Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

பனங்காட்டீசர் கோவில், புறவார் பனங்காட்டூர்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்புறவார் பனங்காட்டூர் (தற்போது பனையபுரம் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்பனங்காட்டீசர்
இறைவி பெயர்சத்யாம்பிகை, புரவம்மை, மெய்யாம்பாள்
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது விழுப்புரத்தில் இருந்து 8 கி.மி. தொலைவிலும், செங்கல்பட்டு - விழுப்புரம் ரயில் பாதையில் உள்ள முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மி. தொலைவிலும் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. அருகில் உள்ள நகரம் விழுப்புரம். விழுப்புரத்திலிருந்து திருக்கானூர் வழியாக புதுச்சேரி செல்லும் பேருந்தில் சென்றால் கோயிலருகில் இறங்கலாம்.

திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் விக்கரவாண்டியைக் கடந்தவுடன் பண்ருட்டி செல்ல சாலை இடதுபுறம் பிரியும். அச்சாலையில் சென்றால் பனயபுரம் கூட்டு ரோடு வரும். இங்கு புதுச்சேரி செல்ல இடதுபுறம் திரும்பினால் ஆலயம் மிக அருகிலுள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு பனங்காட்டீசர் திருக்கோவில்
பனையபுரம் அஞ்சல், முண்டியம்பாக்கம்
விழுப்புரம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
PIN - 605603
Panayapuram route map

விழுப்புரத்தில் இருந்து புறவார் பனங்காட்டூர் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

தல வரலாறு: சிவபெருமானை நிந்தித்துத் தக்கன் செய்த வேள்விக்குச் சென்று அவிர்ப்பாகம் உண்ட அனைத்துத் தேவர்களும் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாயினர். அவர்களில் சூரியனும் ஒருவன். அகோர வீரபத்திரர் சிவபெருமான் கட்டளைப்படி தக்கனது வேள்விச் சாலைக்குச் சென்று தேவர்களுக்குத் தண்டனை தந்தார். தண்டனையால் சூரியன் ஒளியிழந்தான். தான் செய்த தவறுக்கு வருந்தி சூரியன் சிவபெருமானைப் பல தலங்களிலும் வழிபாடுகள் செய்து உலகனைத்திற்கும் ஒளியூட்டும் தனது பழைய உருவத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றான். சூரியன் வழிபட்ட தலங்களில் புறவார் பனங்காட்டூர் என்ற் இத்தலமும் ஒன்றாகும். ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாள் காலையிலும் சூரிய கதிர்கள் முதலில் சுவாமி மீதும், பின்பு அம்பிகை மீதும் விழுகின்றன.

கோவில் அமைப்பு: 4 நிலைகளையுடைய ஒரு சிறிய கோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் நுழைந்து உள் சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். வெளிப்பிராகாரத்தில் விநாயகர், ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. பக்கத்தில் தலமரமாகிய பனை மரங்கள் மூன்று உள்ளன. நவக்கிரக சந்நிதியும் வெளிப் பிரகாரத்திலுள்ளது. உள் வாயில் கடந்து சென்றால் சுவாமி சந்நிதியை அடையலாம். கருவறை சுற்ற்ப் பிரகாரத்தில் விநாயகர், அறுபத்துமூவர் சிலா ரூபங்கள் உள்ளன. இவற்றில் திருநீலகண்டர் தம் மனைவியுடன் கூடி, இருவருமாகத் தண்டினைப் பிடித்தவாறே கைகூப்பி நிற்கும் அமைப்பு காணத்தக்கது. மேலும் உள சுற்ற்றில சப்தமாதர்கள், ரிஷபாரூடர், மகாவிஷ்ணு, கஜலஷ்மி, நால்வர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர், நடராஜர், சோமாஸ்கந்தர் முதலிய சன்னிதிகள் உள்ளன.

அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதி நுழைவாயிலில் துவாரபாலகியர் சுதையில் உள்ளனர். அம்பாள் சத்யாம்பிகை நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்.

பனை மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட 5 தலங்களில் பனையபுரம் என்கிற புறவார் பனங்காட்டூர் தலமும் ஒன்றாகும்.

திருஞானசம்பந்தர் பாடியருளிய இத்தலத்திற்கான பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகத்திலுள்ள 10 பாடல்களையும் பாடுவர்கள சிவலோகம் சேர்வர் என்று தன் பதிகத்தின் 10வது பாடலில் குறிப்பிடுகிறார்.

