Shiva Temples of Tamilnadu
தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
நீலகண்டேசுவரர் கோவில், திருமண்ணிப்படிக்கரை (தற்போது இலுப்பைப்பட்டு என்று வழங்குகிறது)
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருமண்ணிப்படிக்கரை |
| இறைவன் பெயர் | நீலகண்டேசுவரர், படிக்கரைநாதர் |
| இறைவி பெயர் | அமிர்தகரவல்லி, மங்களநாயகி |
| பதிகம் | சுந்தரர் - 1 |
| எப்படிப் போவது | வைத்தீஸ்வரன் கோவில் சிவஸ்தலத்தில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் மணல்மேடு தாண்டி பாப்பாக்குடி என்ற ஊர் வரும். அங்கிருந்து 2 கி.மி. தொலைவில் மண்ணியாற்றின் தென்கரையில் திருமண்ணிப்படிக்கரை சிவஸ்தலம் உள்ளது. தற்போது இலுப்பைப்பட்டு என்று வழங்குவதால், இலுப்பைப்பட்டு செல்லும் வழி எது என்று கேட்டுச் செல்ல வேண்டும். |
| ஆலய முகவரி |
அருள்மிகு நீலகண்டேசுவரர் திருக்கோவில் இலுப்பைப்பட்டு மணல்மேடு அஞ்சல் மயிலாடுதுறை வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 609202 இவ்வாலயம் காலை 6 மணி முதல் 11-30 மணி வரையும், மாலை 3-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
மண்ணியாற்றின் கரையில் அமைந்ததனால் திருமண்ணிப்படிக்கரை என்றும், இலுப்பை மரம் தலவிருட்சமாக உள்ளதால் இலுப்பைப்பட்டு என்றும் இத்தலம் பெயர் பெற்றது. தற்போது இலுப்பைப்பட்டு என்ற பெயர் சொன்னால் தான் வழி கூறுவர். பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட தலம் என்ற பெருமையுடையது இத்தலம். இவ்வாலயத்திலுள்ள ஐந்து சிவலிங்கங்களை பஞ்சபாண்டவர்கள் வழிபட்டுள்ளனர். பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்தபோது, இங்கு சிலகாலம் தங்கியிருந்தனர். அப்போது இத்தலத்தில் தர்மர் நீலகண்டரையும், அர்ச்சுனன் படிக்கரைநாதரையும், பீமன் மகதீசரையும், நகுலன் பரமேசரையும், சகாதேவன் முத்துகிரீஸ்வரரையும் பூசித்துள்ளனர்.
துரியோதனன் பஞ்சபாண்டவர்களைக் கொல்ல இங்குள்ள தீர்த்தத்தில் விஷத்தைச் சேர்த்தான். அம்பிகை அவ்விஷத்தைத் தன் கையிலிருந்த அமுதத்தால் முறித்து பிறகு அந்நஞ்சை இறைவன் சிவபெருமான் உண்டார். அதனாலேயே இத்தலத்து இறைவன் நீலகண்டர் எனப் பெயர் பெற்றார். அமிர்தத்தைத் தன் கையில் வைத்திருந்த காரணத்தால் இறைவி அமிர்தகரவல்லி எனப் பெயர் பெற்றார்.
3 நிலை இராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றால் இடதுபுறம் தலமரம் இலுப்பை உள்ளது. பிராகாரத்தில் வீமன், நகுலன், பூசித்த லிங்கங்களும், அடுத்து திரௌபதி வழிபட்ட வலம்புரி விநாயகரும், வலதுபுறம் அமிர்தகரவல்லி அம்பாள் சந்நிதியும் உள்ளன. இடதுபுறம் சுப்பிரமணியரும், மகாலட்சுமி சந்நிதிகளும், அடுத்துச் சகாதேவன் லிங்கமும் உள்ளது. வலம்முடித்துப் படிகளேறி மேலே சென்றால் நேரே சுவாமி நீலகண்டேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தர்மர் வழிபட்ட நீலகண்டேஸவரர், அர்ச்சுனன் வழிபட்ட படிக்கரைநாதர் ஆகிய இருவரும் பிரதான மூர்த்திகளாக வணங்கப்படுகின்றனர். இவர்களுக்கு எதிரில் மட்டுமே நந்தி இருக்கிறது. நீலகண்டேஸ்வரர், படிகரைநாதர் இருவருக்கும் அம்பிகை சந்நிதிகள் உள்ளன. பீமன் வழிபட்ட சிவன் 16 பட்டைகளுடன் சோடஷலிங்கமாக காட்சி தருகிறார். பதினாறு செல்வமும் பெற இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். சகாதேவன் வழிபட்ட முத்துகிரீஸ்வரர், தெற்கு நோக்கி இருக்கிறார். சாஸ்திரம், ஜோதிடம் கற்பவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கின்றனர்.
