Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஐராவதேஸ்வரர் கோவில், திருஎதிர்கொள்பாடி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருஎதிர்கொள்பாடி ( தற்போது மேலதிருமணஞ்சேரி என்று வழங்குகிறது )
இறைவன் பெயர்ஐராவதேஸ்வரர்
இறைவி பெயர்மலர்க்குழல் நாயகி, சுகந்த குந்தளாம்பிகை
பதிகம்சுந்தரர் - 1
எப்படிப் போவது இத்தலம் மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து 6 கி.மி. தொலைவில் இருக்கிறது. குத்தாலத்தில் இருந்து பந்தநல்லூர் செல்லும் சாலையில் அஞ்சார் வார்த்தலை என்னும் ஊரை அடைந்து அங்குள்ள வாய்க்காலைத் தாண்டி வலதுபுறம் திருமணஞ்சேரி செல்லும் சாலையில் சென்றால் முதலில் மேலதிருமணஞ்சேரி என்று இன்று வழங்கப்படும் ஊர் வரும். (இதே சாலையில் மேலும் சிறிது தூரம் சென்றால் திருமணஞ்சேரி உள்ளது.) ஊருக்குள் வலதுபுறம் பிரியும் சாலையில் சிறிது தொலைவு சென்றால் திருஎதிர்கொள்பாடி ஆலயத்தை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து திருமணஞ்சேரி செல்ல பேருந்து வசதிகள் உண்டு.
ஆலய முகவரி அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில்
மேலதிருமணஞ்சேரி
திருமணஞ்சேரி அஞ்சல்
குத்தாலம் S.O.
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டிணனம் மாவட்டம்
PIN - 609813

இவ்வாலயம் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Ethirkolpadi route map

குத்தாலத்தில் இருந்து திருஎதிர்கொள்பாடி
செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

தல வரலாறு: பரத்வாஜ மகரிஷி தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். அவருக்கு பார்வதியே குழந்தையாகப் பிறந்தாள். மணப்பருவம் வந்தபோது, சிவபெருமானிடம் அவளை மணந்து கொள்ளும்படி பரத்வாஜ மகரிஷி வேண்டினார். சிவபெருமானும் அம்பிகையை மணக்க பூலோகம் வந்தார். பரத்வாஜரும் மாப்பிள்ளையாக வந்த சிவபெருமானை பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றார். பரத்வாஜரின் மரியாதையை ஏற்ற இறைவன், அவரது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். பரத்வாஜர் எதிர்கொண்டு அழைத்ததால் இத்தலத்திற்கு "எதிர்கொள்பாடி" என்றும், சுவாமிக்கு திருஎதிர்கொள்பாடி உடையார் என்றும் பெயர் உண்டானது. ஐராவதம் என்னும் இந்திரனின் யானை வழிபட்டதால் ஐராவதேஸ்வரர் என்ற பெயர் பிற்காலத்தில் உண்டானது.

ஐராவதம் பூஜித்த தலம்: துர்வாச முனிவர் ஒருமுறை சிவனை பூஜித்து பிரசாதமாக பெற்ற மலரை இந்திரனிடம் கொடுத்தார். இந்திரன் அம்மலரை தன் வாகனமான ஐராவதத்தின் தலை மீது வைக்க, அது அம்மலரை கீழே போட்டு தன் காலால் மிதித்து அம்மலரை அவமரியாதை செய்தது. இதனால் கோபம் கொண்ட துர்வாசரிடம் சாபம் பெற்ற ஐராவதம் சாப விமோசனம் வேண்டி பூமிக்கு வந்து பல இடங்களில் சுற்றித் திரிந்தது. பூலோகத்தில் பல தலங்களில் சிவபூஜை செய்தது. அப்படி சிவபூஜை செய்த தலங்களில் திருஎதிர்கொள்பாடி தலமும் ஒன்றாகும். இறைவனும் ஐராவதேஸ்வரர் என்ற பெயர் பெற்றார். ஐராவதம் உண்டாக்கிய தீர்த்தம் ஐராவத தீர்த்தம் என்ற பெயருடன் இங்கு உள்ளது.

தலத்தின் சிறப்பு: நல்ல குணம் படைத்த மருமகன் அமையவும், அமைந்த மருமகன் திருந்தவும் பெண்ணின் தந்தை வழிபட வேண்டிய தலம் மேலத்திருமணஞ்சேரி என்னும் எதிர்கொள்பாடி ஆகும். இத்தலத்தில் அருளும் ஐராவதேஸ்வரர், சிறந்த மருமகன் கிடைக்க அருள் செய்கிறார். பெண்ணைப் பெற்றவர்கள் மகளுக்கு வரன் பார்க்கும் முன்பு, நல்ல மாப்பிள்ளை அமைய இங்கு மகளை அழைத்து வந்து. சிவனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து பூஜை செய்கின்றனர். மாப்பிள்ளை வீட்டாருடன் மனக்கசப்பு உள்ளவர்களும் இங்கு பூஜை நடத்துகின்றனர். மகளின் வாழ்க்கை நன்றாக அமைய பெற்றோர் வழிபட வேண்டிய தலம் இது.

கோவில் அமைப்பு: இவ்வாலயம் மூன்று நிலை இராஜகோபுரத்துடன் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் வெளிப் பிரகாரத்தில் கொடிமரத்து விநாயகரையும், பலிபீடம் மற்றும் அதிகார நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். கருவறை முன் மண்டபம் வழியே உள்ளே நுழைந்தவுடன் மேறகு நோக்கிய சந்நிதியில் சதுர ஆவுடையார் மீது லிங்க உருவில் இறைவன் ஐராவதேஸ்வரர் தரிசனம் தருகிறார். அம்பாள் மலர்க்குழல் நாயகி தெறகு நோக்கி காட்சி தருகிறாள். பரத்வாஜ முனிவர் இங்கு சிவனை வழிபட்டுள்ளார். இவர் வணங்கிய பரதலிங்கம் பிரகாரத்தில் இருக்கிறது. சுவாமி சத்திதி கோஷ்டத்தில் தாமரை பீடத்தின் மீது துர்க்கை காட்சி தருகிறாள். கருவறை முன் மண்டபத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. வெளிப் பிரகாரத்தில் ஞானசரஸ்வதி, பைரவர், சனீஸ்வரர், துணைவந்த விநாயகர், சூரியன் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன.

திருஎதிர்கொள்பாடி ஐராவதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


ஆலய இராஜகோபுரம்


கொடிமர விநாயகர், பலிபீடம், நந்தி மண்டபம்


சம்பந்தர் மற்றும் சுந்தரர் சந்நிதி


அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதி விமானம்


விநாயகர் மற்றும் முருகர் சந்நிதி


வெளிப் பிரகாரம் வலம் வரும் பக்தர்கள்

சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

மத்தயானை ஏறி மன்னர் சூழ வருவீர்காள்
செத்த போதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே. 	

தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரம் மனைவாழ்க்கை
மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்ச மனத்தீரே
நீற்றர் ஏற்றர் நீலகண்டர் நிறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே. 	

செடி கொள் ஆக்கை சென்று சென்று தேய்ந்து ஒல்லை வீழாமுன்
வடிகொள் கண்ணார் வஞ்சனையுள் பட்டு மயங்காதே
கொடிகொள் ஏற்றர் வெள்ளை நீற்றர் கோவண ஆடையுடை
அடிகள் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே. 

வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே
யாவராலும் இகழப்பட்டு இங்கு அல்லலில் வீழாதே
மூவராயும் இருவராயும் முதல்வன் அவனேயாம்
தேவர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே. 	

