Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

கண்ணாயிரநாதர் கோவில், திருக்கண்ணார்கோவில் ( குறுமானக்குடி )

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி)
இறைவன் பெயர்கண்ணாயிரநாதர்
இறைவி பெயர்முருகுவளர்கோதை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது சீர்காழிக்கு அருகில் உள்ள வைத்தீஸ்வரன்கோவில் என்ற பாடல் பெற்ற தலத்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 5 கி.மி. தொலைவில் திருக்கண்ணார்கோவில் சிவஸ்தலம் உள்ளது. வைத்தீஸ்வரன்கோவில் - மாயவரம் சாலையில் பாகசாலை என்ற ஊர் வரும். அங்கிருந்து பிரியும் சாலையில் 2 கி.மி. தொலைவில் திருக்கண்ணார்கோவில் உள்ளது. சிதம்பரம் - மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் உள்ள கதிராமங்கலம் என்னும் இடத்தில் இருந்து 5 கி. மி. சென்றாலும் இத்தலத்தை அடையலாம்.
ஆலய முகவரிஅருள்மிகு கண்ணாயிரநாதர் திருக்கோவில்
குறுமானக்குடி
கொண்டத்தூர் அஞ்சல்
தரங்கம்பாடி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
PIN - 609117

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
kurumanakudi route map

வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி)
செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயத்திற்கு ராஜகோபுரமில்லை. ஒரு கட்டைக்கோபுர வாயிலும் இரண்டு பிராகாரங்களும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. கோவிலுக்கு வெளியே எதிரில் இந்திர தீர்த்தம் உள்ளது. தீர்த்தக் கரையில் விநாயகர், முருகன் சந்நிதிகள் உள்ளன. கட்டைக்கோபுர வாயிலின் முகப்பின் மேல் ரிஷபாரூடர், விநாயகர், வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் உருவங்கள் சுதை வடிவில் வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளன. உள்நுழைந்ததும் நீண்ட கல் மண்டபம் அழகாகவுள்ளது. வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. 2-வது வாயில் வழியே உள்ளே சென்றால் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர், நந்தி பலிபீடங்கள் உள்ளன. உள்மண்டபத்தில் கோஷ்ட தட்சிணாமூர்த்தியை அடுத்தாற்போல் சித்திவிநாயகர் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. பிராகாரத்தில் நால்வரையடுத்து, கன்னி விநாயகர் உள்ளார். ஆறுமுக சுவாமி இடத்தில் கஜலட்சுமி சந்நிதி உள்ளது. அதனால் எதிரில் மண்டபத்தில் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. பிராகாரத்தில் தொடர்ந்து பைரவர், சனிபகவான், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. உள் மண்டபத்தின் வலதுபுறம் பள்ளியறையும், பக்கத்தில் அம்பாள் சந்நிதியும் உள்ளன. தெற்கு நோக்கிய சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் அம்பாள் தரிசனம் தருகிறாள். அம்பாள் சந்நிதிக்கு வெளியே மண்டபத்தில் மேற்புறத்தில் பன்னிரண்டு ராசிகளின் உருவங்களும் உரிய கட்டமைப்பில் வடிக்கப்பட்டுள்ளன.

கருவறையில் மூலவர் கண்ணாயிரநாதர் கிழக்கு நோக்கி சுயம்புத் திருமேனியுடன் எழுந்தருளியுள்ளார். பாணப்பகுதி சற்று உயரமாக உள்ளது. பெயருக்கேற்பத் திருமேனி முழுவதிலும் கண்கள் போன்று பள்ளம் பள்ளமாக உள்ளன. மூலவர் மண்டபத்தில் சந்திரசேகர் திருமேனி உள்ளது. அடுத்து நடராஜர் சபை உள்ளது. பிரதோஷ நாயகர், அஸ்திரதேவர், வள்ளி, தெய்வயானை சமேத சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், விநாயகர் முதலிய உற்சவ மூர்த்தங்கள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. சுவாமிக்குத் தீபாராதனை செய்து அடுத்து அம்பாளுக்கும் தீபாராதனை செய்து அதற்குப்பிறகே திருநீறு, குங்குமம் வழங்கும் மரபு இக்கோயிலில் இருந்து வருகின்றது.

தல வரலாறு: தேவர்களின் தலைவனான இந்திரன், கெளதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டு, முனிவரின் வேடத்தில் அகலிகையுடன் சந்தோஷமாக இருந்தான். வந்திருப்பது தன் கணவர் அல்ல என்பது தெரிந்தும், இந்திரன் மீது கொண்ட ஆசையினால் தவறு செய்ய அகலிகையும் சம்மதித்தாள். நடந்ததை அறிந்த முனிவர் கோபம் கொண்டு, இந்திரன் உடல் எங்கும் பெண் குறிகள் உண்டாகும் படி சபித்தார். அதன் பின் அகலிகையை கல்லாகும் படி சபித்து விட்டார். தவறை உணர்ந்த அகலிகை சாப விமோசனம் கேட்க, "ராமரின் திருவடி பட்டதும் சாபவிமோசனம் கிடைக்கும்" என்றார் முனிவர். இந்திரன் தனக்கு ஏற்பட்ட இந்த துன்பத்திற்கு பரிகாரம் வேண்டி பிரம்மாவிடம் சென்றான். அதற்கு பிரம்மா குறுமாணக்குடி சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற வழி கூறினார். இந்திரனும் இத்தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட, அவனது ஆயிரம் பெண் குறிகளும் ஆயிரம் கண்களாகத் தோன்றுமாறு அருள் செய்தார். இந்திரனின் சாபம் தீர்ந்தது. எனவே இத்தல இறைவன் "கண்ணாயிரமுடையார்" என்று பெயர் பெற்றார். வாமன அவதாரம் எடுத்த திருமாலும் இத்தலத்தில் லிங்கம் ஸ்தாபித்து வழிபட, அவருக்கும் அருள் செய்ததால் இத்தலத்திற்கு குறுமாணக்குடி என்ற மறு பெயரும் உண்டாயிற்று.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது

தண்ணார்திங்கட் பொங்கரவந்தாழ் புனல்சூடிப்
பெண்ணாணாய பேரருளாளன் பிரியாத
கண்ணார்கோயில் கைதொழுவோர்கட் கிடர்பாவம்
நண்ணாவாகும் நல்வினையாய நணுகும்மே. 

