Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருக்குருகாவூர் வெள்ளடை (தற்போது திருக்கடாவூர் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்வெள்ளடையீசுவரர், வெள்விடை நாதர், சுவேத ரிஷபேஸ்வரர்
இறைவி பெயர்நீலோத்பவ விசாலாட்சி, காவியங்கன்னி அம்மை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர் - 1
எப்படிப் போவது சீகாழியில் இருந்து தென்திருமுல்லைவாயில் செல்லும் சாலை மார்க்கத்தில் 6 கி.மீ.ல் உள்ள வடகால் என்னும் கிராம நிறுத்தத்தில் இறங்கி தெற்கே 1 கி.மீ. சென்றால் இந்த சிவஸ்தலத்தை அடையலாம். கோவில் வரை வாகனங்கள் செல்லும்.
ஆலய முகவரிஅருள்மிகு
வெள்ளடையீசுவரர் திருக்கோவில்
திருக்கடாவூர்
வடகால் அஞ்சல்
சீர்காழி வட்டம்
மயிலாடுதுறை மாவட்டம்
PIN - 609115

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலயத்தின் மெய்காவலர் அருகில் வசிப்பதால் அவரை விசாரித்து தொடர்பு கொண்டால் எந்நேரமும் தரிசிக்கலாம்.
Kurukavur Velladai route map

சீர்காழியில் இருந்து திருக்குருகாவூர் வெள்ளடை செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

கோவில் அமைப்பு : ஊரின் பெயர் குருகாவூர். கோவிலின் பெயர் வெள்ளடை. தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் திருக்குருகாவூர் வெள்ளடை என்று அறியப்பட்ட இத்தலம் இந்நாளில் திருக்கடாவூர் என்று வழங்குகிறது. ஒரு பிரகாரத்துடன் விளங்கும் இவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு நுழைவாயில் மட்டும் உள்ளது. இறைவன் வெள்விடை நாதர் சதுர ஆவுடையார் மீது சிறிய பாணம் கொண்ட லிங்க உருவில் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இறைவி காவியங்கன்னி அம்மை தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள். இறைவன் கருவறை கோஷ்ட தெய்வங்களாக தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். விஷ்ணு கரியமாணிக்கப் பெருமாள் என்ற பெயருடன் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். கருவறைப் பிரகாரத்தில் நால்வர் சந்நிதி, நடராஜப் பெருமான் சந்நிதி, காசி விஸ்வநாதர் விசாலாட்சி சந்நிதிகளுடன், சனீஸ்வரன், மாவடி விநாயகர், சிவலோகநாதர் ஆகிய சந்நிதிகளும் அமைந்துள்ளன. கருவறைச் சுற்றில் பைரவர், சூரியன், மாரியம்மன், ஸ்ரீஅய்யனார் ஆகியோரின் திருவுருவங்களும் அமைந்துள்ளன. கருவறைப் பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமானும் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். பொதுவாக முருகன் கிழக்கு திசை நோக்கித்தான் இருப்பார். ஆனால் இங்குள்ள முருகன் தெற்கு திசை நோக்கி காட்சி தருகிறார். தென் திசையை பார்த்திருப்பதால் இவரை, குரு அம்சமாக கருதி வழிபடுகிறார்கள். இவருக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

இறைவன் சுந்தரருக்கு அமுது படைத்தல்: சுந்தரர் தனது தொண்டர் கூட்டத்துடன் சீர்காழியிலிருந்து இவ்வூருக்கு எழுந்தருளுகையில் தாகமும், பசியும் அவரையும் அவர் தொண்டர் கூட்டத்தினரையும் வருத்திற்று. இறைவர் அந்தணர் உருவம் கொண்டு வழியில் தண்ணீர்ப்பந்தல் ஏற்படுத்தி அவர்களுக்குத் தண்ணீரும் கட்டமுதும் அளித்தார். சுந்தரர் உண்டு உறங்குகையில் இறைவர் பந்தலோடு மறைந்தருளினார். சுந்தரர் தூக்கத்தினின்று எழுந்து "இத்தனையாமாற்றை யறிந்திலேன்" எனத் தொடங்கும் பதிகம்பாடி கோயிலுக்குச்சென்று இறைவனை வழிபட்டார். சுந்தரருக்கு இறைவன் கட்டமுது அளித்தருளிய விழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பௌர்ணமியில் இத்தலத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றது. இங்கு சிவனிடம் வேண்டிக்கொள்ள அன்னத்திற்கு குறையில்லாத நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு: சைவ சமயம் தழைக்க பாடுபட்ட சம்பந்தர், மதுரையில் சமணர்களுடன் வாதிட்டு வென்றார். அவருடன் வாதத்தில் தோற்ற சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். இவ்வாறு சமணர்களை கழுவேற்றிய பாவம் நீங்க சம்பந்தர், காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராட விரும்பினார். தான் காசிக்கு செல்ல அருளும்படி சீர்காழி தலத்தில் சிவனிடம் வேண்டினார். சம்பந்தருக்கு காட்சி தந்த சிவன், அவரை சீர்காழிக்கு செல்ல வேண்டாமென்றும் இத்தலத்தில் அவருக்கு கங்கையை வரவழைத்துக் கொடுப்பதாகவும் கூறினார். அதன்படி இங்கு வந்த சம்பந்தர் சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், இங்கிருந்த கிணற்றில் கங்கையை பொங்கச் செய்தார். அதில் நீராடிய சம்பந்தர், பாவம் நீங்கப்பெற்றார். இவ்வாலயத்தின் தீர்த்தமான இக்கிணறு பால்கிணறு என்ற பெயருடன் கோவிலுக்கு வெளியே தனிச்சுற்று மதிலுடன் உள்ளது. தை அமாவாசை நாளன்று இறைவன் தீர்த்தம் கொடுக்கும் சமயத்தில் இக்கிணற்று நீர் பால் நிறமாக மாறும் அதிசயம் பொருந்தியது. அன்று மட்டுமே பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கிறார்கள். மற்ற நாட்களில் இந்த தீர்த்தத்தை திறப்பது கிடையாது. ஆண்டுதோறும் பக்தர்கள் தை அமாவாசை நாளில் இங்கு நீராட பெருமளவில் வருகிறார்கள். மேலும் தைப்பூச நாளில் பஞ்சமூர்த்தி புறப்பாடும் இத்தலத்தில் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. சுந்தரருக்கு இறைவன் உணவும் நீரும் தந்து பசியைப் போக்கிய கட்டமுது தந்த விழா சித்திரைப் பௌர்ணமியில் நடைபெறுகிறது.

Top
வெள்ளடையீசுவரர் ஆலயம் புகைப்படங்கள்
ஆலயத்தின் முகப்பு வாயில்
வெள்விடை நாதர் சந்நிதி
காவியங்கண்ணி அம்பாள் சந்நிதி
நால்வர் சந்நிதி
காசி விஸ்வநாதர், விசாலாட்சி சந்நிதி
பிராகாரத்தில் சனீஸ்வரன், மாவடி விநாயகர், சிவலோகநாதர்
வள்ளி, சுப்ரமணியர், தெய்வானை
தை அமாவாசை அன்று கிணற்று நீர் பால் நிறமாக மாறும் கிணறு
வெளிப் பிராகாரத்தில் சுவாமி அம்பாள் சந்நிதிகளை நோக்கியபடி 2 நந்தி, 2 பலிபீடம்