Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

உத்வாக நாதர் கோவில், திருமணஞ்சேரி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருமணஞ்சேரி
இறைவன் பெயர்அருள் வள்ளல் நாதர், உத்வாக நாதர்
இறைவி பெயர்கோகிலாம்பாள், யாழின்மென்மொழியம்மை
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து சுமார் 6 கி.மி. தொலைவில் திருமணஞ்சேரி இருக்கிறது. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதியும், குத்தாலத்தில் இருந்து ஆட்டோ, வாடகைக் கார் வசதிகளும் உண்டு.
ஆலய முகவரி அருள்மிகு அருள் வள்ளல் நாதர் திருக்கோவில்
கீழைத்திருமணஞ்சேரி
திருமணஞ்சேரி அஞ்சல்
குத்தாலம் S.O.
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
PIN - 609813

இவ்வாலயம் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 3-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலயத்தை தொடர்பு கொள்ள: தொலைபேசி: 04364 230661, 04364 235002
Ethirkolpadi route map

குத்தாலத்தில் இருந்து திருமணஞ்சேரி
செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

தல வரலாறு: உமாதேவி ஒருமுறை கைலையில் சிவபெருமானை வணங்கி மற்றொருமுறை சிவபெருமானை பூவுலகில் மணந்து கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்தாள். சிவபிரானும் கருணை கொண்டு அவ்வாறே வாக்களித்தார். அதன்பின் ஒருமுறை உமாதேவி சிவனிடம் சற்று அலட்சியமாக நடக்க, அதனால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழ கட்டளையிட்டார். பசு உருக்கொண்ட உமாதேவி தன் செயல் நினைத்து வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்க, தக்க சமயம் வரும்போது தோன்றி மணம் செய்து கொள்வேன் என்று வரமளித்தார்.

உமாதேவியுடன் திருமகள், கலைமகள், இந்திரானி ஆகியோரும் பசு உருக்கொண்டு பூவுலகில் உலவி வந்தனர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்து வந்தார். அம்பிகை உமாதேவி பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான் அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார். சுய உருவம் பெற்ற உமாதேவி பரத முனிவரிடம் வளர்ந்து வரும் வேளையில் அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்துகொள்ள சிவபெருமான் தீர்மானித்தார். பரத மகரிஷி நடத்திய யாக வேள்விக் குண்டத்தில் சிவபெருமான் தோன்றி பசு உருவில் இருந்த உமாதேவிக்கு சுய உருவம் கொடுத்து இத்தலத்தில் திருமணம் புரிந்து கொண்டார் என்று தல வரலாறு கூறுகிறது. சிவபெருமான் உமாதேவி திருமணம் நடைபெற்ற இத்தலம் திருமணஞ்சேரி என்று பெயர் பெற்றது.

தலச் சிறப்பு: திருமணம் கைகூடாது தடைபட்டு நிற்பவர்கள் திருமனஞ்சேரியில் உள்ள கல்யாணசுந்தரப் பெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவில் திருமணம் ஆகும் என்பது இத்தலத்தின் மகிமைகளில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மேலும் இராகு தோஷ நிவர்த்திக்கும் இத்தலம் மிக சிறப்புடையதாகும். இராகு தோஷத்தினால் பீடிக்கப்பட்டு, புத்திர பாக்கியம் கிட்டாத தம்பதியர் இத்தலத்திலுள்ள சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி இங்கு கோவில் கொண்டுள்ள இராகு பகவானுக்கு பால் அபிஷேகமும், பால் பொங்கல் நிவேதனமும் செய்து சாப்பிட்டு வந்தால் தனது இராகு தோஷம் நீங்கப் பெற்று புத்திரப் பேறு பெறுவர் என்பது அனுபவ உண்மையாகும்.

