Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

பிரம்மபுரீசுவரர் கோவில், சீர்காழி

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்சிர்காழி
இறைவன் பெயர்பிரம்மபுரீசுவரர், தோணியப்பர், சட்டைநாதர்
இறைவி பெயர்திருநிலை நாயகி, ஸ்திர சுந்தரி
பதிகம்திருநாவுக்கரசர் - 3, சம்பந்தர் - 67
சுந்தரர் - 1
எப்படிப் போவது சீர்காழி நகரின் மையப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது.


உலகம் அழியும் வகையில் கடல் பொங்கி எழுந்த ஊழிக் காலத்தில், சிவன் 64 கலைகளை உடையாக அணிந்து பிரணவத்தைத் தோணியாக அமைத்து, உமதேவியுடன் அதில் புறப்பட்டார். தோணி சீர்காழி வந்த போது எல்லா இடமும் அழிந்தும் இவ்விடம் மட்டும் அழியாமல் இருக்கக் கண்டு இதுவே மூலத்தலம் என்று உமாதேவியிடம் கூறி இங்கு தங்கினார். சிவன் தோணியை இயக்கி வந்ததால் இறைவனுக்கு தோணியப்பர் என்று பெயர் ஏற்பட்டது. பிரம்மா இறைவன் சிவபெருமானை வணங்கி மீண்டும் படைப்புத் தொழிலை ஆரம்பித்ததால் சிவபெருமானுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும், சட்டைநாதர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

கோவிலின் அமைப்பு: சீர்காழியில் உள்ள இவ்வாலயம் மிகவும் பெரியதாக ஊரின் நடுவே அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவனுக்கு மூன்று சந்நிதிகள் இருக்கின்றன. கோவிலில் நுழைந்ததும், ஆஸ்தான மண்டபத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தினுள் சென்றால் பிரம்மபுரீஸ்வ்பரரின் சந்நிதி கிழக்கு நோக்கி கோவிலின் குளத்தருகே அமைந்துள்ளது. இவருக்கு வலப்பக்க்ம் ஞானசம்பந்தர் உற்சவ மூர்த்தியாக உள்ளார். சின்னஞ்சிறிய குழந்தை வடிவில் இடது கையில் சிறு கிண்ணம் இருக்கும். இறைவி ஞானத்தைப் பாலில் குழைத்து கிண்னத்தில் கொடுத்ததின் அடையாளமாக கிண்ணம் உள்ளது. கோவிலின் வடபகுதியில் திருநிலைநாயகியின் கோவிலும் இதன் முன்னே பிரம்மதீர்த்தமும் உள்ளன. இந்த பிரம்ம தீர்த்தக்கரையில் தான் இறைவி ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தருளினார்.கோவிலின் உள்ளே ஒரு கட்டுமலை மீது தோணியப்பர் பெரியநாயகி சமேதராகக் காட்சி தருகின்றார். தோணியப்பர் மற்றும் பெரியநாயகியின் திரு உருவங்கள் சுதையாலானவை. இச்சந்நிதியின் மேல் தளத்திற்கு சில படிகள் ஏறிச் சென்றால் கட்டுமலை உச்சியில் தெற்கு நொக்கியவாறு சட்டைநாதர் சந்நிதி உள்ளது. இந்தச் சட்டநாதர், முத்துச் சட்டநாதர் என்ற பெயரோடு, வலம்புரி மண்டபத்தில் யோக ஸ்தானத்தில் அஷ்ட பைரவ உருவில் காட்சி தருகிறார்.

சம்பந்தர் ஞானப்பால் உண்டது: 7-ம் நூற்றாண்டில் சைவம் தழைக்க திருஞானசம்பந்தர் அவதரித்த தலம் என்ற பெருமையை உடையது சீர்காழி என்ற இந்த பாடல் பெற்ற ஸ்தலம். சிவபாத இருதயருக்கும் பகவதியம்மைக்கும் மகனாகப் பிறந்த சம்பந்தருக்கு இக்கோவில் திருக்குளக்கரையில் இறைவன் சிவபெருமான் விரும்பியபடி, உமாதேவி சிவஞானத்தை அமுதமாகக் குழைத்து பாலாகக் கொடுக்க, அதை உண்ட ஞானசம்பந்தர் இறையருள் பெற்றார். குழந்தையின் வாயில் பால் வழிவதைக் கண்ட தந்தை, பால் கொடுத்தது யார் என்று வினவினார். "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் பதிகத்தை சம்பந்தர் பாடி பாலூட்டியது உமாதேவியென்றும் தான் இறையருள் பெற்றதையும் கூறினார். சம்பந்தரின் முதல் தேவாரப் பதிகம் இதுதான். இவர் சீர்காழி இறைவன் மேல் 67 பதிகங்கள் பாடியுள்ளார். சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு, உலகமாதா பெரியநாயகி அம்மை குழந்தை சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய வரலாற்றை நினைவு படுத்தும் விதமாக, சீர்காழியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இரண்டாம் நாள் திருவிழா திருமுலைப்பால் உற்சவம் என்று கொண்டாடப்படுகிறது. சித்திரை பிரம்மோற்சவத்தில் இரண்டாம் நாள் திருவாதிரை நட்சத்திரத்தன்று இவ்விழா நடைபெறும். ஞானசம்பந்தர் பிறந்தது ஒரு திருவாதிரை நாளில், அவர் ஞானப்பால் உண்டது ஒரு திருவாதிரை நாளில், அவர் முக்தி பெற்று இறைவனுடன் கலந்ததும் ஒரு திருவாதிரை நாளில் தான்.

திருஞானசம்பந்தர் அவதரித்த இந்த சீர்காழியில் உள்ள இறைவனை பிரம்மா, முருகன், காளி, குரு, இந்திரன், சந்திரன், சூரியன், வியாச முனிவர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய முதல் பதிகத்தின் முதல் பாடல் கீழே:

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.