Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தடுத்து ஆட்கொண்ட நாதர் கோவில், திருவெண்ணைநல்லூர்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவெண்ணைநல்லூர்
இறைவன் பெயர்தடுத்து ஆட்கொண்ட நாதர், கிருபாபுரீஸ்வரர், வேணுபுரீஸ்வரர்
இறைவி பெயர்வேற்கண்ணி அம்மை, மங்களாம்பிகை
பதிகம்சுந்தரர் - 1
எப்படிப் போவது மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருக்கோவிலூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 20 கி.மி. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் பெண்ணையாற்றின் தென்கரையில் திருவெண்ணைநல்லூர் தலம் அமைந்துள்ளது. திருக்கோவிலூரில் இருந்து அரசூர் செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும் திருக்கோவிலூரில் இருந்து இங்கு வர நேரடிப் பேருந்துகள் உள்ளன.
ஆலய முகவரி அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவெண்ணைநல்லூர் அஞ்சல்
திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
PIN - 607203
Tiruvennainallur route map

விழுப்புரத்தில் இருந்து திருவெண்ணைநல்லூர் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

இவ்வாலயம் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு இராஜகோபுரத்துடனும் இரண்டு பிராகாரங்களுடனும் அமைந்துள்ளது. கோபுரம் கடந்து உள்ளே நுழைந்தால் சுந்தரர் வழக்கு நடந்த "வழக்கு தீர்த்த மண்டபம்" உள்ளது. அடுத்து செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமர விநாயகர், பலிபீடம் ஆகியவை உள்ளன. நேரே உயரத்தில், மேலே, சுந்தரருக்கு இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தந்த விமானக் கோயில் உள்ளது. அதற்கு எதிரில் கீழே சுந்தரர் சந்நிதி உள்ளதையும் காணலாம். இவ்வுருவத்தில் சுந்தரர் கையில் ஓலையுடன் காட்சியளிக்கிறார். இத்தல மூலவர் சுயம்பு லிங்கமாக கிருபாபுரீஸ்வரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அம்மன் மங்களாம்பிகை சந்நிதியும் கிழக்கு நோக்கியே உள்ளது. கோவிலின் தென்புறம் தண்டதீர்த்தம் உள்ளது. உட்பிராபாரத்தில் பொள்ளாப் பிள்ளையார், முருகன், சுந்தரர் சந்நிதிகள் உள்ளன.

கோஷ்ட மூர்த்தங்களாகப் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. வெளிச்சுற்றில் அறுபத்துமூவர் திருமேனிகளையடுத்து வரிசையாக சப்தமாதர்களும், சம்பந்தர், மகாவிஷ்ணு, அருணந்திசிவம், மெய்கண்டதேவர் திருமேனிகளும் உள்ளன. உட்புறத் தூண்களில் பைரவர், தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் உள்ளன.

இளைவன் நஞ்சுண்ட காலத்தில் அந்நஞ்சு அவரை துன்புறுத்தாமலிருக்க உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணெயால் கோட்டை கட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிலிருந்து தவம் செய்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய்நல்லூர் எனப் பெயர் பெற்றதெனத் தலபுராணம் கூறுகிறது.

இறைவன் சிவபெருமான் சுந்தரரை தடுத்தாட்கொண்ட சிறப்புடையது இத்தலம். இறைவன் முதிய வேதியராய் வந்து வழக்குரைத்து சுந்தரர் தனக்கு அடிமை என்று நிரூபித்து தன்னுடன் அழைத்துச் சென்று அவரை ஆட்கொண்டார். இறைவன் அடியெடுத்துத் தர சுந்தரர் "பித்தா பிறைசூடி" என்ற திருப்பதிகத்தை அருளிய தலம். தலத்தின் பெயர் திருவெண்ணெய்நல்லூர் என்றும் கோவிலின் பெயர் அருட்டுறை என்றும் பதிகத்தில் குறிப்பிடப் பெறுகிறது.

அருணகிரிநாதர் இத்தலத்தில் முருகப் பெருமான் மயில்மீது நடனம் புரிதலைக் கண் குளிரக் கண்டு திருப்புகழ் ஒன்றும் பாடியுள்ளார்.

சுந்தரர் பாடிய இத்தலப் பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இவர் பாடிய முதல் பதிகம் என்ற சிறப்பும் இப்பதிகத்திற்கு உண்டு.

பித்தாபிறை சூடீபெரு மானேஅரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. 

நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப்
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன்
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆயாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. 

மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப்
பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி
மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அன்னேஉனக் காளாயினி அல்லேன்என லாமே. 

முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ
கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ
செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அடிகேளுனக் காளாயினி அல்லேன்என லாமே.

பாதம்பணி வார்கள்பெறும் பண்டமது பணியாய்
ஆதன்பொரு ளானேன்அறி வில்லேன்அரு ளாளா
தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆதீஉனக் காளாயினி அல்லேன்என லாமே. 

தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ
எண்ணார்புரம் மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய்
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அண்ணாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. 

ஊனாய்உயிர் ஆனாய்உடல் ஆனாய்உல கானாய்
வானாய்நிலன் ஆனாய்கடல் ஆனாய்மலை ஆனாய்
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆனாயுனக் காளாயினி அல்லேன்என லாமே.

ஏற்றார்புரம் மூன்றும்எரி உண்ணச்சிலை தொட்டாய்
தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வானீர்
ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆற்றாயுனக் காளாயினி அல்லேன்என லாமே. 

மழுவாள்வலன் ஏந்தீமறை ஓதீமங்கை பங்கா
தொழுவார்அவர் துயர்ஆயின தீர்த்தல்உன தொழிலே
செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அழகாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. 

காரூர்புனல் எய்திக்கரை கல்லித்திரைக் கையாற்
பாரூர்புகழ் எய்தித்திகழ் பன்மாமணி உந்திச்
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆரூரனெம் பெருமாற்காள் அல்லேன்என லாமே. 

திருவெண்ணைநல்லூர் கிருபாபுரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


ஆலயத்தின் வெளித் தோற்றம்


வழக்காடு மண்டபம்


கோபுரம் கடந்தவுடன் உள்ள முன் மண்டபம்


வள்ளி தெய்வானையுடன் முருகர்


சப்த கன்னியர்


63 மூவர் அணிவகுப்பு


நால்வர் சந்நிதி


இறைவன் சந்நிதி விமானம்


ஆலயத்தின் உட்புறத் தோற்றம்


தலவிருட்சம் மூங்கில்


நவக்கிரகங்கள் பூஜித்த ஜோதிலிங்கேஸ்வரர்