Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

வாமனபுரீஸ்வரர் கோவில், திருமாணிகுழி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருமாணிகுழி
இறைவன் பெயர்வாமனபுரீஸ்வரர், மாணிக்கவரதர், உதவிநாயகர்
இறைவி பெயர்அம்புஜாட்சி, மாணிக்கவல்லி, உதவிநாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது கடலூர் நகரில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் திருமாணிகுழி உள்ளது.
1) கடலூரில் இருந்து குமணங்குளம் செல்லும் நகரப் பேருந்து எண் 14 திருமாணிகுழி வழியாகச் செல்கிறது. இதில் வந்தால் கோயிலின் வாயிலிலேயே இறங்கலாம்.
2) கடலூரில் இருந்து திருவஹீந்திபுரம் வழியாக நடுவீரப்பட்டி செல்லும் பேருந்தில் சென்று திருமாணிகுழி நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மி. சென்றால் சாலை ஓரத்திலுள்ள கோவில் அடையலாம்.
3) கடலூரில் இருந்து திருவஹீந்திபுரம், பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் பேருந்தில் சென்று திருமாணிகுழி நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மி. சென்றால் சாலை ஓரத்திலுள்ள கோவில் அடையலாம்.
ஆலய முகவரி அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோவில்
திருமாணிகுழி அஞ்சல், வழி திருவகீந்திரபுரம்
கடலூர் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN - 607401

இவ்வாலயம் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4-30 முதலி இரவு 8-30 வரையிலும் திறந்திருக்கும்.
Tirumanikuzhi route map

கடலூரில் இருந்து திருமாணிக்குழி செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

கோவிலின் அமைப்பு: தலமும் கோயிலும் கெடில ந்தியின் தென் கரையில், காப்பர் குவாரி என்று அழைக்கப்படும் மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ளன. கிழக்கு நோக்கிய இந்த ஆலயத்திற்கு 5 நிலை ராஜகோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் செப்புக் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். தெற்குப் வெளிப் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதியும், வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் சுப்பிரமணியர் சந்நிதியும் அமைந்துள்ளன. வெளிப் பிரகாரத்திலுள்ள பக்கவாட்டு வாயில் வழியே உள் பிரகாரத்தை அடையலாம். இந்த உள் பிரகாரத்தில் விநாயகர், 63 மூவர், சப்தமாதாக்கள், யுகலிங்கங்கள், பஜலட்சுமி சந்நிதிகள் ஆகியவை அமைந்துள்ளன. உள்ளே கருவறையில் மூலவர் சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார்.

இந்த ஆலயத்தின் ஒரு சிறப்பம்சம் இங்கு மூலவரை நாம் நேரடியாக தரிசிப்பது இயலாது. ஏனெனில் எந்நேரமும் மூலவர் சந்நிதியில் திரை போடப்பட்டிருக்கும். இறைவனும், இறைவியும் எப்போதும் சிவசக்தியாக சேர்ந்திருக்கும் தலமாக இது கருதப்படுவதால் அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்கும் பொருட்டு திரையிடப்பட்டிருக்கிறது. இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது. மேலும் மகாவிஷ்ணு மாணியாக, அதாவது பிரம்மசாரியாக வழிபடுவதற்கு இடையூறு இல்லாமல் காவலாக பீமருத்திரர் உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. தீபாராதனையின் போது மட்டும் திரையை விலக்கி சற்று நேரம் மட்டும் இறைவனை தரிசிக்க அர்ச்சகர்கள் வாய்ப்பு தருவார்கள். அச்சமயம் மட்டுமே சிறிய ஆவுடையார் மீதுள்ள சிறிய சிவலிங்கத் திருமேனியை தரிசிக்கும் பேறு கிடைக்கும். இறைவனை மறைத்திருக்கும் திரைச்சீலையில் பீமருத்திரர் உருவம் சித்திரமாய் தீட்டப்பட்டுள்ளது. ஆலய வழிபாடுகளில் அர்ச்சனை, பூஜை முதலியன முதலில் பீமருத்திரருக்குத் தான் நடைபெறும். பின்னர் அவர் அனுமதி பெற்று மூலவருக்கு தீபாராதனை நடைபெறும்.

இத்தலத்தின் தலமரமாக கொன்றையும், தீர்த்தங்களாக சுவேத தீர்த்தம் மற்றும் கெடில நதியும் விளங்குகின்றன.

புராண வரலாறு: திருமால் பிரம்மசாரியாக வந்து மாகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு அவனையழித்த பழிதீர இங்கு வந்து சிவபெருமானை ஒரு குழி போன்ற இடத்தில் அமர்ந்து வழிபட்டார் ஆகையால் இக்கோயில் மாணிகுழி என்று பெயர் பெற்றது. (மாணி என்றால் பிரம்மசாரி). இத்தலத்தை சம்பந்தர் உதவிமாணிகுழி என்றே தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார். இதனால் உதவி என்பது ஊர்ப் பெயராக இருந்து, காலப்போக்கில் மாணிகுழி என்னும் கோயிற் பெயரே ஊருக்குப் பெயராகியிருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலும் வடநாட்டு வணிகன் அத்ரி என்பவன் இப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது திருடர்கள் கொள்ளையடிக்க முற்பட, அவன் இறைவனை தியானித்து உதவி கேட்டு முறையிட, இறைவனும் அவ்வணிகனை திருடர்களிடமிருந்து காத்து உதவி புரிந்தார். இதனால் இத்தலம் உதவி என்றும் இறைவன் உதவிநாயகர் என்றும் இறைவி உதவி நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இதற்கு மேலும் சான்றாகக் கல்வெட்டிலும் இத்தலம் "உதவி" என்றே குறிக்கப் பெறுகின்றது.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் ஆறுமுகப்பெருமான் 12 திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்து தனது தேவியர் இருவரும் உடன் நிற்க கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மயில் வடக்கு நோக்கி உள்ளது. திருவாசி இல்லை.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

பொன்னியல் பொருப்பரையன் மங்கையொரு பங்கர் புனல் தங்குசடைமேல்
வன்னியொடு மத்தமலர் வைத்தவிறல் வித்தகர் மகிழ்ந்து உறைவிடம்
கன்னி இளவாளை குதிகொள்ள இள வள்ளை படர் அள்ளல் வயல்வாய்
மன்னி இளமேதிகள் படிந்து மனை சேர் உதவிமாணிகுழியே. 