கந்தமர்சந்துங் காரகிலுந்தண் கதிர்முத்தும்
வந்தமர்தெண்ணீர் மண்ணிவளஞ்சேர் வயல்மண்டிக்
கொந்தலர்சோலைக் கோகிலமாடக் குளிர்வண்டு
செந்திசைபாடுஞ் சீர்திகழ்கண்ணார் கோயிலே. 

பல்லியல்பாணிப் பாரிடமேத்தப் படுகானின்
எல்லிநடஞ்செய் யீசனெம்மான்றன் இடமென்பர்
கொல்லையின்முல்லை மல்லிகைமௌவற் கொடிபின்னிக்
கல்லியல்இஞ்சி மஞ்சமர்கண்ணார் கோயிலே.	

தருவளர்கானந் தங்கியதுங்கப் பெருவேழம்
மருவளர்கோதை அஞ்சவுரித்து மறைநால்வர்க்
குருவற்ஆல நீழலமர்ந்தீங் குரைசெய்தார்
கருவளர்கண்ணார் கோயிலடைந்தோர் கற்றோரே. 

மறுமாணுருவாய் மற்றிணையின்றி வானோரைச்
செறுமாவலிபால் சென்றுலகெல்லாம் அளவிட்ட
குறுமாணுருவன் தற்குறியாகக் கொண்டாடும்
கறுமாகண்டன் மேயதுகண்ணார் கோயிலே. 

விண்ணவருக்காய் வேலையுள்நஞ்சம் விருப்பாக
உண்ணவனைத்தே வர்க்கமுதீந்தெவ் வுலகிற்கும்
கண்ணவனைக்கண் ணார்திகழ்கோயிற் கனிதன்னை
நண்ணவல்லோர்கட் கில்லைநமன்பால் நடலையே. 

முன்னொருகாலத் திந்திரனுற்ற முனிசாபம்
பின்னொருநாளவ் விண்ணவரேத்தப் பெயர்வெய்தித்
தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன் சார்பென்பர்
கன்னியர்நாளுந் துன்னமர்கண்ணார் கோயிலே. 

பெருக்கெண்ணாத பேதையரக்கன் வரைக்கீழால்
நெருக்குண்ணாத்தன் நீள்கழல்நெஞ்சில் நினைந்தேத்த
முருக்குண்ணாதோர் மொய்கதிர்வாள்தேர் முன்னீந்த
திருக்கண்ணாரென் பார்சிவலோகஞ் சேர்வாரே. 

செங்கமலப்போ திற்திகழ்செல்வன் திருமாலும்
அங்கமலக்கண் நோக்கரும்வண்ணத் தழலானான்
தங்கமலக்கண் ணார்திகழ்கோயில் தமதுள்ளத்
தங்கமலத்தோ டேத்திடஅண்டத் தமர்வாரே. 

தாறிடுபெண்ணைத் தட்டுடையாருந் தாமுண்ணுஞ்
சோறுடையார்சொல் தேறன்மின்வெண்ணூல் சேர்மார்பன்
ஏறுடையன்பரன் என்பணிவான்நீள் சடைமேலோர்
ஆறுடையண்ணல் சேர்வதுகண்ணார் கோயிலே. 

காமருகண்ணார் கோயிலுளானைக் கடல்சூழ்ந்த
பூமருசோலைப் பொன்னியல்மாடப் புகலிக்கோன்
நாமருதொன்மைத் தன்மையுள்ஞான சம்பந்தன்
பாமருபாடல் பத்தும்வல்லார்மேல் பழிபோமே.

திருக்கண்ணார்கோவில் கண்ணாயிரநாதர் ஆலயம் புகைப்படங்கள்


ஆலயத்தின் முகப்பு வாயில்


இந்திர தீர்த்தம்


நீண்ட கல் மண்டபம்


கொடிமரம், நந்தி


மண்டபத்தில் மேற்புறத்தில் பன்னிரண்டு ராசிகள்

"திருக்கண்ணார் கோயிலைக் கைகளால் தொழுது வணங்குவாரைத் துன்பங்களும் பாவங்களும் அணுகாது, நல்வினைகளும் அவற்றின் பயனான இன்பங்களும் வந்தடையும், இத்தல இறைவனை வழிபடுபவர்களுக்கு எமனால் வரும் துன்பங்கள் இல்லை, இத்தல இறைவனை வழிபடுகவர்கள் தம் உள்ளத்தில் மலம் நீங்கப் பெற்றவராய் வானுலகில் இனிது உறைபவராவர், இப்பதிகப் பாடல்கள் பத்தினாலும் போற்றி வழிபட வல்லவர்கள், தம் மேல் வரும் பழிகள் நீங்கப் பெறுவர்." என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் கூறியுள்ளார்.Copyright © 2004 - 2019 - www.shivatemples.com - All rights reserved