திருமண பிரார்த்தனை விபரம்:திருமண தடை உள்ளவர்கள் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கோகிலாம்பாள் சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரர் சுவாமிக்கு மாலை சாற்றி வழிபாடு செய்தால்விரைவில் திருமணம் இனிதே கைகூடும். ஆலயத்தில் பூஜை சாமான்கள், நெய்தீபம், அர்ச்சனை சீட்டு பெற்றுக் கொண்டு ஸ்ரீ செல்வ கணபதியை வழிபாடு செய்த பின் நெய்தீப மேடையில் 5 தீபம் ஏற்றிவிட்டு எதிரில் உள்ள திருமண பிரார்த்தனை மண்டபத்தில் வழிபாடு செய்ய வேண்டும். திருமண பிரார்த்தனை செய்து கொள்பவர்கள் வீட்டிற்குச் சென்றதும் தினமும் காலையில் நீராடி விட்டு ஆலயத்தில் வழங்கப்பட்ட எலுமிச்சம் பழத்தை பிழிந்து உப்பு சர்க்கரை சேர்க்காமல் நீரில் கலந்து சாப்பிட்டுவிட்டு ஒரு தீபம் ஏற்றி ஆலயத்தில் வழங்கப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு சுவாமியை நினைத்து வணங்க வேண்டும். பினபு மாலையை ஒரு துணிப்பையில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாளில் இருந்து விபூதி, மஞ்சள், குங்குமம் தினமும் உபயோகிக்க வேண்டும்.

திருமணம் முடிந்தவுடன், ஆலயத்தில் வழங்கப்பட்ட மாலையை தம்பதி சமேதராய் வந்து ஆலயத்தில் செலுத்தி பிரார்த்தனையை நல்லபடியாக முடித்துக் கொள்ள வேண்டும்.

நெய்தீபம், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம்பழம், வாழைப்பழம், சந்தனம், 2 மாலை, 2 தேங்காய்ஆகிய பூஜை சாமான்கள் அனைத்தும் ஆலயத்தின் உள்ளே ஆலய நிர்வாகத்தால் நியாயாமான விலையில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கியிருக்கும் இவ்வாலயம் இராஜ கோபுரம் 5 நிலைகளை உடையது. இராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் கொடிமர கணபதி காட்சி தருகிறார். அடுத்து முறையே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. பிறகு 3 நிலை 2வது கோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்தவுடன் கருவறையில் கிழக்கு நோக்கி இத்தலத்து இறைவன் உத்வாகநாதர் அழகுற அருட்காட்சி தருகிறார். கருவறையின் முன் மண்டபத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கியவாறு இத்தலத்து இறைவி கோகிலாம்பாள் அமர்ந்த நிலையில் திருமணப் பெண் போன்றே அருட்காட்சி தருகிறாள்.

கருவறையின் இடதுபுறம் நிருத்த மண்டபத்தில் இவ்வாலயத்தின் உற்சவமூர்த்தியான கல்யாணசுந்தரர் அம்பிகை கோகிலாம்பாளுடன் கல்யாண கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். மற்றும் நடராஜர், சுப்பிரமணியர், தட்சினாமூர்த்தி, பிரம்மா, இராகு பகவான், துர்க்கை, மகாவிஷ்னு ஆகியோர் சந்நிதிகள் இவ்வாலயத்தில் இருக்கின்றன. மன்மதன் சிவபெருமான் மீது தன் மலர்க்கணைகளைத் தொடுத்து அதனால் அவரது நெற்றிக்கண் தீயினால் எரிந்து சாம்பலானான். அதனால் மனம் நொந்து திருந்தி மன்மதன் சிவப்பெருமானை துதிக்க சிவபெருமானும் மனமிரங்கி மன்மதன் பேறுபெற வரமருளியது இத்தலத்தில் தான் நிகழ்ந்தது.

இறைவனின் திருமணத்திற்கு மாலைகளாக மாறி வந்த சப்த சாகரங்களும் (ஏழு கடல்களும்) இங்கேயே தங்கித் தீர்த்தமானதாகச் சொல்லப்படுகிறது. சப்த சாகர தீர்த்தம் என்று அழைக்கப்படும் இந்த தீர்த்தம் கோயிலின் பக்கத்தில் உள்ளது.

சோழ மன்னன் கண்டராதித்யனின் மனைவியான செம்பியன் மகாதேவியால் இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டது என்று இந்த ஆலயத்திலுள்ள கல்வெட்டுக்களில் இருந்து தெரிய வருகிறது.

இத்தலத்தில் இருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் உள்ள திருவேள்விக்குடி என்ற தலத்தில் தான் சிவபெருமான் உமாதேவி திருமணத்திற்கான வேள்விகள், யாகம் மற்றும் இதர கல்யாண சடங்குகள் நடைபெற்றன.

திருமணஞ்சேரி அருள் வள்ளல் நாதர் ஆலயம் புகைப்படங்கள்


ஆலய 5 நிலை இராஜகோபுரம்


கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் - பின்புறம் 3 நிலை 2வது கோபுரம்


சந்நிதி விமானம்


அம்பாள் சந்நிதி வாயில் பிரகாரம்