சிவலோக தியாகேசர் கோவில், திருநல்லூர் பெருமணம்
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருநல்லூர் பெருமணம் (தற்போது ஆச்சாள்புரம் என்று வழங்குகிறது) |
| இறைவன் பெயர் | சிவலோக தியாகேசர் |
| இறைவி பெயர் | திருவெண்ணீற்று உமையம்மை |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் பாலம் கடந்து சென்றால் கொள்ளிடம் ஊர் வரும். அங்கிருந்து ஆச்சாள்புரம் செல்லும் கிளைச் சாலையில் சுமார் 8 கி. மி.சென்று இந்த சிவஸ்தலம் அடையலாம். சிதம்பரம், சீர்காழியில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. |
கோவில் அமைப்பு: சிவலோக தியாகேசர் ஆலயம் கிழக்கு நோக்கி ஐந்து நிலைகளை உடைய இராஜ கோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. இராஜ கோபுரத்தின் வாயிலாக உள்ளே நுழைந்தவுடன் நந்தி மண்டபமும் அடுத்து நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன. நூற்றுக்கால் மண்டபத்தில் திருஞானசம்பந்தர் அவர் மனைவி ஸ்தோத்திர பூராணாம்பிகையுடன் மணக்கோலத்தில் தனி சந்நிதியில் காட்சியளிக்கிறார். அதை அடுத்து கிழாக்கு நோக்கிய சிவலோக தியாகேசர் சந்நிதியும் இறைவி திருவெண்ணீற்று உமையம்மை சந்நிதியும் அமைந்துள்ளன.
திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு உமையம்மையே நேரில் வந்து திருநீறு அளித்ததால் அம்பிகைக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற பெயர் ஏற்பட்டது. இறைவியின் சந்நிதியில் குங்குமத்திற்கு பதிலாக திருநீறு தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைப் பூசிகொண்டால் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீடித்திருக்கும் என்பது நம்பிக்கை. வருடம் தோறும் வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் சம்பந்தரின் திருமண திருவிழா நடக்கிறது.
நமச்சிவாய திருப்பதிகம்: திருஞானசம்பந்தர் தன் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் புரிந்து கொண்டு தம் மனைவியுடன் சுற்றம் சூழ திருநல்லூர் பெருமணம் ஆலயம் வந்து இறைவனைத் துதித்தார். கோவிலில் பெருஞ்சோதி தோன்றி ஒரு வாயிலையும் வகுத்துக் காட்டியது. சம்பந்தர் தன்னுடன் வந்த சுற்றத்தாரையும் அடியார்களையும் சிவசோதியில் கலந்து முக்தி அடையும் படி கூறினார். சிலர் நெருப்புச் சோதியைக் கண்டு தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமச்சிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி நமச்சிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் அச்சோதியில் புகுமாறு சொல்லி, தாமும் தன் மனைவியுடன் சோதியுட் புகுந்து இறைவன் திருவடியைச் சேர்ந்தார். இத்தகைய சிறப்பு மிக்க சம்பவம் நடைபெற்ற பெருமை உடைய சிவஸ்தலம் திருநல்லூர் பெருமணம் சிவலோகத் தியாகேசர் ஆலயம்.
ஆச்சாள்புரத்தில் இருந்து மிக அருகில் உள்ளது நல்லூர் என்ற கிராமம். இந்த நல்லூர் கிராமத்திலிருந்து தான் சம்பந்தர் திருமணத்திறகு பெண் அழைப்பு நடைபெற்றது. இந்த நல்லூர் கிராமத்திலுள்ள சுந்தர கோதண்டராமர் கோவிலும் பார்க்க வேண்டிய இடமாகும். இக்கோவில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. ஜாதக தோஷங்களால் திருமணத் தடை ஏற்படுவர்களுக்கு இந்த சுந்தர கோதண்டராமர் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி புனர்வசு நட்சத்திரத்தில் திருமஞ்சனம் செய்வித்தால் தடைகள் நீங்கி நல்லவரன் அமைந்து நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.