சோதிமிகு நீறதுமெய் பூசியொரு தோலுடை புனைந்துதெருவே
மாதர்மனை தோறும்இசை பாடிவசி பேசும்அர னார்மகிழ்விடந்
தாதுமலி தாமரைம ணங்கமழ வண்டுமுரல் தண்பழனமிக்
கோதமலி வேலைபுடை சூழுலகில் நீடு உதவிமாணிகுழியே.

அம்பனைய கண்ணுமை மடந்தையவள் அஞ்சிவெரு வச்சினமுடைக்
கம்பமத யானையுரி செய்தஅர னார்கருதி மேயவிடமாம்
வம்புமலி சோலைபுடை சூழமணி மாடமது நீடியழகார்
உம்பரவர் கோன்நகரம் என்ன மிக மன் உதவிமாணிகுழியே. 

நித்தநிய மத்தொழில னாகிநெடு மால்குறள னாகிமிகவுஞ்
சித்தமதொ ருக்கிவழி பாடுசெய நின்றசிவ லோகனிடமாங்
கொத்தலர் மலர்ப்பொழிலின் நீடுகுல மஞ்ஞைநடம் ஆடலதுகண்
டொத்தவரி வண்டுகள் உலாவி இசை பாடு உதவிமாணிகுழியே. 	

மாசில்மதி சூடுசடை மாமுடியர் வல்லசுரர் தொன்னகரமுன்
நாசமது செய்துநல வானவர்க ளுக்கருள்செய் நம்பனிடமாம்
வாசமலி மென்குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னியழகார்
ஊசல்மிசை யேறி இனிதாக இசை பாடு உதவிமாணிகுழியே. 

மந்தமலர் கொண்டுவழி பாடுசெயு மாணியுயிர் வவ்வமனமாய்
வந்தவொரு காலனுயிர் மாளவுதை செய்தமணி கண்டனிடமாஞ்
சந்தினொடு காரகில் சுமந்துதட மாமலர்கள் கொண்டுகெடிலம்
உந்துபுனல் வந்துவயல் பாயும் மணம் ஆர் உதவிமாணிகுழியே. 

எண்பெரிய வானவர்கள் நின்றுதுதி செய்ய இறையே கருணையாய்
உண்பரிய நஞ்சதனை உண்டு உலகம் உய்யஅருள் உத்தமனிடம்
பண்பயிலும் வண்டுபல கெண்டிமது உண்டுநிறை பைம்பொழிலின் வாய்
ஒண்பலவின் இன்கனி சொரிந்துமணம் நாறு உதவிமாணிகுழியே. 

எண்ணம் அது இன்றி எழிலார் கைலை மாமலை யெடுத்ததிறலார்
திண்ணிய அரக்கனை நெரித்து அருள் புரிந்த சிவலோகனிடமாம்
பண்ணமரும் மென்மொழியின் ஆர் பணை முலைப் பவளவாய் அழகு அது ஆர்
ஒண்ணுதல் மடந்தையர் குடைந்து புனலாடு உதவிமாணிகுழியே. 

நேடும் அயனோடுதிரு மாலும் உணரா வகை நிமிர்ந்து முடிமேல்
ஏடுலவு திங்கள்மத மத்தம் இதழிச்சடை எம் ஈசனிடமாம்
மாடுலவு மல்லிகை குருந்துகொடி மாதவி செருந்தி குரவின்
ஊடுலவு புன்னைவிரி தாதுமலி சேரு உதவிமாணிகுழியே. 

மொட்டை அமண் ஆதர் முது தேரர் மதி இல்லிகள் முயன்றன.படும்
முட்டைகள் மொழிந்தமொழி கொண்ட் அருள் செய்யாத முதல்வன் தன் இடமாம்
மட்டை மலி தாழை இளநீர் முதிய வாழையில் விழுந்த அதரில்
ஒட்டமலி பூகம்நிரை தாறு உதிர் ஏறு உதவிமாணிகுழியே. 

உந்திவரும்  தண்கெடிலம் ஓடுபுனல் சூழ் உதவிமாணிகுழி மேல்
அந்திமதி சூடிய எம்மானை அடி சேரும் அணி காழிநகரான்
சந்தம்நிறை தண்டமிழ் தெரிந்து உணரும் ஞானசம்பந்தன் அதுசொல்
முந்தி இசை செய்து மொழிவார்கள் உடையார்கள் நெடு வான நிலனே. 

மாணிகுழி ஆலயம் புகைப்படங்கள்

5 tier tower

ஆலயத்தின் 5 நிலை இராஜகோபுரம்

Tirumanikuzhi route map

பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம்

மாணிகுழி வாமனபுரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


கொடிமரம் - மற்றொரு தோற்றம்


வெளிப் பிரகாரத்தில் விநாயகர் சந்நிதி


லிங்கோத்பவர்
இருபுறமும் மகாவிஷ்ணு, பிரம்மா


63 நாயன்மார்கள்


வெளிப் பிரகாரம்


உதவிநாயகி சந்நிதி


தலவிருட்சம்


தட்சிணாமூர்த்தி