1. விண்ண மர்ந்தன மும்ம தில்களை வீழ வெங்கணை யாலெய் தாய்விரி
பண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்
பெண்ண மர்ந்தொரு பாக மாகிய பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடைக்
கண்ணமர்ந் தவனே கலந்தார்க் கருளாயே.

2. நீடல் கோடல் அலரவெண் முல்லை நீர்ம லர்நிரைத் தாத ளஞ்செயப்
பாடல் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்த்
தோடி லங்கிய காத யன்மின் துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்
ஆடுஞ் சங்கரனே அடைந்தார்க் கருளாயே.

3. வாளை யுங்கய லும்மிளிர் பொய்கை வார்பு னற்கரை யருகெ லாம்வயற்
பாளை யொண்கமுகம் புறவார் பனங்காட்டூர்ப்
பூளை யுந்நறுங் கொன்றை யும்மத மத்த மும்புனை வாய்க ழலிணைத்
தாளையே பரவுந் தவத்தார்க் கருளாயே.

4. மேய்ந்தி ளஞ்செந்நென் மென்க திர்கவ்வி மேற்ப டுகலின் மேதி வைகறை
பாய்ந்த தண்பழனப் புறவார் பனங்காட்டூர்
ஆய்ந்த நான்மறை பாடி யாடும் அடிக ளென்றென் றரற்றி நன்மலர்
சாய்ந்தடி பரவுந் தவத்தார்க் கருளாயே.

5. செங்க யல்லொடு சேல்செ ருச்செயச் சீறி யாழ்முரல் தேனி னத்தொடு
பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்க்
கங்கை யும்மதி யுங்க மழ்சடைக் கேண்மை யாளொடுங் கூடி மான்மறி
அங்கை யாடலனே அடியார்க் கருளாயே.

6. நீரி னார்வரை கோலி மால்கடல் நீடி யபொழில் சூழ்ந்து வைகலும்
பாரினார் பிரியாப் புறவார் பனங்காட்டூர்க்
காரி னார்மலர்க் கொன்றை தாங்கு கடவு ளென்றுகை கூப்பி நாடொறும்
சீரினால் வணங்குந் திறத்தார்க் கருளாயே.

7. கைய ரிவையர் மெல்வி ரல்லவை காட்டி யம்மலர்க் காந்த ளங்குறி
பையரா விரியும் புறவார் பனங்காட்டூர்
மெய்ய ரிவையொர் பாக மாகவும் மேவி னாய்கழ லேத்தி நாடொறும்
பொய்யிலா வடிமை புரிந்தார்க் கருளாயே.

8. தூவி யஞ்சிறை மெல்ந டையன மல்கி யொல்கிய தூமலர்ப் பொய்கைப்
பாவில் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்
மேவி யந்நிலை யாய ரக்கன தோள டர்த்தவன் பாடல் கேட்டருள்
ஏவியெம் பெருமான் என்பவர்க் கருளாயே.

9. அந்தண் மாதவி புன்னை நல்ல அசோக மும்மர விந்தம் மல்லிகை
பைந்தண் ஞாழல்கள் சூழ்புறவார் பனங்காட்டூர்
எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன் என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர்
சந்தம் ஆயவனே தவத்தார்க் கருளாயே.

10. நீண மார்முரு குண்டு வண்டினம் நீல மாமலர் கவ்வி நேரிசை
பாணில் யாழ்முரலும் புறவார் பனங்காட்டூர்
நாண ழிந்துழல் வார்ச மணரும் நண்பில் சாக்கிய ரும்ந கத்தலை
ஊணுரி யவனே உகப்பார்க் கருளாயே.

மையி னார்மணி போல்மி டற்றனை மாசில் வெண்பொடிப் பூசும் மார்பனைப்
பைய தேன்பொழில்சூழ் புறவார் பனங்காட்டூர்
ஐய னைப்புக ழான காழியுள் ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன்
செய்யுள் பாடவல்லார் சிவலோகஞ் சேர்வாரே.

புறவார் பனங்காட்டூர் பனங்காட்டீசர் ஆலயம் புகைப்படங்கள்


ஆலயத்தின் இராஜகோபுரம்


பிரம்மா


சிவசூரியனார்


திருநீலகண்டர், அவர் மனைவி


ஆறுமுகனார்


சண்முகர், சனீஸ்வரர்


கொடிமரம், பலிபீடம், நந்தி


நால்வர் சந்நிதி


சத்யாம்பிகை கோவில்


கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி