Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

உச்சிநாதேசுவரர் கோவில், திருநெல்வாயல்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருநெல்வாயல் (தற்போது சிவபுரி என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்உச்சிநாதேசுவரர்
இறைவி பெயர்கனகாம்பிகை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது சிதம்பரத்தில் இருந்து அண்ணாமலை பல்கலைக் கழகம் நுழைவு வாயில் வரை சென்று, பல்கலைக் கழகத்திற்குள் நுழையாமல் வலப்புறமாகத் திரும்பி கவரப்பட்டு சாலையில் சென்று, அது பிரதான சாலையில் சேருமிடத்தில் (கவரப்பட்டு சாலை இடப்புறமாகத் திரும்பிவிட) நேரே பேராம்பட்டு செல்லும் எதிர்ச்சாலையில் சென்றால் சிவபுரியை அடையலாம். சிதம்பரத்தில் இருந்து தென்கிழக்கில் சுமார் 3 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு உச்சிநாதேசுவரர் திருக்கோவில்
சிவபுரி
சிவபுரி அஞ்சல்
வழி அண்ணாமலை நகர்
சிதம்பரம் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN - 608002

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் ஆலயம் காட்சி அளிக்கிறது. கோவிலுக்கு எதிரே நீராழி மண்டபத்துடனுள்ள கிருபாசமுத்திரம் என்ற திருக்குளம் ஆலயத்தின் தீர்த்தமாக விளங்குகிறது. உள் பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், பஞ்சலிங்கங்கள், சனிபகவான், சந்திரன் முதலிய சந்நிதிகள் உள்ளன. வலம் முடித்து முன்மண்டபம் சென்றால் வலதுபுறம் நவக்கிரக சந்நிதியும் பள்ளியறையும் உள்ளன. துவாரபாலகரைத் தொழுது வாயிலைக் கடந்தால் வலதுபுறம் நின்ற திருக்கோலத்துடன் காட்சி தரும் அம்பாள் சந்நிதி உள்ளது. நடராசசபையில் உள்ளது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். சிவலிங்கத்தின் பின்புறம் பார்வதி, பரமேஸ்வரர் திருவுருவங்கள் உள்ளன.

திருஞானசம்பந்தருக்கு உச்சிப் பொழுதில் உணவு அளித்துப் பசியை போக்கியதால் இறைவனுக்கு உச்சிநாதேஸ்வரர் என்று பெயர். சம்பந்தர் திருவேட்களத்தில் தங்கி இருந்த நாட்களில் இத்தலத்திற்கு வந்து வழிபட்ட தலம்.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஓரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.

தினந்தோறும் 5 கால பூஜைகள் இவ்வாலயத்தில் திடைபெறுகிறது. வைகாசி விசாகத்தன்று கோவிலுக்கு எதிரே உள்ள திருக்குளத்தில் தீர்த்தவாரியும், மாலையில் பஞ்சமூர்த்திகளின் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

திருஞானசம்பந்தர் பாடியருளிய இத்தலத்திற்கான இப்பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

புடையி னார்புள்ளி கால்பொ ருந்திய
மடையி னார்மணி நீர்நெல் வாயிலார்
நடையி னால்விரற் கோவ ணந்நயந்
துடையி னாரெம துச்சி யாரே. 

வாங்கி னார்மதில் மேற்க ணைவெள்ளந்
தாங்கி னார்தலை யாய தன்மையர்
நீங்கு நீரநெல் வாயி லார்தொழ
ஓங்கி னாரெம துச்சி யாரே. 

நிச்ச லேத்தும்நெல் வாயி லார்தொழ
இச்சை யாலுறை வாரெம் மீசனார்
கச்சை யாவதோர் பாம்பி னார்கவின்
இச்சை யாரெம துச்சி யாரே. 

மறையி னார்மழு வாளி னார்மல்கு
பிறையி னார்பிறை யோடி லங்கிய
நிறையி னாரநெல் வாயிலார் தொழும்
இறைவ னாரெம துச்சி யாரே.

விருத்த னாகிவெண் ணீறு பூசிய
கருத்த னார்கன லாட்டு கந்தவர்
நிருத்த னாரநெல் வாயில் மேவிய
ஒருத்த னாரெம துச்சி யாரே. 

காரி னார்கொன்றைக் கண்ணி யார்மல்கு
பேரி னார்பிறை யோடி லங்கிய
நீரி னாரநெல் வாயிலார் தொழும்
ஏரி னாரெம துச்சி யாரே. 

ஆதி யாரந்த மாயி னார்வினை
கோதி யார்மதில் கூட்ட ழித்தவர்
நீதி யாரநெல் வாயி லார்மறை
ஓதி யாரெம துச்சி யாரே. 

பற்றி னான்அரக் கன்க யிலையை
ஒற்றி னாரொரு கால்வி ரலுற
நெற்றி யாரநெல் வாயி லார்தொழும்
பெற்றி யாரெம துச்சி யாரே. 

நாடி னார்மணி வண்ணன் நான்முகன்
கூடி னார்குறு காத கொள்கையர்
நீடி னாரநெல் வாயி லார்தலை
ஓடி னாரெம துச்சி யாரே. 

குண்ட மண்துவர்க் கூறை மூடர்சொல்
பண்ட மாகவை யாத பண்பினர்
விண்ட யங்குநெல் வாயி லார்நஞ்சை
உண்ட கண்டரெம் உச்சி யாரே. 

நெண்ப யங்குநெல் வாயி லீசனைச்
சண்பை ஞானசம் பந்தன் சொல்லிவை
பண்ப யன்கொளப் பாட வல்லவர்
விண்ப யன்கொளும் வேட்கை யாளரே. 

திருநெல்வாயல் உச்சிநாதேசுவரர் ஆலயம் புகைப்படங்கள்


5 நிலை இராஜகோபுரம்


கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி


முருகர் சந்நிதி

திருநெல்வாயல் உச்சிநாதேசுவரர் ஆலயம் புகைப்படங்கள்


மூலவர் கருவறை முன்மண்டபம்


பலிபீடம், நந்தி


மூலவர் உச்சிநாதேசுவரர் சந்நிதி