Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

மஹாலக்ஷ்மீசர் கோவில், திருநின்றியூர்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருநின்றியூர்
இறைவன் பெயர்மஹாலக்ஷ்மீசர், ஜமதக்னீஸ்வரர்
இறைவி பெயர்உலகநாயகி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர் - 2
எப்படிப் போவது வைத்தீஸ்வரன்கோயில் - மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் திருநின்றியூர் இருக்கிறது. மயிலாடுதுறையிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு மஹாலக்ஷ்மீசர் திருக்கோவில்
திருநின்றியூர்
திருநின்றியூர் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
PIN - 609118

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மூவர் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் திருநின்றியூர் மஹாலக்ஷ்மீசர் ஆலயமும் ஒன்று. இவ்வாலயம் 3 நிலைகளைக் கொண்ட இராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் விசாலமான முற்றவெளி உள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடமும், நந்தியும், கொடிமரத்து விநாயகரும் இருப்பதைக் காணலாம். வெளிப் பிராகாரத்தில் செல்வப் பிள்ளையார் சந்நிதியுள்ளது. அடுத்து பரசுராமர் வழிபட்ட லிங்கமும், வள்ளி, தெய்வானையுடன் வலது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் சுப்பிரமணியர், நால்வர், மகாலட்சுமி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. அடுத்து நவக்கிரக சந்நிதியும், பைரவர், சந்திரன் உருவங்கள் ஒரு சந்நிதியில் உள்ளன. பிரகார வலம் முடித்து, துவார விநாயகரையும் தண்டபாணியையும் வழிபட்டுத் துவாரபாலகர்களைத் தொழுது, உட்சென்றால் நேரே சுவாமி சந்நிதியும் வலதுபுறம் அம்பாள் சந்நிதியும் உள்ளன.

தனது தந்தை ஜமதக்னி முனிவரின் ஆணைப்படி தனது தாயான ரேணுகாவைக் கொன்றான் பரசுராமன். பின் தனது தந்தையிடம் அன்னையை உயிர்ப்பிக்கும் படி வரம் வேண்டி தாயை உயிர்ப்பித்தான். தாயைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக இத்தலத்தில் இறைவனை வழிபட்டு மன அமைதி பெற்றான். ஜமதக்னி முனிவரும் தான் அவசரத்தில் செய்த செயலுக்கு வருந்தி இங்கு சிவபெருமானை வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். சிவன் இருவருக்கும் காட்சி தந்து அருள் செய்தார். பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் பரசுராமலிங்கமாக காட்சி தருகிறார். ஜமதக்னி முனிவருக்கு காட்சி தந்த சிவன் ஜமதக்னீஸ்வரர் என்ற் பெயருடன் சிறிய பாண வடிவில் காட்சி தருகிறார். அருகில் மகாவிஷ்ணுவின் சந்நிதியும் உள்ளது. மகாலட்சுமியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாள். எனவே தான் இத்தலத்து சிவன் மகாலட்சுமீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

மன்னன் ஒருவன் இத்தலத்தில் கோவிலைக் கட்டும் ஆசையுடன் இங்கு வந்து பூமியை இடித்துப் பார்த்தபோது ரத்தம் வெளிப்பட்டது. மன்னன் ஆட்களை விட்டு தோண்டிப் பார்க்கையில் பூமிக்கடியில் ஒரு சிவலிங்கம் இருப்பதைக் கண்டான். அதே இடத்தில் கோவிலைக் கட்டினான் என்று தல வரலாறு கூறுகிறது. இன்றும் சிவலிங்கத்தின் பாணத்தில் தற்போதும் கோடரி வெட்டிய தழும்பு குழி போல இருப்பதைப் பார்க்கலாம். இத்தலத்தில் மூலவர் சுயம்பு லிங்கமாக உயர்ந்த பாணத்துடன் எழுந்தருளியுள்ளார்.

தேவாரம் பாடப்பட்ட காலத்தில் இத்தலமும் கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்றாக விளங்கியது. நூறு ஆண்டுகளுக்குமுன் நகரத்தார் திருப்பணி செய்தபோது இதை இப்போதுள்ள அமைப்பில் மாற்றிக் கட்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