திருஞானசம்பந்தர் பாடியருளிய இத்தலத்திற்கான இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது
கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம் பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில சொல்லூர்ப் பெருமணஞ் சூடல ரேதொண்டர் நல்லூர்ப் பெருமண மேயநம் பானே. தருமண லோதஞ்சேர் தண்கடல் நித்திலம் பருமண லாக்கொண்டு பாவைநல் லார்கள் வருமணங் கூட்டி மணஞ்செயும் நல்லூர்ப் பெருமணத் தான்பெண்ணோர் பாகங்கொண் டானே. அன்புறு சிந்தைய ராகி அடியவர் நன்புறு நல்லூர்ப் பெருமணம் மேவிநின் றின்புறும் எந்தை இணையடி யேத்துவார் துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே. வல்லியந் தோலுடை யார்ப்பது போர்ப்பது கொல்லியல் வேழத் துரிவிரி கோவணம் நல்லிய லார்தொழு நல்லூர்ப் பெருமணம் புல்கிய வாழ்க்கையெம் புண்ணிய னார்க்கே. ஏறுகந் தீரிடு காட்டெரி யாடிவெண் ணீறுகந் தீர்நிரை யார்விரி தேன்கொன்றை நாறுகந் தீர்திரு நல்லூர்ப் பெருமணம் வேறுகந் தீருமை கூறுகந் தீரே. சிட்டப்பட் டார்க்கெளி யான்செங்கண் வேட்டுவப் பட்டங்கட் டுஞ்சென்னி யான்பதி யாவது நட்டக்கொட் டாட்டறா நல்லூர்ப் பெருமணத் திட்டப்பட் டாலொத்தீ ராலெம்பி ரானீரே. மேகத்த கண்டன்எண் தோளன்வெண் ணீற்றுமை பாகத்தன் பாய்புலித் தோலொடு பந்தித்த நாகத்தன் நல்லூர்ப் பெருமணத் தான்நல்ல போகத்தன் யோகத்தை யேபுரிந் தானே. தக்கிருந் தீரன்று தாளால் அரக்கனை உக்கிருந் தொல்க உயர்வரைக் கீழிட்டு நக்கிருந் தீரின்று நல்லூர்ப் பெருமணம் புக்கிருந் தீரெமைப் போக்கரு ளீரே. ஏலுந்தண் டாமரை யானும் இயல்புடை மாலுந்தம் மாண்பறி கின்றிலர் மாமறை நாலுந்தம் பாட்டென்பர் நல்லூர்ப் பெருமணம் போலுந்தங் கோயில் புரிசடை யார்க்கே. ஆதர் அமணொடு சாக்கியர் தாஞ்சொல்லும் பேதைமை கேட்டுப் பிணக்குறு வீர்வம்மின் நாதனை நல்லூர்ப் பெருமணம் மேவிய வேதன தாள்தொழ வீடெளி தாமே. நறும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன் பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை உறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க் கறும்பழி பாவம் அவலம் இலரே.
திருநல்லூர் பெருமணத்தில் இறைவன் சந்நிதியில் சம்பந்தர் அவரும், அவர் மனைவியும் மற்ற சுற்றத்தாருடன் இறைவன் காட்டிய ஜோதியில் இரண்டறக் கலப்பதற்கு முன் சம்பந்தர் பாடிய பதிகம் நமச்சிவாயத் திருப்பதிகம் என போற்றப்படுகிறது.
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே. நம்பு வாரவர் நாவி னவிற்றினால் வம்பு நாண்மலர் வார்மது வொப்பது செம்பொ னார்தில கம்முல குக்கெலாம் நம்பன் நாமம் நமச்சி வாயவே. நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந் தக்கு மாலைகொ டங்கையில் எண்ணுவார் தக்க வானவ ராத்தகு விப்பது நக்கன் நாமம் நமச்சி வாயவே. இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால் நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால் நியமந் தான்நினை வார்க்கினி யான்நெற்றி நயனன் நாமம் நமச்சி வாயவே. கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள் இல்லா ரேனும் இயம்புவ ராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவ ரென்பரால் நல்லார் நாமம் நமச்சி வாயவே. மந்த ரம்மன பாவங்கள் மேவிய பந்த னையவர் தாமும் பகர்வரேல் சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் நந்தி நாமம் நமச்சி வாயவே. நரக மேழ்புக நாடின ராயினும் உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர் விரவி யேபுகு வித்திடு மென்பரால் வரதன் நாமம் நமச்சி வாயவே. இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல் தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும் மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை நலங்கொள் நாமம் நமச்சி வாயவே. போதன் போதன கண்ணனும் அண்ணல்தன் பாதந் தான்முடி நேடிய பண்பராய் யாதுங் காண்பரி தாகி அலந்தவர் ஓதும் நாமம் நமச்சி வாயவே. கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள் வெஞ்சொல் மிண்டர் விரவில ரென்பரால் விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய் நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே. நந்தி நாமம் நமச்சிவா யவெனுஞ் சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல் சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம் பந்த பாசம் அறுக்கவல் லார்களே.இந்தப் பதிகம் தான் திருஞானசம்பந்தர் தன் வாழ்நாளில் பாடிய கடைசி பதிகமாகும்.