அரித்து நம்மேல் ஐவர் வந்து இங்கு ஆறு அலைப்பான் பொருட்டால்
சிரித்த பல்வாய் வெண்தலை போய் ஊர்ப்புறம் சேராமுன்
வரிக்கொள் துத்தி வாள் அரக்கர் வஞ்ச மதில் மூன்றும்
எரித்த வில்லி எதிர்கொள்பாடி என்பது அடைவோமே. 	

பொய்யர் கண்டீர் வாழ்க்கையாளர் பொத்து அடைப்பான் பொருட்டால்
மையல் கொண்டீர் எம்மோடு ஆடி நீரும் மனத்தீரே
நைய வேண்டா இம்மை யேத்த அம்மை நமக்கருளும்
ஐயர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே. 	

கூசம் நீக்கிக் குற்றம் நீக்கிச் செற்ற மனம் நீக்கி
வாசம் மல்கு குழலினார்கள் வஞ்ச மனைவாழ்க்கை
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி என்பு அணிந்து ஏறு ஏறும்
ஈசர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே. 	

இன்பம் உண்டேல் துன்பம் உண்டு ஏழை மனைவாழ்க்கை
முன்பு சொன்ன மோழைமையான் முட்டை மனத்தீரே
அன்பர் அல்லால் அணிகொள் கொன்றை அடிகள் அடி சேரார்
என்பர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே. 	

தந்தையாரும் தவ்வையாரும் எள் தனைச் சார்வு ஆகார்
வந்து நம்மோடு உள் உளாவி வானநெறி காட்டும்
சிந்தையீரே நெஞ்சினீரே திகழ் மதியம் சூடும்
எந்தை கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே. 	

குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழற்சடையன்
மருது கீறி ஊடு போன மால் அயனும் அறியாச்
சுருதியார்க்கும் சொல்ல ஒண்ணாச் சோதி எம் ஆதியான்
கருது கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே. 

முத்து நீற்றுப் பவள மேனிச் செஞ்சடையான் உறையும்
பத்தர் பந்தத்து எதிர்கொள்பாடிப் பரமனையே பணியச்
சித்தம் வைத்த தொண்டர் தொண்டன் சடையன் அவன் சிறுவன்
பத்தன் ஊரன் பாடல் வல்லார் பாதம் பணிவாரே. 	

சுந்தரர் தனது பதிகத்தில் எதிர்கொள்பாடி இறைவனை வணங்குவதற்கு பலவாறு நமக்கு கூறுகிறார்.

மதத்தையுடைய யானையின் மீது ஏறி சிற்றரசர்கள் புடைசூழ உலாவருகின்ற பேரரசர்களே, நீங்கள் இறந்தால் அப்போது உம்மோடு துணையாய் வருவார் இவர்களுள் ஒருவரும் இலர், இறைவன் ஒருவனே உங்களுக்குத் துணையாய் வருவார் என்றும்,

இவ்வுலகில் பிறந்தோர்க்கு இறப்பும் ஒருநாள் உண்டு, அதனிடையில் வரும் இல்வாழ்க்கையும் துன்பம் தருவதே என்றும், அவ்வாறு உலகியலில் உழன்று, மாவடுவின் வடிவைக் கொண்ட கண்களையுடைய மாதரது மயக்கத்திற் பட்டு மயங்காதும் இருக்கவும,

மணம் நிறைந்த கூந்தலையுடைய மகளிரது, வஞ்சனையையுடைய மனைவாழ்க்கையில் உள்ள ஆசையைத் துறந்து இருக்கவும், உற்றார், உறவினர் யாவரும் நமதுடன் நிலையற்ற தொடர்பைக் கொண்டவர்கள் என்றும்,

எக்காலத்தும் நமக்குத் துணையாய் வருபவர் இறைவன் ஒருவனே என்றும் கூறி, எதிர்கொள்பாடி இறைவனை வணங்கி, தனது திருபதிகத்தின் 10 பாடல்களையும் நன்கு பாடவல்லவர், அப்பெருமானது திருவடியை அடைந்து வணங்கியிருப்பர் என்று சுந்தரர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார்.