Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

குந்தளநாதர் கோவில், திருக்குரக்குக்கா

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருக்குரக்குக்கா (தற்போது திருக்குரக்காவல் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்குந்தளநாதர்
இறைவி பெயர்குந்தளநாயகி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் "இளந்தோப்பு" என்ற ஊரை அடைந்து, ஊரிலுள்ள மருத்துவமனைக் கட்டிடத்திற்குப் பக்கத்தில் செல்லும் திருக்குரக்காவல் சாலையில் 3 கி.மீ. உள்ளே சென்றால் கோயிலையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். திருக்கருப்பறியலூர் என்னும் பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து வடக்கே 1 கி.மி. தொலைவில் திருக்குரக்குக்கா சிவஸ்தலம் இருக்கிறது.
ஆலய முகவரி அருள்மிகு குந்தளநாதர் திருக்கோவில்
திருக்குரக்காவல்
இளந்தோப்பு அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டிணனம் மாவட்டம்
PIN - 609201

இவ்வாலயம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து சென்றால் பலிபீடம் நந்தி உள்ளன. கொடிமரமில்லை. வெளிப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. முன்மண்டபத்தில் வலதுபுறம் பைரவர், சூரியன், அநுமன் மூர்த்தங்கள் உள்ளன. வாயில் முகப்பில் அநுமன் சுவாமியைப் பூசிப்பதுபோல வண்ண ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.

முன் மண்டபம் வழியே உள்ளே சென்றால் நேரே சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியும், வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் உள்ளன. சிவன் சன்னதி எதிரே அனுமனுக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலை ஆஞ்சனேயர் உருவாக்கி சிவனை பூஜித்தார் என்று தலபுராணம் கூறுகிறது. இத்தலத்தின் பிரசித்தி பெற்ற மூர்த்தி இந்த அனுமனே. ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது. சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து, சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுவது காண வேண்டிய ஒன்றாகும்.

திருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது

மரக்கொக் காமென வாய்விட் டலறிநீர் 
சரக்குக் காவித் திரிந்தய ராதுகால் 
பரக்குங் காவிரி நீரலைக் குங்கரைக் 
குரக்குக் காவடை யக்கெடுங் குற்றமே.

கட்டா றேகழி காவிரி பாய்வயல் 
கொட்டா றேபுன லூறு குரக்குக்கா 
முட்டா றாவடி யேத்த முயல்பவர்க் 
கிட்டா றாவிட ரோட எடுக்குமே. 

கைய னைத்துங் கலந்தெழு காவிரி 
செய்ய னைத்திலுஞ் சென்றிடுஞ் செம்புனல் 
கொய்ய னைத்துங் கொணருங் குரக்குக்கா 
ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே. 

மிக்க னைத்துத் திசையும் அருவிகள் 
புக்குக் காவிரி போந்த புனற்கரைக் 
கொக்கி னம்பயில் சோலைக் குரக்குக்கா 
நக்க னைநவில் வார்வினை நாசமே. 

விட்டு வெள்ளம் விரிந்தெழு காவிரி 
இட்ட நீர்வய லெங்கும் பரந்திடக் 
கொட்ட மாமுழ வோங்கு குரக்குக்கா 
இட்ட மாயிருப் பார்க்கிட ரில்லையே. 

மேலை வானவ ரோடு விரிகடல் 
மாலும் நான்முக னாலுமளப் பொணாக் 
கோல மாளிகைக் கோயில் குரக்குக்காப் 
பால ராய்த்திரி வார்க்கில்லை பாவமே. 

ஆல நீழ லமர்ந்த அழகனார் 
கால னையுதை கொண்ட கருத்தனார் 
கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்காப் 
பால ருக்கருள் செய்வர் பரிவொடே.  

செக்க ரங்கெழு செஞ்சுடர்ச் சோதியார் 
அக்க ரையரெம் மாதிபு ராணனார் 
கொக்கி னம்வயல் சேருங் குரக்குக்கா 
நக்க னைத்தொழ நம்வினை நாசமே. 

உருகி ஊன்குழைந் தேத்தி யெழுமின்நீர் 
கரிய கண்டன் கழலடி தன்னையே 
குரவ னஞ்செழுங் கோயில் குரக்குக்கா 
இரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே.  

இரக்க மின்றி மலையெடுத் தான்முடி 
உரத்தை யொல்க அடர்த்தா னுறைவிடங் 
குரக்கி னங்குதி கொள்ளுங் குரக்குக்கா 
வரத்த னைப்பெற வானுல காள்வரே.