Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

வீரட்டேஸ்வரர் கோவில், திருகுறுக்கை

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருகுறுக்கை
இறைவன் பெயர்வீரட்டேஸ்வரர்
இறைவி பெயர்ஞானாம்பிகை
பதிகம்திருநாவுக்கரசர் - 2
எப்படிப் போவது மயிலாடுதுறை - மணல்மேடு சாலையில் உள்ள கொண்டல் என்ற ஊரிலிருந்து 3 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு. திருஅன்னீயூர் (பொன்னூர்) தலத்தில் இருந்து வடக்கே உள்ள இத்தலத்தை பாண்டூர் வழியாகச் சென்றும் அடையலாம்.
ஆலய முகவரி அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில்
திருகுறுக்கை
நீடூர் அஞ்சல்
வழி நீடூர்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609203

இவ்வாலயம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Korukkai route map

மயிலாடுதுறையில் இருந்து திருகுறுக்கை
செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

திருக்குறுக்கை சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் மன்மதனை எரித்த தலம். சூரபன்மன், தாரகன் ஆகிய அசுரர்களின் தொல்லைகளை தீர்க்க சிவபெருமான் ஒரு குமாரனைத் தோன்றச் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் காரனமாக தேவர்கள் யோக நிலையில் இருக்கும் சிவபெருமானின் தவத்தைக் கலைக்க மன்மதனை அனுப்பினார்கள். மன்மதன் இறைவன் இருக்குமிடம் சென்று இறைவன் மீது காமபாணம் தொடுத்தான். காமன் தொடுத்த மலர்க்கணை இறைவனின் தவத்தை ஒரு கணம் சலனப்படுத்தியது. இறைவன் கோபமுற்று கண் திறந்து காமனைப் பார்க்க அவன் எரிந்து சாம்பலானான். மன்மதனின் மனைவி ரதி இறைவனிடம் அழுது கணவனின் பிழை பொறுத்தருள பிரார்த்தித்தாள். இறைவன் ரதியிடம் தான் பூலோகத்தில் பார்வதியை மணம் புரிந்து கொள்ளும் போது மன்மதனுக்கு சாபவிமோசனம் கிட்டும் என்று அருள் புரிந்தார்.

கோவில் விபரங்கள்: வீரட்டேஸ்வரர் ஆலயம் மேற்கு நோக்கி உள்ளது. ஐந்து நிலைகள் கொண்ட நுழைவாயிலில் அமைந்துள்ள கோபுரத்தில் பைரவர், காமதகனர் சுதைச் சிற்பங்கள் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. நுழைவாயில் எதிரில் வெளியே இத்தலத்து தீர்த்தம் சூலகங்கை ஒரு தடாக வடிவில் அமைந்துள்ளது. கோபுர நுழைவாயில் உட்சென்று வலம் வந்து மகாமண்டபம் அடைந்தால் அதன் வடபுறத்தில் தெற்கு நோக்கியவாறு இறைவி ஞானாம்பிகை சந்நிதி உள்ளது. இதனையடுத்து காமதகனமூர்த்தி எழுந்தருளியுள்ள சபை உள்ளது. இதனுள் சிவபெருமான் யோகமூர்த்தியாக வீற்றிருக்கிறார். இடது காலை மடித்துக் குத்திட்டு வலது காலை தொங்கவிட்டுக் கொண்டு அமர்ந்துள்ளார். சிவபெருமானைச் சுற்றி சனகாதி முனிவர்கள் உள்ளனர். இங்கு சிவன் யோக மூர்த்தியாக இருப்பதால் நினைத்தவுடன் சென்று எளிதாக பார்க்க இயலாது. எப்படியாவது தடங்கல் வந்து விடும். அதையும் மீறி நாம் சுவாமியை தரிசித்து விட்டால் நமக்கு யோக நிலை கைகூடும் என்கிறார்கள். சுவாமி அனுக்கிரக மூர்த்தியாக இருப்பதால், தெரியாமல் தவறு செய்பவர்கள் இவரை வணங்கினால் நமது தவறை மன்னித்து அனுக்கிரகம் புரிகிறார். காமதகன மூர்த்தியை வழிபட்டால் உடல் பலம் பெறும்.நோய் நொடி விலகும். தியான பலமும், மனோபலமும் கிடைக்கும்.

