Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஆரண்ய சுந்தரேஸ்வரர் கோவில், கீழை திருக்காட்டுப்பள்ளி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்கீழை திருக்காட்டுப்பள்ளி
இறைவன் பெயர்ஆரண்ய சுந்தரேஸ்வரர்
இறைவி பெயர்அகிலாண்ட நாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவிலும், திருவெண்காட்டில் இருந்து இளையமுதுகுளபுரம் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மி. தொலைவிலும் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. சீர்காழி - தரங்கம்பாடி சாலையில் அல்லி விளாகம் என்னுமிடத்தில் திருவெண்காட்டிற்குப் பிரியும் சாலையில் வந்து இலையமுதுகுளபுரம் தாண்டி கீழைத்திருக்காட்டுப்பள்ளியை அடையலாம். ஊரில் சாலையில் இருந்து சற்றுத்தள்ளி வலதுபுறம் உட்புறமாகக் கோயில் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
கீழைத்திருக்காட்டுப்பள்ளி
திருவெண்காடு அஞ்சல்
சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
PIN - 609114

இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் பிரம்மேசர், முனியீசர் என்ற பெயரில் இரு சிவலிங்கங்கள் உள்ளன. அடுத்து, சுப்பிரமணியர், பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கருவறைச் சுவரில் வெளிப்புறத்தில் ஓரிடத்தில் மன்னன் ஒருவன் சிவலிங்கத்தை வழிபடுவது போன்ற சிற்பமுள்ளது. பிரகார வலம் முடித்து வாயில் நுழைந்தால் மண்டபத்தில் மேற்கு நோக்கிய சுவாமி சந்நிதியும் இடதுபுறம் அம்பாள் சந்நிதியும் ஒரு சேரத் தரிசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளன. இத்தலத்து இறைவன் ஆரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக சதுரபீட ஆவுடையாரில் அருள்பாலிக்கிறார் . பிரகாரத்தில் "தசலிங்கம்" சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியில் ஏழு லிங்கங்கள் இருக்கிறது. இதில் ஒரே லிங்கத்தில் இரண்டு பாணங்கள் இருப்பது வித்தியாசமான அமைப்பு. அம்பாள் அகிலாண்டேஸ்வரி அழகிய சிறிய திருமேனியுடன் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இங்கு சுவாமியே பிரதானம் என்பதால் இத்தலத்தில் நவக்கிரக சந்நிதி இல்லை.

ததீசி முனிவரின் முதுகுத் தண்டை ஆயுதமாகப் பெற்று இந்திரன் விருத்திராசுரன் என்ற அசுரனை அழித்தான். இந்தப் பழியும் பாவமும் நீங்க தேவேந்திரன் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டதாகப் புராணம் சொல்கிறது. இந்தக் கோயிலில் உள்ள ஸ்ரீபிரம்மேஸ்வர லிங்கத்தை வழி படுவோர் 100 அஸ்வமேத யாகங்கள் செய்த பலனைப் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

சுவாமி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் வீற்றிருக்கிறார். பொதுவாக சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நால்வருடன் மட்டும் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் ஆறு பேருடன் காட்சி தருவது விசேஷம். பைரவர், சூரியன், சனீஸ்வரர் ஆகியோரும் பிரகாரத்தில் இருக்கின்றனர். இத்தலத்திலுள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். ஒரு சாபத்தால் நண்டு வடிவம் எடுத்த கந்தர்வன் இவரை வழிபட்டதால், இவர் நண்டு விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த விநாயகரின் பீடத்தில் நண்டு இருப்பது வித்தியாசமான அமைப்பு. பொதுவாக விநாயகருக்கு இருக்க வேண்டிய மூசிக வாகனமும் இங்கு கிடையாது. நண்டு, இவருக்கு வாகனமாக இருப்பதால் மூசிக வாகனம் இல்லை என்கிறார்கள்.

ஆரண்ய முனிவர் வழிபட்ட தலம் இது. கோஷ்டத்தில் மகாகாளர் சிவ வழிபாட்டிற்காக சங்கு ஊதிக் கொண்டிருக்க, ஆரண்ய முனிவர் சிவனை பூஜை செய்யும் சிற்பம் இருக்கிறது.

கீழை திருக்காட்டுப்பள்ளி ஆரண்ய சுந்தரேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


ஆலயத்தின் முகப்பு வாயில்


பலிபீடம், நந்தி மண்டபம்


ஆலய உட்புறத் தோற்றம்


ஆலய உட்புறத் தோற்றம்


கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி


வெளிப் பிரகாரத்தில் பிரம்மபுரீஸ்வரர்


ஆரண்ய முனிவர் சிவனை வழிபடுதல்வெளிப் பிரகாரம்


வள்ளி, தெய்வானை சமேத முருகர்


மூலவர் ஆரண்ய சுந்தரேஸ்வரர்

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது

செய்யரு கேபுனல் பாயஓங்கிச் செங்கயல் பாயச் சிலமலர்த்தேன்
கையரு கேகனி வாழையீன்று கானலெலாங் கமழ் காட்டுப்பள்ளிப்
பையரு கேயழல் வாயவைவாய்ப் பாம்பணை யான்பணைத் தோளிபாகம்
மெய்யரு கேயுடை யானையுள்கி விண்டவ ரேறுவர் மேலுலகே. 	

இப்பதிகத்தில் 2-ம் பாடல் சிதைந்து போயிற்று.	

திரைகளெல் லாமல ருஞ்சுமந்து செழுமணி முத்தொடு பொன்வரன்றிக்
கரைகளெல் லாமணி சேர்ந்துரிஞ்சிக் காவிரி கால்பொரு காட்டுப்பள்ளி
உரைகளெல் லாமுணர் வெய்திநல்ல உத்தம ராயுயர்ந் தாருலகில்
அரவமெல் லாமரை யார்த்தசெல்வர்க் காட்செய அல்லல் அறுக்கலாமே. 

தோலுடை யான்வண்ணப் போர்வையினான் சுண்ணவெண் ணீறுது தைந்திலங்கு
நூலுடை யானிமை யோர்பெருமான் நுண்ணறி வால்வழி பாடுசெய்யுங்
காலுடை யான்கரி தாயகண்டன் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி
மேலுடை யானிமை யாதமுக்கண் மின்னிடை யாளொடும் வேண்டினானே. 

சலசல சந்தகி லோடும்உந்திச் சந்தன மேகரை சார்த்தியெங்கும்
பலபல வாய்த்தலை யார்த்துமண்டி பாய்ந்திழி காவிரிப் பாங்கரின்வாய்
கலகல நின்றதி ருங்கழலான் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளிச்
சொலவல தொண்டர்க ளேத்தநின்ற சூலம்வல் லான்கழல் சொல்லுவோமே. 

தளையவிழ் தண்ணிற நீலம்நெய்தல் தாமரை செங்கழு நீருமெல்லாங்
களையவி ழுங்குழ லார்கடியக் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளித்
துளைபயி லுங்குழல் யாழ்முரல துன்னிய இன்னிசை யால்துதைந்த
அளைபயில் பாம்பரை யார்த்தசெல்வர்க் காட்செய அல்லல் அறுக்கலாமே. 	

முடிகையி னாற்றொடும் மோட்டுழவர் முன்கைத் தருக்கைக் கரும்பின்கட்டிக்
கடிகையி னாலெறி காட்டுப்பள்ளி காதல்செய் தான்கரி தாயகண்டன்
பொடியணி மேனியி னானையுள்கிப் போதொடு நீர்சுமந் தேத்திமுன்னின்
றடிகையி னாற்றொழ வல்லதொண்டர் அருவினை யைத்துரந் தாட்செய்வாரே. 

பிறையுடை யான்பெரி யோர்கள்பெம்மான் பெய்கழல் நாடொறும் பேணியேத்த
மறையுடை யான்மழு வாளுடையான் வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட
கறையுடை யான்கன லாடுகண்ணாற் காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக்
குறையுடை யான்குறட் பூதச்செல்வன் குரைகழ லேகைகள் கூப்பினோமே. 

செற்றவர் தம்அர ணம்மவற்றைச் செவ்வழல் வாயெரி யூட்டிநின்றுங்
கற்றவர் தாந்தொழு தேத்தநின்றான் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி
உற்றவர் தாமுணர் வெய்திநல்ல உம்பருள் ளார்தொழு தேத்தநின்ற
பெற்றம ரும்பெரு மானையல்லால் பேசுவதும் மற்றோர் பேச்சிலோமே. 

ஒண்டுவ ரார்துகி லாடைமெய்போர்த் துச்சிகொ ளாமையுண் டேயுரைக்குங்
குண்டர்க ளோடரைக் கூறையில்லார் கூறுவ தாங்குண மல்லகண்டீர்
அண்டம றையவன் மாலுங்காணா ஆதியி னானுறை காட்டுப்பள்ளி
வண்டம ரும்மலர்க் கொன்றைமாலை வார்சடை யான்கழல் வாழ்த்துவோமே. 

பொன்னியல் தாமரை நீலம்நெய்தல் போதுக ளாற்பொலி வெய்துபொய்கைக்
கன்னியர் தாங்குடை காட்டுப்பள்ளிக் காதல னைக்கடற் காழியர்கோன்
துன்னிய இன்னிசை யாற்றுதைந்து சொல்லிய ஞானசம் பந்தன்நல்ல
தன்னிசை யாற்சொன்ன மாலைபத்துந் தாங்கவல் லார்புகழ் தாங்குவாரே.