Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

அதுல்யநாதேஸ்வரர் கோவில், திருஅறையணிநல்லூர்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருஅறையணிநல்லூர் (தற்போது அரகண்டநல்லூர் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்அதுல்யநாதேஸ்வரர், அறையணிநாதர்
இறைவி பெயர்அழகிய பொன்னம்மை, ஸ்ரீசெளந்திர கனகாம்பிகை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருக்கோவிலூருக்கு எதிர்க்கரையில் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ள ஒரு சிறு குன்றின் மீது திருக்கோவில் அமைந்துள்ளது. திருக்கோவிலூரில் இருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்திற்கு வர நகரப் பேருந்து வசதி உண்டு. விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் வர பேருந்து வசதிகள் இருக்கின்றன. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை இங்கிருந்து 35 கி.மி. தொலைவில் இருக்கிறது. விழுப்புரத்தில் இருந்து சுமார் 37 கி.மி. தொலைவு.
ஆலய முகவரி அருள்மிகு ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர் திருக்கோவில்
ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர் கோவில் தேவஸ்தானம்
அரகண்டநல்லூர் அஞ்சல்
திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
PIN - 605752
Arakandanallur location map

கோவில் அமைப்பு: இவ்வாலயம் ராஜகோபுரம் ஏழுநிலைகளை உடையது. ராஜகோபுரம் ஒரு பெரிய பாறையின் மீது கட்டப்பட்டுள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பிரகாரத்தில் வலம்புரி விநாயகர் உள்ளார். இவரே இத்தலத்தின் தலவிநாயகர். விநாயகருக்கு முன்பு இடதுபுறம் கையில் தாளமேந்திய நிலையில் ஞானசம்பந்தர் திருமேனி உள்ளது. விநாயகரின் பக்கத்தில் விஸ்வநாத லிங்கம் உள்ளது. அடுத்த வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் மூலவர் கருவறையை அடையலாம். கருவறையைச் சுற்றிலும் அகழி போன்ற அமைப்பு உள்ளது. கருவறைச் சுற்றில் நவக்கிரக சந்நிதி, பைரவர், கல்லில் வடித்துள்ள நாராயணர், நர்த்தன கணபதி, சக்கரதாரியாக நின்ற நிலையில் மகாவிஷ்ணு ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. சப்தமாதாக்கள் வரிசையாகக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளனர். மூலவர் அதுல்யநாதேஸ்வரர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறைச் சுற்றில் நடராஜர் சபையும் உள்ளது. வெளிச் சுற்றில் அண்ணாமலையார் சந்நிதி உள்ளது. அம்பாள் தனிக்கோயிலில் தெற்கு நோக்கி நான்கு திருக்கரங்களுடன் கூடிய நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள்.

இத்தலத்திலுள்ள முருகன் திருமேனி ஒருமுகத்துடனும், ஆறுகரங்களுடனும் வள்ளிதெய்வயானை சமேதராக வடக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். கைகளில் ஆயுதங்கள் உள்ளன.

கோயிலுக்கு வெளியில் பாறைகளுக்கு இடையில் உள்ளது பீமன் குளம். பாஞ்சாலி நீராடுவதற்காக இக்குளத்தை பீமன் வெட்டியதாக புரணாச் செய்திகள் மூலம் தெரிய வருகிறது.. ராஜகோபுரத்தின் அடிவாயிலில் குடைவரைக் கோயில்களாக ஐந்து அறைகள் உள்ளன. பஞ்ச பாண்டவர் வனவாசத்தின் போது இங்கு தங்கி இருந்ததாகக் கூறுவர். இப்போது உள்ளே ஏதுமில்லை. வனவாசம் முடிந்து, 18 நாட்கள் போருக்குப் பின் நாட்டைத் திரும்பப் பெற்ற பாண்டவர்கள், பட்டாபிஷேகம் முடிந்ததும் குடும்பத்தினரோடு மீண்டும் இங்கு வந்து வழிபட்டுச் சென்றனராம்.

பாண்டவர்கள் இவ்விறைவனை வழிபட்டுச் சென்று இழந்த நாட்டை மீண்டும் பெற்றதுபோல, பதவி இழந்தவர்கள், சொத்து சுகங்களை இழந்தவர்கள் இங்கு வந்து வழிபட்டால் இறைவன் அருளால் மீண்டும் அவற்றைப் பெறலாம்.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சம்பந்தர் தனது பதிகத்தில் அரகண்டநல்லூர் இறைவனை தலையினால் தொழும் பெருமை மிக்கவர் தடுமாற்றம் நீங்குவர் என்றும், பழிபாவங்கள் நீங்கப் பெறுவர் என்றும், அவரை அன்போடு நினைப்பவர்களின் வலிய வினைகள் மாயும் என்றும், பாவங்களும் கழியும் என்றும், சிவபிரான் திருவடிகளைத் தொழுது போற்ற குற்றமற்றவர் வாழும் சிவலோகத்தை அடைவர் என்றும் குறிப்பிடுகிறார்.

1. பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெடத் தீதிலா 
வீடினாலுயர்ந் தார்களும் வீடிலாரிள வெண்மதி 
சூடினார்மறை பாடினார் சுடலைநீறணிந் தாரழல் 
ஆடினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே.

2. இலையினார்சூலம் ஏறுகந் தேறியேயிமை யோர்தொழ 
நிலையினாலொரு காலுறச் சிலையினால்மதி லெய்தவன் 
அலையினார்புனல் சூடிய அண்ணலாரறை யணிநல்லூர் 
தலையினாற்றொழு தோங்குவார் நீங்குவார்தடு மாற்றமே.

3. என்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி யுச்சியான் 
பின்பினார்பிறங் குஞ்சடைப் பிஞ்ஞகன்பிறப் பிலியென்று 
முன்பினார்மூவர் தாந்தொழு முக்கண்மூர்த்திதன் தாள்களுக் 
கன்பினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே.

4. விரவுநீறுபொன் மார்பினில் விளங்கப்பூசிய வேதியன் 
உரவுநஞ்சமு தாகவுண் டுறுதிபேணுவ தன்றியும் 
அரவுநீள்சடைக் கண்ணியார் அண்ணலாரறை யணிநல்லூர் 
பரவுவார்பழி நீங்கிடப் பறையுந்தாஞ்செய்த பாவமே.

5. தீயினார்திகழ் மேனியாய் தேவர்தாந்தொழும் தேவன்நீ 
ஆயினாய்கொன்றை யாய்அன லங்கையாயறை யணிநல்லூர் 
மேயினார்தம தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனைப் 
பாயினாயெதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே.

6. விரையினார்கொன்றை சூடியும் வேகநாகமும் வீக்கிய 
அரையினாரறை யணிநல்லூர் அண்ணலாரழ காயதோர் 
நரையினார்விடை யூர்தியார் நக்கனார்நறும் போதுசேர் 
உரையினாலுயர்ந் தார்களும் உரையினாலுயர்ந் தார்களே.

7. வீரமாகிய வேதியர் வேகமாகளி யானையின் 
ஈரமாகிய வுரிவைபோர்த் தரிவைமேற்சென்ற எம்மிறை 
ஆரமாகிய பாம்பினார் அண்ணலாரறை யணிநல்லூர் 
வாரமாய்நினைப் பார்கள்தம் வல்வினையவை மாயுமே.

8. தக்கனார்பெரு வேள்வியைத் தகர்த்துகந்தவன் தாழ்சடை 
முக்கணான்மறை பாடிய முறைமையான்முனி வர்தொழ 
அக்கினோடெழில் ஆமைபூண் அண்ணலாரறை யணிநல்லூர் 
நக்கனாரவர் சார்வலால் நல்குசார்விலோம் நாங்களே.

9. வெய்யநோயிலர் தீதிலர் வெறியராய்ப்பிறர் பின்செலார் 
செய்வதேயலங் காரமாம் இவையிவைதேறி யின்புறில் 
ஐயமேற்றுணுந் தொழிலராம் அண்ணலாரறை யணிநல்லூர்ச் 
சைவனாரவர் சார்வலால் யாதுஞ்சார்விலோம் நாங்களே.

10. வாக்கியஞ்சொல்லி யாரொடும் வகையலாவகை செய்யன்மின் 
சாக்கியஞ்சம ணென்றிவை சாரேலும்மர ணம்பொடி 
ஆக்கியம்மழு வாட்படை அண்ணலாரறை யணிநல்லூர்ப் 
பாக்கியங்குறை யுடையீரேற் பறையுமாஞ்செய்த பாவமே.

11. கழியுலாங்கடற் கானல்சூழ் கழுமலம்அமர் தொல்பதிப் 
பழியிலாமறை ஞானசம் பந்தன்நல்லதோர் பண்பினார் 
மொழியினாலறை யணிநல்லூர் முக்கண்மூர்த்திதன் தாள்தொழக் 
கெழுவினாரவர் தம்மொடுங் கேடில்வாழ்பதி பெறுவரே.

திருஅறையணிநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


7 நிலை கோபுரம்


அகழி அமைப்புடன் கருவறை சுற்றுப் பிரகாரம்


இறைவன் கருவறை விமானம்


கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி


நவக்கிரக சந்நிதி


நால்வர் சந்நிதி


மகாவிஷ்ணு


சங்கர நாராயணர்