Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

பாடலீஸ்வரர் கோவில், திருப்பாதிரிபுலியூர்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருப்பாதிரிபுலியூர் (தற்போது கடலூர் நகரின் ஒரு பகுதி)
இறைவன் பெயர்பாடலீஸ்வரர், பாடலேஸ்வரர், தோன்றாத்துணை நாதர்
இறைவி பெயர்பெரியநாயகி, தோகைநாயகி, அருந்தவநாயகி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருப்பாதிரிபுலியூர் கடலூர் நகரின் ஒரு பகுதி. திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவிலும், கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்திலும் கோயில் உள்ளது. நகரப் பேருந்து வசதிகள் உண்டு.
ஆலய முகவரி அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோவில்
திருப்பாதிரிபுலியூர் அஞ்சல்
கடலூர்
கடலூர் மாவட்டம்
PIN - 607002
Tirupathiripuliyur route map

கடலூர் நகரில் திருப்பாதிரிபுலியூர் ஆலயம் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

தல வரலாறு: ஒரு முறை கைலாயத்தில் பரமனும், பார்வதியும் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே. ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பெருமானின் திருக்கண்களை பார்வதி தன் திருக்கரங்களால் மூடினாள். இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின. இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி தனக்கு மன்னிப்பு வேண்டினாள். அதற்கு இறைவன் சிவபெருமான் இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும் அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார். அதுபோல் இறைவியும் பல தலங்களைத் தரிசித்துவிட்டு பாதிரி வனமாகத் திகழ்ந்த இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும், இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி அரூபமாக (உருவமில்லாமல்) இறைவனை பூசித்து பேறு பெற்றாள். ஆலயத்தில் இறைவன் கருவறை சுற்றி வரும்போது கஜலட்சுமி சந்நிதியை அடுத்து, துர்க்கை கோஷ்ட மூர்த்தமுள்ள இடத்தில் அம்பிகை அருவ வடிவில் தவம் செய்த இடம் அருந்தவநாயகி சந்நிதியாகப் போற்றப்பட்டு வருகின்றது. சந்நிதியில் உருவம் ஏதும் இருக்காது. பீடம் மட்டுமே உள்ளது.

கோவில் அமைப்பு: ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இராஜகோபுரத்திற்கு பக்கத்தில் சிவகரதீர்த்தம் நல்ல படித்துறைகளுடன் உள்ளது. முன மண்டபமும் அதையடுத்து 5 நிலை இராஜகோபுரமும் உள்ளது. கோபுரத்தில் ஏராளமான சுதை சிற்பங்கள் உள்ளன. வாயிலைக் கடந்து உட்சென்றால் உயரத்தில் பலிபீடம், செப்புக்கவசமிட்ட கொடிமரம், முன்னால் நந்தி முதலியவைகளைத் தரிசிக்கலாம். வெளிப்பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. வெளிப்பிராகார வலம் முடித்து துவார விநாயகர், துவார சுப்பிரமணியர் தொழுது 2வது வாயிலைக் கடந்து இடப்புறமாகத் திரும்பினால் உள்சுற்றில் சந்திரனும் அதையடுத்து திருநாவுக்கரசர் உற்சவமூர்த்தமும், அடுத்து மூலமூர்த்தமும் தனித்தனி சந்நிதிகளாக உள்ளன. அமர்ந்த கோலத்துடன் அப்பர் கைகூப்பி உழவாரத்துடன் காட்சி தருகின்றார். திருநாவுக்கரசரை உட்கார்ந்த நிலையில் இருப்பது இந்த சிவ தலத்தில் மட்டுமே காண முடியும். உட்பிரகாரம் சுற்றி வரும்போது 63 மூவர் சந்நிதியை அடுத்து தலவிநாயகர் கன்னி விநாயகர் என்ற பெயருடன் காட்சி தருகிறார். அம்பிகை இறைவனை வழிபட்டபோது உதவிசெய்தமையால் கையில் பாதிரி மலருடன் காட்சி தருகிறார். உள் சுற்றில் உற்சவத் திருமேனிகளின் சந்நிதி, வியாக்ரபாதர், அகத்தியர் முதலியோர் பூசித்த லிங்கங்கள், மீனாட்சி சுந்தரேசர் சந்நிதி, வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள் ஆகியவையும் உள்ளன. தலமரமான ஆதிபாதிரி மரம் கவசமிட்டுக் காக்கப்பட்டு வருகின்றது. துவாரபாலகரைத் தொழுது உட்சென்றால் பாடலேஸ்வரரைத் தரிசிக்கலாம். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்ற இத்தலம் இதுவாகும். இதன் காரணமாகவே பாதிரி மரத்தை தலவிருட்சமாக உள்ள இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றது. பஞ்ச புலியூர் தலங்களில் இத்தலமும் ஒன்று. இத்தலத்தில் ஆறுமுகப் பெருமான் வடக்கு நோக்கிய மயிலின் மீது ஒரு காலை மடித்து அமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். வள்ளி தெய்வானை இருவரும் அருகே நின்ற கோலத்தில் காட்சிதருகின்றனர். அருணகிரிநாதர் இத்தல முருகப்பெருமானை வழிபட்டு பாடல் அருளிச் செய்துள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் இத்தலத்திற்குரியது.