சுந்தரர் பாடிய இரண்டு பதிகங்களில் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. அதில் முதல் 7 பாடல்களே நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. 8, 9, 10 பாடலகள் சிதைந்து போய்விட்டன. இப்பதிகத்தின் முதல் பாடலில் சிலந்திக்கு அருள் செய்து மறுபிறப்பில் கோச்செங்கட் சோழனாக பிறக்க அருள் செய்ததைக் குறிப்பிடுகிறார். 2-வது பாடலில் 4900 பதிகங்கள் பாடிய திருநாவுக்கரசருக்கும், கண்ணப்ப நாயனாருக்கும் அருள் செய்ததை குறிப்பிடுகிறார். 3-வது பாடலில் இத்தலத்தின் புராணத்தைக் குறிப்பிடுகிறார். பரசுராமர் தனக்கு காட்சி கொடுத்தருளிய இறைவனுக்கு 300 வேதியர் சூழ, 340 வேலி நிலத்தைக் கொடுத்து திருநின்றியூர் என்று பெயரிட்டு பொன்னாலாகிய அழகிய கலசங்களைக் கொண்டு நீர் வார்த்து அளிக்க, அவருக்கு தன் திருவடியை அளித்த இறைவன் என்று குறிப்பிடுகிறார்.

1. திருவும் வண்மையுந் திண்டிறல் அரசுஞ்
    சிலந்தி யார்செய்த செய்பணி கண்டு
    மருவு கோச்செங்க ணான்றனக் களித்த
    வார்த்தை கேட்டுநுன் மலரடி அடைந்தேன்
    பெருகு பொன்னிவந் துந்துபன் மணியைப்
    பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித்
    தெருவுந் தெற்றியும் முற்றமும் பற்றித்
    திரட்டுந் தென்றிரு நின்றியூ ரானே. 

2. அணிகொள் ஆடையம் பூண்மணி மாலை
    அமுது செய்தமு தம்பெறு சண்டி
    இணைகொள் ஏழெழு நூறிரு பனுவல்
    ஈன்ற வன்றிரு நாவினுக் கரையன்
    கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற
    காத லின்னருள் ஆதரித் தடைந்தேன்
    திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியுஞ்
    செல்வத் தென்றிரு நின்றியூ ரானே. 

3. மொய்த்த சீர்முந்நூற் றறுபது வேலி
    மூன்று நூறுவே தியரொடு நுனக்கு
    ஒத்த பொன்மணிக் கலசங்க ளேந்தி
    ஓங்கு நின்றியூர் என்றுனக் களிப்பப்
    பத்தி செய்தவப் பரசுரா மற்குப்
    பாதங் காட்டிய நீதிகண் டடைந்தேன்
    சித்தர் வானவர் தானவர் வணங்குஞ்
    செல்வத் தென்றிரு நின்றியூ ரானே. 

4. இரவி நீள்சுடர் எழுவதன் முன்னம்
    எழுந்து தன்முலைக் கலசங்க ளேந்திச்
    சுரபி பால்சொரிந் தாட்டிநின் பாதந்
    தொடர்ந்த வார்த்தை திடம்படக் கேட்டுப்
    பரவி உள்கிவன் பாசத்தை அறுத்துப்
    பரம வந்துநுன் பாதத்தை அடைந்தேன்
    நிரவி நித்திலம் அத்தகு செம்பொன்
    அளிக்குந் தென்றிரு நின்றியூ ரானே. 

5. வந்தோர் இந்திரன் வழிபட மகிழ்ந்து
    வான நாடுநீ ஆள்கென அருளிச்
    சந்தி மூன்றிலுந் தாபரம் நிறுத்திச்
    சகளி செய்திறைஞ் சகத்தியர் தமக்குச்
    சிந்து மாமணி அணிதிருப் பொதியிற்
    சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன்
    செந்தண் மாமலர்த் திருமகள் மருவுஞ்
    செல்வத் தென்றிரு நின்றியூ ரானே. 

6. காது பொத்தரைக் கின்னரர் உழுவை
    கடிக்கும் பன்னகம் பிடிப்பருஞ் சீயங்
    கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக்
    கோல ஆல்நிழற் கீழறம் பகர
    ஏதஞ் செய்தவர் எய்திய இன்பம்
    யானுங் கேட்டுநின் இணையடி அடைந்தேன்
    நீதி வேதியர் நிறைபுகழ் உலகில்
    நிலவு தென்றிரு நின்றியூ ரானே. 

7. கோடு நான்குடைக் குஞ்சரங் குலுங்க
    நலங்கொள் பாதம்நின் றேத்திய பொழுதே
    பீடு விண்மிசைப் பெருமையும் பெற்ற
    பெற்றி கேட்டுநின் பொற்கழல் அடைந்தேன்
    பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும்
    பிள்ளைக் கிள்ளையும் எனப்பிறை நுதலார்
    நீடு மாடங்கள் மாளிகை தோறும்
    நிலவு தென்றிரு நின்றியூ ரானே. 

இப்பதிகத்தில் 8, 9, 10 பாடல்கள் சிதைந்து போயின.