Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

பால்வண்ண நாதர் கோவில், திருக்கழிப்பாலை

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருக்கழிப்பாலை (தற்போது சிவபுரி என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்பால்வண்ண நாதர்
இறைவி பெயர்வேதநாயகி
பதிகம்திருநாவுக்கரசர் - 5,
திருஞானசம்பந்தர் - 2
சுந்தரர் - 1
எப்படிப் போவது சிதம்பரத்தில் இருந்து 13 கி.மி. தென்கிழக்கே கொள்ளீடம் நதியின் வடகரையில் காரைமேடு என்ற இடத்தில் இருந்து வந்த இந்த சிவஸ்தலம் ஒரு சமயம் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சேதம் அடைந்த போது அருகில் உள்ள திருநெல்வாயல் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் கோவிலின் அருகே ஒரு புதிய ஆலயத்தின் உள்ளே மூலவர் பால்வண்ண நாதர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். திருநெல்வாயல் சிவஸ்தலத்தில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் திருக்கழிப்பாலை ஆலயம் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு பால்வண்ண நாதர் திருக்கோவில்
திருக்கழிப்பாலை - சிவபுரி
சிவபுரி அஞ்சல்
வழி அண்ணாமலை நகர்
சிதம்பரம் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN - 608002

ஆலய அர்ச்சகர் வீடு அருகில் உள்ளது. அவரை தொடர்பு கொண்டு எந்நேரமும் தரிசிக்கலாம்.

இத்தலத்தில் சிவலிங்கப் பெருமான வெண்ணிறமுடையவராக விளங்கிறார். அதனாலேயே இறைவன் பால்வண்ண நாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருட்காட்சி தருகிறார். வன்மீக முனிவர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளார். கொள்ளிட நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் தேவார காலத்து பழைய ஆலயம் அடித்துச் செல்லப்பட்டதால் அக்கோவிலில் இருந்த பால்வண்ணநாதேஸ்வரர் சிதம்பரத்திலிருந்து தென்கிழக்குத் திசையில் சுமார் 5 கி.மி. தொலைவிலுள்ள சிவபுரி என்றும் திருநெல்வாயல் என்றும் வழங்கும் மற்றொரு சிவஸ்தலத்தில் இருந்து தெற்கே தனி ஆலயத்தில் தனது மற்ற பரிவார தேவதைகளுடன் தற்போது எழுந்தருளியுள்ளார்.

3 நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. வாயிலின் இருபுறங்களிலும் அதிகார நந்தியர் துணைவியருடன் தரிசனம் தருகின்றனர். கொடிமரம் ஏதுமில்லை. பிராகாரத்தில் சூரியன், விநாயகர், கிராதமூர்த்தி, மகாவிஷ்ணு, சுப்பிரமணியர், மகாலட்சுமி, நவக்கிரகம், காலபைரவர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. உள்பிரகார நுழைவு வாசலின் இருபுறமும் அதிகார நந்தியர் தமது துணைவியருடன் உள்ளனர். உள் மண்டபத்துள் சென்றால் துவாரபாலகர்களைத் தரிசிக்கலாம். மண்டபத்தின் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. நடராசசபையில் சிவகாமி அம்மையின் திருமேனி தன் தோழியர் இருவர் சூழ ஒரே பீடத்தில் காட்சி தருகிறாள். துவார விநாயகரை, தண்டபாணியைத் தொழுது உட்சென்றால் மூலவர் தரிசனம். பெயருக்கேற்ப வெண்ணிறமாக உள்ளது. மிகச் சிறிய பாணம். மேற்புறம் சதுரமாக, வழித்தெடுத்தாற்போல் நடுவில் பள்ளத்துடன் அதிசயமான அமைப்புடன் இலிங்கத் திருமேனி காட்சி தருகின்றது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது. லிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர். அபிஷேகத்தின்போது பால் மட்டும்தான் இப்பள்ளத்தில் தேங்கும். மற்ற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்குத்தான்.

திருக்கழிப்பாலை பால்வண்ண நாதர் ஆலயம் புகைப்படங்கள்

3 நிலை இராஜகோபுரம்

தலை திரும்பி காட்சியளிக்கும் நந்தி

ஆலயத்தின் உட்புறத் தோற்றம்

வள்ளி தெய்வானையுடன் முருகர்

கோஷ்டத்தில் லிங்கோத்பவர்

கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி