Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

சுந்தரேஸ்வரர் கோவில், திருக்கலிகாமூர்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருக்கலிகாமூர் ( தற்போது அன்னப்பன் பேட்டை என்று வழங்குகிறது )
இறைவன் பெயர்சுந்தரேஸ்வரர்
இறைவி பெயர்அழகம்மை, அழகுமுலையம்மை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது சீர்காழி - திருவெண்காடு சாலையில் மங்கைமடம் என்ற ஊருக்குச் சென்று அங்கிருந்து திருநகரி செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். சீர்காழியில் இருந்து கோனையாம்பட்டினம் செல்லும் நகரப் பேருந்து அன்னப்பன் பேட்டை வழியாகச் செல்கிறது. ஊர் சாலையோரத்தில் உள்ளது. ஊர் நடுவே சாலைக்குப் பக்கத்தில் கோயில் உள்ளது. திருக்கலிகாமூருக்கு அருகாமையில் திருபல்லவனீச்சுரம், தெண்திருமுல்லைவாயில் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலங்களும் இருக்கின்றன.
ஆலய முகவரிஅருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
அன்னப்பன் பேட்டை
தேனாம்பட்டினம் அஞ்சல்
வழி மங்கைமடம்
சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
PIN - 609106

இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. கோயிலுக்கு எதிரில் சந்திர தீர்த்தம் உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து உள் சென்றால் நந்தி மண்டபத்தைக் காணலாம். இங்கு கொடிமரம் இல்லை. பிராகாரத்தில் சிவலிங்கத்தை வணங்கியபடி பராசர மகரிஷி காட்சி தருகிறார். மற்றும் விநாயகர், சுப்பிரமணியர், வில்வநாதர், அகிலாண்டேசுவரி, மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. அடுத்துள்ள இடத்தில் பைரவர், சனீஸ்வரன், விநாயகர், கைலாசநாதர், பத்திரகாளி முதலிய சிலாரூபங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியருக்கு சன்னதி உள்ளது. வலம்முடித்து உட்சென்றால் நேரே மூலவர் சுந்தரேஸ்வரர் சதுரபீடத்தில் சற்று குட்டையான பாணத்துடன் கூடிய சிவலிங்கத் திருமேனி உருவில் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். மூலவரைத் தரிசிக்கும் நமக்கு வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது.

பராசர முனிவர் அசுரன் உதிரனை அழித்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்க பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இத்தலம் வந்தபோது சிவன் காட்சி தந்து, விமோசனம் கொடுத்தருளினார். அவரது வேண்டுதலுக்காக இத்தலத்தில் இறைவன் எழுந்தருளினார்.

திருஞானசம்பந்தர் பாடிய இத்தலத்திற்கான இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தனது பதிகத்தில் இத்தல இறைவனை வணங்கித் துதிக்கத் துன்பங்கள் தொடராது, அத்துன்பங்களுக்குக் காரணமான, அநுபவித்துக் கழிந்தவை போக எஞ்சியுள்ள வினைகளும் அழிந்துபோகும், சிவபெருமானை மனத்தால் நினைந்து போற்ற எக்காலத்தும் அழியாத புகழ் வந்து சேரும், சிவபெருமானை மெய்யுணர்வால் தொழுது போற்றுபவர்களைச் செல்வம் வந்தடையும்,. அவர்கள் எந்தவித குறைவும் இல்லாமல் இருப்பார்கள், மேலும் அவர்களிடம் செம்மையான சிவஞானம் உண்டாகும், இத்தல இறைவனை வணங்கிப் போற்ற, அவர்களை நோய்கள் வந்து அணுகாது என்று பலவிதமாக் போற்றிப் பாடியுள்ளார்..

மடல்வரை யின்மது விம்முசோலை வயல்சூழ்ந் தழகாருங்
கடல்வரை யோதங் கலந்துமுத்தஞ் சொரியுங் கலிக்காமூர்
உடல்வரை யின்னுயிர் வாழ்க்கையாய ஒருவன் கழலேத்த
இடர்தொட ராவினை யானசிந்தும் இறைவன் னருளாமே. 