எல்லா சிவன் கோவில்களிலும் பள்ளியறை இறைவியின் சந்நிதியின் அருகில் தான் இருக்கும். பள்ளியறை இல்லாத கோவில்களும் உண்டு. (எடுத்துக் காட்டாக திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயத்தைக் கூறலாம்). ஆனால் பள்ளியறை இறைவன் திருக்கோயிலில் அமைந்து, நாள் தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது இத்தலத்தின் தனிச்சிறப்பு.

திருநாவுக்கரசரை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன்(கி.பி 600 -630) சமணர்கள் பேச்சைக் கேட்டு கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளியபோது அப்பர் சுவாமிகள் "கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே" என நமசிவாயப் பதிகம் பாடித் துதிக்க அக்கல்லே தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து கறையேறிட நகர மக்களெல்லாம் அதிசயப்பட்டு அன்பு கொண்டு மகிழ்ந்து வரவேற்கச் சென்றார்கள். இன்றும் அப்பர் கடலிலிருந்து கரையேறிய இடம் "கரையேறவிட்ட குப்பம்" என்னும் பெயரால் சிறந்து விளங்குகிறது. நாவுக்கரசர் பாடிய இப்பதிகம் கீழே காண்க.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே. 

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினனுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே. 

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே. 

இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.

வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.

சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு நல்கு வான்நலன்
குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே. 

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே. 

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே. 

மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே. 

கரையேறிய அப்பர் திருப்பாதிரிப்புலியூர் பாடலேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று "ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய் " எனத் தொடங்கும் பதிகம் பாடி திருப்பாதிரிப்புலியூர் இறைவனைத் தொழுதார். அப் பதிகத்தில் "தோன்றாத்துணையாய் இருந்தனன் தன் அடியோர்களுக்கே" என்று குறிப்பிடுவதால் இத்தல இறைவன் "தோன்றாத்துணை நாதர்" என்னும் பெயரும் பெற்றார்.

ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க் கன்பன் திருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே. 

பற்றாய் நினைந்திடப் போதுநெஞ் சேயிந்தப் பாரைமுற்றுஞ்
சுற்றாய் அலைகடல் மூடினுங் கண்டேன் புகல்நமக்கு
உற்றான் உமையவட் கன்பன் திருப்பா திரிப்புலியூர்
முற்றா முளைமதிக் கண்ணியி னான்றன மொய்கழலே. 

விடையான் விரும்பியென் னுள்ளத் திருந்தான் இனிநமக்கிங்
கடையா அவலம் அருவினை சாரா நமனையஞ்சோம்
புடையார் கமலத் தயன்போல் பவர்பா திரிப்புலியூர்
உடையான் அடியார் அடியடி யோங்கட் கரியதுண்டே. 

மாயமெல் லாமுற்ற விட்டிருள் நீங்க மலைமகட்கே
நேயம் நிலாவ இருந்தா னவன்றன் திருவடிக்கே
தேயமெல் லாநின் றிறைஞ்சுந் திருப்பா திரிப்புலியூர்
மேயநல் லான்மலர்ப் பாதமென் சிந்தையுள் நின்றனவே. 

வைத்த பொருள்நமக் காமென்று சொல்லி மனத்தடைத்துச்
சித்த மொருக்கிச் சிவாய நமவென் றிருக்கினல்லால்
மொய்த்த கதிர்மதி போல்வா ரவர்பா திரிப்புலியூர்
அத்தன் அருள்பெற லாமோ அறிவிலாப் பேதைநெஞ்சே. 

கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளாற்
திருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே. 

எண்ணா தமரர் இரக்கப் பரவையுள் நஞ்சமுண்டாய்
திண்ணார் அசுரர் திரிபுரந் தீயெழச் செற்றவனே
பண்ணார்ந் தமைந்த பொருள்கள் பயில்பா திரிப்புலியூர்க்
கண்ணார் நுதலாய் கழல்நங் கருத்தில் உடையனவே. 

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே. 

மண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற் றேழுலகும்
விண்பால் திசைகெட் டிருசுடர் வீழினும் அஞ்சல்நெஞ்சே
திண்பால் நமக்கொன்று கண்டோந் திருப்பா திரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே. 	

திருந்தா அமணர்தந் தீநெறிப் பட்டுத் திகைத்துமுத்தி
தருந்தா ளிணைக்கே சரணம் புகுந்தேன் வரையெடுத்த
பொருந்தா அரக்கன் உடல்நெரித் தாய்பா திரிப்புலியூர்
இருந்தாய் அடியேன் இனிப்பிற வாமல்வந் தேன்றுகொள்ளே. 
திருப்பாதிரிபுலியூர் பாடலேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்தின் வெளிப்புறத் தோற்றம்

பலிபீடம், கொடிமரம், நந்தி

தல விருட்சம் பாதிரி மரம்

சிவகரதீர்த்தம்