Shiva Temples of Tamilnadu
தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
முல்லைவன நாதர் கோவில், தென்திருமுல்லைவாசல்
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | தென்திருமுல்லைவாசல் |
| இறைவன் பெயர் | முல்லைவன நாதர், யூதிகாபரமேஸ்வரர் |
| இறைவி பெயர் | அணிகொண்ட கோதை, சத்யானந்த சௌந்தரி |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | சீர்காழியில் இருந்து 14 கி. மி. தொலைவில் வங்கக் கடலோரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. |
| ஆலய முகவரி | அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோவில் திருமுல்லைவாசல் திருமுல்லைவாசல் அஞ்சல் வழி சீர்காழி சீர்காழி வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 609113 இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலய குருக்கள் வீடு அருகில் இருப்பதால் அவரை தொடர்பு கொண்டு எந்நேரமும் தரிசிக்கலாம். ஆலய அர்ச்சகர் ஆத்மநாத குருக்கள் கைபேசி: 94863 39538 |
திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக் காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவஸ்தலம் வடதிருமுல்லைவாயில் என்றும், காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள சிவஸ்தலம் தென்திருமுல்லைவாசல் என்றும் குறிப்பிடப்படுகின்றன.
தல வரலாறு: முதலாம் கிள்ளி வளவன் என்ற சோழ மன்னன் சரும நோயால் மிகவும் வேதனைப்பட்டான். நோய் தீரவேண்டுமானால் சிவத்தலம் ஒன்றில் உள்ள தீர்த்தத்தில் நீராட வேண்டுமென அரண்மனை வைத்தியர்கள் கூற, அதன்படி இத்தலத்தற்கு அருகிலுள்ள கடலில் நோய் தீருவதற்காக தன் பரிவாரங்களுடன் நீராட வந்தான். அப்போது இந்த பகுதி முழுவதும் முல்லை கொடிகளாக இருந்தது. எனவே இவர்கள் வந்த குதிரையின் குளம்பு முல்லை கொடிகளில் சிக்கிக் கொண்டது. அதற்கு மேல் குதிரைகளால் நகர முடியவில்லை. முல்லைக் கொடிகளை கிள்ளிவளவன் வாளால் வெட்டும் போது, அதன் கீழேயிருந்த சுயம்பு மூர்த்தியின் மீது பட்டு ரத்தம் பெருகியது. அதிர்ச்சியடைந்த மன்னன் ஏதோ ஒரு உயிரை வெட்டி விட்டோமே என பார்க்க, அங்கே லிங்கம் ஒன்று ரத்தம் வழிய காட்சியளித்தது. மன்னன் தன் தவறுணர்ந்து தன் கழுத்தை அறுத்துக் கொள்ள முயல்கையில் இறைவன் ரிஷபாரூடராய்க் காடசி தந்ததாகத் தல வரலாறு கூறுகிறது. லிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட காயத்தழும்பை இன்றும் காணலாம்.
இத்தலத்தின் இறைவன் முல்லைவனநாதர் மூன்றரை அடி உயரத்தில் பெரிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு யூதிகா பரமேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்து கொள்ள இங்குள்ள முல்லைவன நாதரை அம்மன் வழிபட்டதால், சிவபெருமான் குருவாக இருந்து அம்மனுக்கு உபதேசித்தார். எனவே இத்தலத்தில் சிவன் குருவாக வீற்றிருக்கிறார். எனவே இங்கு பள்ளியறையும், பூஜையும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. சூரிய, சந்திர கிரகணம், அமாவாசை காலங்களில் இங்கு வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு மறு பிறப்பில்லை என்பது ஐதீகம்.
