Shiva Temples of Tamilnadu
தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
திருமேனியழகர் கோவில், திருமயேந்திரப்பள்ளி
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருமயேந்திரப்பள்ளி |
| இறைவன் பெயர் | திருமேனியழகர், அந்தமிலா அழகர் |
| இறைவி பெயர் | வடிவாம்பிகை |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | சிதம்பரத்தில் சீர்காழி சாலையில் கொள்ளிடம் சென்று, அங்கிருந்து ஆச்சாள்புரம் வழியாக சென்று நல்லூர் - முதலைமேடு ஆகிய ஊர்களைக் கடந்து திருமயேந்திரப்பள்ளி சிவஸ்தலம் அடையலாம். அருகில் உள்ள மற்றொரு சிவஸ்தலம் திருநல்லூர் பெருமணம் (ஆச்சாள்புரம்). 3 கி. மி. தொலைவில் உள்ளது. சிதம்பரம், சீர்காழியிலிருந்து மயேந்திரப்பள்ளிக்கு ஆச்சாள்புரம் வழியாக நகரப் பேருந்துகள் செல்கின்றன. |
| ஆலய முகவரி | அருள்மிகு திருமேனியழகர் திருக்கோவில் மயேந்திரப்பள்ளி மயேந்திரப்பள்ளி அஞ்சல் வழி ஆச்சாள்புரம் சீர்காழி வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 609101 இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும். |
கோவில் அமைப்பு: திருமேனியழகர் ஆலயம் கிழக்கு நோக்கி மூன்று நிலைகளை உடைய சிறிய இராஜ கோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோவில் எதிரே மயேந்திர தீர்த்தம் உள்ளது. இராஜகோபுரம் வழியே உள்ளே சென்று வெளிப் பிரகாரம் வலம் வந்தால் விநாயகர், காசிவிசுவநாதர், திருமால் தேவியருடன், சிவலிங்கம், பைரவர், சூரியன், சந்திரன் சந்நிதிகள் ஆகியவற்றைக் காணலாம். பிரகார வலம் முடித்து அடுத்துள்ள வெளவால் நெத்தி மண்டபத்தை அடைந்தால் வலதுபுறம் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி காட்சி தரும் அம்பாள் சந்நிதி உள்ளது. மேலும் உள்ளே சென்றால் வலதுபுறம் நடராசசபையில் நடராஜருடன் சிவகாமியும் மாணிக்கவாசகரும் உடன் காட்சியளிக்கின்றனர். நேரே சிவலிங்கத் திருமேனியாக மூலவர் கிழக்கு நோக்கு எழுந்தருளியுள்ளார். பங்குனி மாதத்தில் ஒரு வார காலம் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. ஆலயத்தில் நவக்கிரக சன்னதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. விநாயகருக்கு தனிசன்னதி இருக்கிறது. இவருக்கு இருபுறமும் ராகு, கேது இருவரும் உள்ளனர்.
இத்தல இறைவனை சூரியன், சந்திரன், இந்திரன், பிரம்மா ஆகியோர் வழிபட்டுள்ளனர். ஆலயத்தின் தீர்த்தம் மந்திரபுஷ்கரணி. தலமரம் வாழை.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஓரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் சிங்காரவேலனாக ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நீன்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம்
திரைதரு பவளமுஞ் சீர்திகழ் வயிரமுங் கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும் வரைவிலால் எயிலெய்த மயேந்திரப் பள்ளியுள் அரவரை அழகனை அடியிணை பணிமினே. கொண்டல்சேர் கோபுரங் கோலமார் மாளிகை கண்டலுங் கைதையுங் கமலமார் வாவியும் வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியிற் செண்டுசேர் விடையினான் திருந்தடி பணிமினே. கோங்கிள வேங்கையுங் கொழுமலர்ப் புன்னையுந் தாங்குதேன் கொன்றையுந் தகுமலர்க் குரவமு மாங்கரும் பும்வயல் மயேந்திரப் பள்ளியுள் ஆங்கிருந் தவன்கழ லடியிணை பணிமினே. வங்கமார் சேணுயர் வருகுறி யான்மிகு சங்கமார் ஒலிஅகில் தருபுகை கமழ்தரும் மங்கையோர் பங்கினன் மயேந்திரப் பள்ளியுள் எங்கள்நா யகன்றன திணையடி பணிமினே. நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச் சித்திரப் புணரிசேர்த் திடத்திகழ்ந் திருந்தவன் மைத்திகழ் கண்டன்நன் மயேந்திரப் பள்ளியுள் கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே. சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும் இந்திரன் வழிபட இருந்தஎம் மிறையவன் மந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள் அந்தமில் அழகனை அடிபணிந் துய்ம்மினே. சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட நடம்நவில் புரிவினன் நறவணி மலரொடு படர்சடை மதியினன் மயேந்திரப் பள்ளியுள் அடல்விடை யுடையவன் அடிபணிந் துய்ம்மினே. சிரமொரு பதுமுடைச் செருவலி யரக்கனைக் கரமிரு பதுமிறக் கனவரை யடர்த்தவன் மரவமர் பூம்பொழில் மயேந்திரப் பள்ளியுள் அரவமர் சடையனை அடிபணிந் துய்ம்மினே. நாகணைத் துயில்பவன் நலமிகு மலரவன் ஆகணைந் தவர்கழல் அணையவும் பெறுகிலர் மாகணைந் தலர்பொழில் மயேந்திரப் பள்ளியுள் யோகணைந் தவன்கழல் உணர்ந்திருந் துய்ம்மினே. உடைதுறந் தவர்களும் உடைதுவர் உடையரும் படுபழி யுடையவர் பகர்வன விடுமின்நீர் மடைவளர் வயலணி மயேந்திரப் பள்ளியுள் இடமுடை ஈசனை இணையடி பணிமினே. வம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள் நம்பனார் கழலடி ஞானசம் பந்தன்சொல் நம்பர மிதுவென நாவினால் நவில்பவர் உம்பரார் எதிர்கொள உயர்பதி அணைவரே.