இத்தலத்திலுள்ள முருகப் பெருமானை திருப்புகழில் அருணகிரிதாதர் பாடியுள்ளார். வடக்குப் பிரகாரத்தில் முருகர் சந்நிதி உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது:
முன்னவன் எங்கள்பிரான் முதற்காண்பரி தாயபிரான் சென்னியில் எங்கள்பிரான் திருநீலமி டற்றெம்பிரான் மன்னிய எங்கள்பிரான் மறைநான்குங்கல் லால்நிழற்கீழ்ப் பன்னிய எங்கள்பிரான் பழமண்ணிப் படிக்கரையே. அண்ட கபாலஞ்சென்னி அடிமேலல ரிட்டுநல்ல தொண்டங் கடிபரவித் தொழுதேத்திநின் றாடுமிடம் வெண்டிங்கள் வெண்மழுவன் விரையார்கதிர் மூவிலைய பண்டங்கன் மேயவிடம் பழமண்ணிப் படிக்கரையே. ஆடுமின் அன்புடையீர் அடிக்காட்பட்ட தூளிகொண்டு சூடுமின் தொண்டருள்ளீர் உமரோடெமர் சூழவந்து வாடுமிவ் வாழ்க்கைதன்னை வருந்தாமல் திருந்தச்சென்று பாடுமின் பத்தருள்ளீர் பழமண்ணிப் படிக்கரையே. அடுதலை யேபுரிந்தான் அவைஅந்தர மூவெயிலுங் கெடுதலை யேபுரிந்தான் கிளருஞ்சிலை நாணியிற்கோல் நடுதலை யேபுரிந்தான் நரிகான்றிட்ட எச்சில்வெள்ளைப் படுதலை யேபுரிந்தான் பழமண்ணிப் படிக்கரையே. உங்கைக ளாற்கூப்பி உகந்தேத்தித் தொழுமின்தொண்டீர் மங்கையோர் கூறுடையான் வானோர்முத லாயபிரான் அங்கையில் வெண்மழுவன் அலையார்கதிர் மூவிலைய பங்கய பாதனிடம் பழமண்ணிப் படிக்கரையே. செடிபடத் தீவிளைத்தான் சிலையார்மதில் செம்புனஞ்சேர் கொடிபடு மூரிவெள்ளை எருதேற்றையும் ஏறக்கொண்டான் கடியவன் காலன்றன்னைக் கறுத்தான்கழற் செம்பவளப் படியவன் பாசுபதன் பழமண்ணிப் படிக்கரையே. கடுத்தவன் தேர்கொண்டோ டிக் கயிலாயநன் மாமலையை எடுத்தவன் ஈரைந்துவாய் அரக்கன்முடி பத்தலற விடுத்தவன் கைநரம்பால் வேதகீதங்கள் பாடலுறப் படுத்தவன் பால்வெண்ணீணற்றன் பழமண்ணிப் படிக்கரையே. திரிவன மும்மதிலும் எரித்தான்இமை யோர்பெருமான் அரியவன் அட்டபுட்பம் அவைகொண்டடி போற்றிநல்ல கரியவன் நான்முகனும் அடியும்முடி காண்பரிய பரியவன் பாசுபதன் பழமண்ணிப் படிக் கரையே. வெற்றரைக் கற்றமணும் விரையாதுவிண் டாலமுண்ணுந் துற்றரைத் துற்றறுப்பான் றுன்னஆடைத் தொழிலுடையீர் பெற்றரைப் பித்தரென்று கருதேன்மின் படிக்கரையுள் பற்றரைப் பற்றிநின்று பழிபாவங்கள் தீர்மின்களே. பல்லுயிர் வாழுந்தெண்ணீணர்ப் பழமண்ணிப் படிக்கரையை அல்லியந் தாமரைத்தார் ஆரூரன் உரைத்ததமிழ் சொல்லுதல் கேட்டல்வல்லா ரவர்க்குந்தமர்க் குங்கிளைக்கும் எல்லியும் நன்பகலும் இடர்கூருதல் இல்லையன்றே.