| தென்திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் ஆலயம் புகைப்படங்கள் | ||
|---|---|---|
![]() ஆலயத்தின் முகப்பு வாயில் |
![]() முல்லைவன நாதர் சந்நிதி வாயில் |
|
![]() அணிகொண்ட கோதை சந்நிதி வாயில் |
![]() சனகாதி முனிவர்களுடன் தட்சிணாமூர்த்தி | |
திருஞனசம்பந்தர் பாடியருளுய இத்தலத்திற்கான இப்பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன் நடமன்னு துன்னு சுடரோன் ஒளிமண்டி யும்ப ருலகங் கடந்த உமைபங்க னெங்க ளரனூர் களிமண்டு சோலை கழனிக் கலந்த கமலங்கள் தங்கு மதுவின் தெளிமண்டி யுண்டு சிறைவண்டு பாடு திருமுல்லை வாயி லிதுவே. பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனைப் படைத்த பரமன் அரவத் தொடங்க மவைகட்டி யெங்கு மரவிக்க நின்ற அரனூர் உருவத்தின் மிக்க ஒளிர்சங் கொடிப்பி யவையோத மோத வெருவித் தெருவத்தில் வந்து செழுமுத் தலைக்கொள் திருமுல்லை வாயி லிதுவே. வாராத நாடன் வருவார்தம் வில்லின் உருமெல்கி நாளு முருகில் ஆராத வின்ப னகலாத அன்பன் அருள்மேவி நின்ற அரனூர் பேராத சோதி பிரியாத மார்பின் அலர்மேவு பேதை பிரியாள் தீராத காதல் நெதிநேர நீடு திருமுல்லை வாயி லிதுவே. ஒன்றொன்றொ டொன்றும் ஒருநான்கொ டைந்தும் இருமூன்றொ டேழு முடனாய் அன்றின்றொ டென்றும் அறிவான வர்க்கும் அறியாமை நின்ற அரனூர் குன்றொன்றொ டொன்று குலையொன்றொ டொன்று கொடியொன்றொ டொன்று குழுமிச் சென்றொன்றொ டொன்று செறிவாய் நிறைந்த திருமுல்லை வாயி லிதுவே. கொம்பன்ன மின்னின் இடையாளோர் கூறன் விடைநாளும் ஏறு குழகன் நம்பன்னெ மன்பன் மறைநாவன் வானின் மதியேறு சென்னி அரனூர் அம்பன்ன வொண்க ணவரா டரங்கின் அணிகோபு ரங்க ளழகார் செம்பொன்ன செவ்வி தருமாடம் நீடு திருமுல்லை வாயி லிதுவே. ஊனேறு வேலின் உருவேறு கண்ணி ஒளியேறு கொண்ட வொருவன் ஆனேற தேறி யழகேறு நீறன் அரவேறு பூணு மரனூர் மானேறு கொல்லை மயிலேறி வந்து குயிலேறு சோலை மருவி தேனேறு மாவின் வளமேறி யாடு திருமுல்லை வாயி லிதுவே. நெஞ்சார நீடு நினைவாரை மூடு வினைதேய நின்ற நிமலன் அஞ்சாடு சென்னி அரவாடு கையன் அனலாடு மேனி யரனூர் மஞ்சாரு மாட மனைதோறும் ஐயம் உளதென்று வைகி வரினுஞ் செஞ்சாலி நெல்லின் வளர்சோ றளிக்கொள் திருமுல்லை வாயி லிதுவே. வரைவந் தெடுத்த வலிவா ளரக்கன் முடிபத்து மிற்று நெரிய உரைவந்த பொன்னின் உருவந்த மேனி உமைபங்கன் எங்க ளரனூர் வரைவந்த சந்தொ டகிலுந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால் திரைவந்து வந்து செறிதேற லாடு திருமுல்லை வாயி லிதுவே. மேலோடி நீடு விளையாடல் மேவு விரிநூலன் வேத முதல்வன் பாலாடு மேனி கரியானு முன்னி யவர்தேட நின்ற பரனூர் காலாடு நீல மலர்துன்றி நின்ற கதிரேறு செந்நெல் வயலிற் சேலோடு வாளை குதிகொள்ள மல்கு திருமுல்லை வாயி லிதுவே. பனைமல்கு திண்கை மதமா வுரித்த பரமன்ன நம்ப னடியே நினைவன்ன சிந்தை அடையாத தேரர் அமண்மாய நின்ற அரனூர் வனமல்கு கைதை வகுளங்க ளெங்கு முகுளங்க ளெங்கு நெரியச் சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு திருமுல்லை வாயி லிதுவே. அணிகொண்ட கோதை யவள்நன்று மேத்த அருள்செய்த எந்தை மருவார் திணிகொண்ட மூன்று புரமெய்த வில்லி திருமுல்லை வாயி லிதன்மேல் தணிகொண்ட சிந்தை யவர்காழி ஞான மிகுபந்தன் ஒண்டமிழ் களின் அணிகொண்ட பத்தும் இசைபாடு பத்தர் அகல்வானம் ஆள்வர் மிகவே.




