவதற்கு முன்பு சேர்த்து விட்டார். இவ்வாறு ஒளவையைத் தூக்கிவிட்ட கணபதி இவரே என்பர். விநாயகர் சந்ந்திக்கு முன்புறம சுவரில் புடைப்புச் சிற்பமாக இந்த வரலாறு காணப்படுகிறது. வாயிலின் இடதுபுறம் வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப்பெருமான் சந்நிதி உள்ளது. பக்கத்தில் கஜலட்சுமி சந்நிதியும், நடராசசபையும் உள்ளன.
தலமூர்த்தியாகிய அந்தகாசூர சம்ஹார மூர்த்தி விசேஷமானது. பக்கத்தில் நரசிங்க முனையரையர், மெய்ப்பொருள் நாயனார் ஆகியோரின் உற்சவத் திருமேனிகள் உள்ளன. துவாரபாலகரை வணங்கி உள்ளே சென்றால் மூலவர் வீரட்டேஸ்வரர் சுயம்பு சிவலிங்கத் திருமேனி, பெரிய உருவத்துடன் தரிசனம் தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோரைக் காணலாம். துர்க்கை எட்டுக் கரங்களுடன் காட்சியளிக்கின்ற நின்ற திருக்கோலம் மிகவும் விசேஷமாகவுள்ளது. விழிகள் மிகவும் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன.
அம்பாள் கோயில் தனியே 3 நிலை கோபுரத்துடன் உள்ளது. முன்மண்டபத்தில் இருபுறமும் துவாரகாலகர்களாக விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர். சந்நிதிக்கு முன்னால் நந்தி பலிபீடம் உள்ளன. அம்பாள் அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறாள்.
| திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள் | ||
|---|---|---|
![]() சுவாமி கோவில் 3 நிலை கோபுரம் |
![]() அம்பாள் கோவில் 3 நிலை கோபுரம் |
|
![]() சுவாமி சந்நிதி நந்தி |
![]() ஒளவையாரை கயிலைக்கு தூக்கிவிடும் சிற்பம் |
|
![]() கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி |
![]() ஒளவையார் வழிபட்ட விநாயகர் |
|
![]() வள்ளி தெய்வானையுடன் முருகர் சந்நிதி |
![]() அம்பாள் சந்நிதி நுழைவாயில் | |
![]() அம்பாள் சந்நிதி துவார முருகர் |
![]() அம்பாள் சந்நிதி துவார கணபதி | |