சிவபெருமானின் இடப்புறம் அம்பிகை நின்ற நிலையில் காட்சியளிக்கிறாள். இங்குள்ள சிவமூர்த்தம் நடைமுறையில் காமதகனமூர்த்தி என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் ரதியின் வேண்டுகோளிற்கு இணங்கி மன்மதனை உயிர்ப்பித்து எழுப்பி இருவருக்கும் அருள் புரிந்த இடமே இத்தலம். இதையொட்டி இச்சந்நிதிக்கு நேர் எதிரில் ரதி மன்மதன் சிற்பங்கள் இருக்கின்றன. கருவறையில் மூலவர் வீரட்டேஸ்வரர் சதுரமான ஆவுடையார் மேல் லிங்கத் திருமேனியுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். லிங்கத்தை உற்றுப் பார்த்தால் மன்மதன் சிவபெருமான் மேல் எய்த ஐவகை மலர்களும் குறிப்பாக தாமரை மலர் பதிந்திருப்பதைக் காணலாம். மூலவர் வீரட்டேசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். இத்தலத்து விநாயகர் குறுங்கை விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். சுவாமி கருவறை விமானத்தில் இறைவன் யோகத்தில் வீற்றிருத்தல், மன்மதன் மலர்க்கணை தொடுத்தல், காமனை இறைவன் விழித்து எரித்தல் முதலிய இத்தல வரலாற்று நிகழ்ச்சிகள் சுதைச் சிறபங்களாக அமைக்கப் பெற்றுள்ளன.

அருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தல முருகப்பெருமான் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு இருதேவியருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். உற்சவர் வில்லேந்திய கோலத்தில் காட்சி தருகிறார்.

தலம் பெயர் வரலாறு: புராண காலத்தில் தீர்த்தவாகு என்ற முனிவர் சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கு ஆகாய கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்யும் இயல்புடையவர். கோவிலின் நுழைவு வாயிலுக்கு முன் இருக்கும் சூல தீர்த்தம் கங்கையைவிட புனிதமானது. இதன் பெருமை அறியாது தீர்த்தவாகு முனிவர் இத்தலத்தை அடைந்து கங்கையைக் கொண்டுவர விரும்பி தன் நீண்ட கைகளை உயரத் தூக்க அவை குறுகின. அக்காரணத்தால் இத்தலத்தின் பெயர் குறுக்கை என்று வழங்கலாயிற்று. இவ்வாலயத்தில் குறுங்கை விநாயகர் சந்நிதியில் அவருக்கு அருகில் குறுங்கை முனிவரின் உருவம் உள்ளது. குறுங்கை விநாயகர் ஆவுடையார் மீது இருப்பது விசேஷமானது.

திருகுறுக்கை வீரட்டேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


5 நிலை இராஜகோபுரம்


கோபுர வாயிலுக்கு எதிரிலுள்ள சூல தீர்த்தம்


வெவ்வால் நெத்தி மண்டபம்


நவக்கிரக சந்நிதி


நடராஜர் சபை


குறுங்கை விநாயகர்


இறைவன் சந்நிதி முன் நந்தி, பலிபீடம்


தல விருட்சம் கடுக்காய் மரம்


கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி


கோஷ்டத்தில் அண்ணாமலையார் = இருபுறமும் விஷ்ணு, பிரம்மா


ஆலயம் உட்புறத் தோற்றம்


அம்பாள் ஞானாம்பிகை

திருநாவுக்கரசர் பதிகம் - 4-ம் திருமுறை

1. ஆதியிற் பிரம னார்தாம் அர்ச்சித்தார் அடியி ணைக்கீழ்
ஓதிய வேத நாவர் உணருமா றுணர லுற்றார்
சோதியுட் சுடராய்த் தோன்றிச் சொல்லினை யிறந்தார் பல்பூக்
கோதிவண் டறையுஞ் சோலைக் குறுக்கை வீ ரட்டனாரே. 

2. நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமஞ் செய்து
ஆற்றுநீர் பூரித் தாட்டும் அந்தண னாரைக் கொல்வான்
சாற்றுநாள் அற்ற தென்று தருமரா சற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலுங் குறுக்கை வீ ரட்டனாரே. 

3. தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த் தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக் கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் றாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார் குறுக்கை வீ ரட்டனாரே. 

4. சிலந்தியும் ஆனைக் காவிற் திருநிழற் பந்தர் செய்து
உலந்தவண் இறந்த போதே கோச்செங்க ணானு மாகக்
கலந்தநீர்க் காவி ரிசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனிற் பிறப்பித் திட்டார் குறுக்கை வீ ரட்டனாரே. 

5. ஏறுடன் ஏழ டர்த்தான் எண்ணியா யிரம்பூக் கொண்டு
ஆறுடைச் சடையி னானை அர்ச்சித்தான் அடியி ணைக்கீழ்
வேறுமோர் பூக்கு றைய மெய்ம்மலர்க் கண்ணை மிண்டக்
கூறுமோர் ஆழி ஈந்தார் குறுக்கை வீ ரட்டனாரே. 

6. கல்லினால் எறிந்து கஞ்சி தாமுணுஞ் சாக்கி யனார்
நெல்லினார் சோறு ணாமே நீள்விசும் பாள வைத்தார்
எல்லியாங் கெரிகை ஏந்தி எழில்திகழ் நட்ட மாடிக்
கொல்லியாம் பண்ணு கந்தார் குறுக்கை வீ ரட்டனாரே. 

7. காப்பதோர் வில்லும் அம்புங் கையதோர் இறைச்சிப் பாரந்
தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத் தூயவாய்க் கலசம் ஆட்டித்
தீப்பெருங் கண்கள் செய்யக் குருதிநீர் ஒழுகத் தன்கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கை வீ ரட்டனாரே. 

8. நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந் தன்னைக்
கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவா னுலக மெல்லாங்
குறைவறக் கொடுப்பர் போலுங் குறுக்கை வீ ரட்டனாரே. 

9. அணங்குமை பாக மாக அடக்கிய ஆதி மூர்த்தி
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்துநல் அருந்த வத்த
கணம்புல்லர்க் கருள்கள் செய்து காதலாம் அடியார்க் கென்றுங்
குணங்களைக் கொடுப்பர் போலுங் குறுக்கை வீ ரட்டனாரே. 

10. எடுத்தனன் எழிற் கயிலை இலங்கையர் மன்னன் தன்னை
அடுத்தொரு விரலால் ஊன்ற அலறிப்போய் அவனும் வீழ்ந்து
விடுத்தனன் கைந ரம்பால் வேதகீ தங்கள் பாடக்
கொடுத்தனர் கொற்ற வாணாள் குறுக்கை வீ ரட்டனாரே. 

இத்தலத்திற்கான திருநாவுக்கரசர் இயற்றிய இரண்டு பதிகங்களும் 4-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. ஒரு பதிகத்தின் முதல் இரண்டு பாடல்கள் தவிர மற்றைய பாடல்கள் சிதைந்து போயின. மற்றொரு பதிகம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பதிகத்தின் பாடல்களில் இறைவன் மார்கண்டேயருக்கு அருள் புரிந்தது, சண்டேசருக்கு அருளியது, முற்பிறப்பில் சிலந்தியாக இருந்தபோது செய்த தொண்டிற்காக மறுபிறப்பில் கோச்செங்கட் சோழனாக பிறப்பிக்கச் செய்தது, திருமால் ஆயிரம் மலர்கள் கொண்டு சிவனை பூஜிக்க, ஒரு நாள் மலர்களில் ஒன்று குறைய தன் கண்ணையே பறித்து திருமால் அர்ச்சிக்க அவருக்கு அருள் செய்தது, தினந்தோறும் கல்லால் அடித்து பூஜை செய்த சாக்கிய நாயானாருக்கு அருளியது. கண்ணப்ப நாயானாருக்கு அருளியது, திருமறைக்காட்டில் அணைந்து போகும் நிலையில் இருந்த விளக்கை தன் மூக்கால் தூண்டி பிரகாசமாக எரியச் செய்த எலியை மறுபிறப்பில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறக்கச் செயது அருளியது ஆகியவற்றை எல்லாம் குறிப்பிட்டு குறுக்கை வீரட்டனாரை சிறப்பித்துப் பாடியுள்ளார்.