மைவரை போற்றிரை யோடுகூடிப் புடையே மலிந்தோதங்
கைவரை யால்வளர் சங்கமெங்கு மிருக்குங் கலிக்காமூர்
மெய்வரை யான்மகள் பாகன்தன்னை விரும்ப உடல்வாழும்
ஐவரை ஆசறுத் தாளுமென்பர் அதுவுஞ் சரதமே. 

தூவிய நீர்மல ரேந்திவையத் தவர்கள் தொழுதேத்தக்
காவியின் நேர்விழி மாதரென்றுங் கவினார் கலிக்காமூர்
மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால்
ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர் பெருமானே. 

குன்றுகள் போற்றிரை உந்தியந்தண் மணியார் தரமேதி
கன்றுடன் புல்கியா யம்மனைசூழ் கவினார் கலிக்காமூர்
என்றுணர் ஊழியும் வாழுமெந்தை பெருமான் அடியேத்தி
நின்றுணர் வாரை நினையகில்லார் நீசர் நமன்தமரே. 

வானிடை வாண்மதி மாடந்தீண்ட மருங்கே கடலோதங்
கானிடை நீழலிற் கண்டல்வாழுங் கழிசூழ் கலிக்காமூர்
ஆனிடை ஐந்துகந் தாடினானை அமரர் தொழுதேத்த
நானடை வாம்வண மின்புதந்த நலமே நினைவோமே. 

துறைவளர் கேதகை மீதுவாசஞ் சூழ்வான் மலிதென்றல்
கறைவள ருங்கட லோதமென்றுங் கலிக்குங் கலிக்காமூர்
மறைவள ரும்பொரு ளாயினானை மனத்தால் நினைந்தேத்த
நிறைவள ரும்புக ழெய்தும்வாதை நினையா வினைபோமே. 

கோலநன் மேனியின் மாதர்மைந்தர் கொணர் மங்கிலியத்திற்
காலமும் பொய்க்கினுந் தாம்வழுவா தியற்றுங் கலிக்காமூர்
ஞாலமுந் தீவளி ஞாயிறாய நம்பன் கழலேத்தி
ஓலமி டாதவர் ஊழியென்றும் உணர்வைத் துறந்தாரே. 

ஊரர வந்தலை நீண்முடியான் ஒலிநீர் உலகாண்டு
காரர வக்கடல் சூழவாழும் பதியாம் கலிக்காமூர்
தேரர வல்குல்அம் பேதையஞ்சத் திருந்து வரைபேர்த்தான்
ஆரர வம்பட வைத்தபாதம் உடையான் இடமாமே. 

அருவரை யேந்திய மாலும்மற்றை அலர்மேல் உறைவானும்
இருவரும் அஞ்ச எரியுருவாய் எழுந்தான் கலிக்காமூர்
ஒருவரை யான்மகள் பாகன்றன்னை உணர்வாற் றொழுதேத்தத்
திருமரு வுஞ்சிதை வில்லைசெம்மைத் தேசுண் டவர்பாலே.	

மாசு பிறக்கிய மேனியாரும் மருவுந் துவராடை
மீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர்தோற்றங்
காசினி நீர்த்திரள் மண்டியெங்கும் வளமார் கலிக்காமூர்
ஈசனை யெந்தை பிரானையேத்தி நினைவார் வினைபோமே. 

ஆழியுள் நஞ்சமு தாரவுண்டன் றமரர்க் கமுதுண்ண
ஊழிதோ றும்முள ராவளித்தான் உலகத் துயர்கின்ற
காழியுள் ஞானசம் பந்தன்சொன்ன தமிழாற் கலிக்காமூர்
வாழியெம் மானை வணங்கியேத்த மருவா பிணிதானே.