Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

பதஞ்சலி நாதர் கோவில், திருக்கானாட்டுமுள்ளூர்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருக்கானாட்டுமுள்ளூர்(தற்போது கானாட்டம்புலியூர் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்பதஞ்சலி ஈஸ்வரர்
இறைவி பெயர்கானார்குழலி அம்மை, அம்புஜாட்சி
பதிகம்சுந்தரர் - 1
எப்படிப் போவது கொள்ளிடக்கரையில் உள்ள இத்தலத்தை அடைய சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்குடி சென்று, அங்கிருந்து ஓமாம்புலியூர் செல்லும் பேருந்துச் சாலையில் சென்று, மோவூர் என்ற கிராமத்தைத் தாண்டி மேலும் சென்று, சாலையில் முட்டம் என்று வழிகாட்டிக்கல் உள்ள இடத்தில் பிரியும் சாலையில் 3 கி.மீ. சென்று முட்டம் கிராமத்தையடைந்து, ஊருள் புகுந்து செல்லும் சாலை வழியே சுமார் 2 கி.மீ. செல்ல இத்தலம் வரும். குறுகலான சாலை. கோயில் வரை வாகனத்தில் செல்லலாம். ஓமாம்புலியூரிலிருந்தும் இத்தலத்திற்கு இவ்வழியே வரலாம். காட்டுமன்னார்குடியில் இருந்து கமலம் என்ற மினி பேருந்து கானாட்டம்புலியூர் வழியாக முட்டம் செல்கிறது. கானாட்டம்புலியூர் நிறுத்தத்தில் இறங்கி சுமார் அரை கி.மீ. நடந்து சென்று இக்கோவிலை அடையலாம்.
ஆலய முகவரி அருள்மிகு பதஞ்சலி ஈஸ்வரர் திருக்கோவில்
கானாட்டம்புலியூர்
முட்டம் அஞ்சல்
காட்டுமன்னார்குடி வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN - 608306

இவ்வாலயம் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுரத்திற்கு வெளியே எதிரில் சூரிய தீர்த்தம் உள்ளது. கோபுர வாயிலை க் கடந்து உள்ளே சென்றால் முன்னுள்ள மண்டபத்தில் பலிபீடமும், நந்தியும் உள்ளனர். வலதுபுறம் அம்பாள் கானார்குழலி அம்மையின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. அம்பாளுக்கு அம்புஜாட்சி, கோலவளைக்கை அம்பிகை என்ற பெயர்களும் உண்டு. அம்பாள் சந்நிதிக்கு வரதுபுறம் சனீஸ்வரர் தனி சன்னதியில் இருக்கிறார். சனிதோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனைகள் செய்து கொள்கின்றனர். முன்மண்டபத்தில் இரண்டு நாகங்களுக்கு நடுவே கிருஷ்ணனும், அருகே நாகங்களுக்கு நடுவே லிங்கமும் இருக்கிறது.

முன் மண்டபம் தாண்டி நேரே உள்ளே சென்றால் மூலவர் பதஞ்சலி ஈஸ்வரர் சிறிய லிங்க உருவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதத்தில் 3 நாட்கள் சூரியன் தன் ஒளியை சூரியன் மீது பரப்பி பூஜிக்கிறார். கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறைச் சுற்றில் மகாவிஷ்ணுவிறகு நேர் எதிரே வள்ளி தெய்வனை சமேத முருகர் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருகில் கஜலட்சுமிக்கும் தனி சந்நிதி உள்ளது. கருவறைச் சுற்றில் காசி விஸ்வநாதர், காசிவிசாலாட்சி, நிருதிவிநாயகர் ஆகியோரும் தனி சந்நிதிகளில் அருள் பாலிக்கின்றனர். கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்திக்கு மேல் கல்லால மரம் இல்லை. நடராஜர் சந்நிதிக்கு எதிரே நால்வருடன் விநாயகரும், பதஞ்சலி முனிவரும் காணப்படுகின்றனர். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு சுவாமி மற்றும் பதஞ்சலியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.

தல வரலாறு: பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம் சிவபெருமானின் நடனத்தை தரிசனம் செய்யும் விருப்பத்தை வெளியிட்டார் ஆதிசேஷன். மகாவிஷணுவின் ஆணைப்படி பதஞ்சலி முனிவராக அவதாரம் எடுத்து சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். சிவன் அவருக்கு சிதம்பரத்தில் தன் நடனக் காட்சியை காட்டி அருளினார். பதஞ்சலி முரிவர் ஒருமுறை இத்தலத்திற்கு வந்தார். வந்த இடத்தில் சிவபெருமானின் நடனத்தைக் காணவேண்டும் என்று விருமினார். அவருக்கு சிவன் இத்தலத்திலும் தன் நடனத்தைக் காட்டி அருள் செய்தார். பதஞ்சலி ஈஸ்வரர் என்ற பெயரையும் இத்தல இறைவன் பெற்றார்.

திருக்கானாட்டுமுள்ளூர் பதஞ்சலி ஈஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

3நிலை இராஜகோபுரம்

முன் மண்டபத்தில் நந்தி, பலிபீடம்

கோஷ்டத்தில் விநாயகர்

கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி

கஜலட்சுமி சந்நிதி

நால்வருடன் விநாயகர், பதஞ்சலி முனிவர்

வள்ளி தெய்வானை சமேத முருகர்

மூலவர் பதஞ்சலி ஈஸ்வரர்

அம்பிகை கானார்குழலி அம்மை

மூலவர் விமானம்

சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது

வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை
மறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப்
புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கியுமிழ்ந் தானைப்
பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி னானை
முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று
மொட்டலர்ந்து விரைநாறும் முருகுவிரி பொழில்சூழ்
கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. 

ஒருமேக முகிலாகி ஒத்துலகந் தானாய்
ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளுந் தானாய்ப்
பொருமேவு கடலாகிப் பூதங்கள் ஐந்தாய்ப்
புனைந்தவனைப் புண்ணியனைப் புரிசடையி னானைத்
திருமேவு செல்வத்தார் தீமூன்றும் வளர்த்த
திருத்தக்க அந்தணர்கள் ஓதுநக ரெங்குங்
கருமேதி செந்தாம ரைமேயுங் கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. 

இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை
இறையவனை மறையவனை எண்குணத்தி னானைச்
சுரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியஞ் சூடுஞ்
சடையானை விடையானைச் சோதியெனுஞ் சுடரை
அரும்புயர்ந்த அரவிந்தத் தணிமலர்க ளேறி
அன்னங்கள் விளையாடும் அகன்றுறையின் அருகே
கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. 

பூளைபுனை கொன்றையொடு புரிசடையி னானைப்
புனலாகி அனலாகிப் பூதங்கள் ஐந்தாய்
நாளைஇன்று நெருநலாய் ஆகாய மாகி
ஞாயிறாய் மதியமாய் நின்றவெம் பரனைப்
பாளைபடு பைங்கமுகின் சூழலிளந் தெங்கின்
படுமதஞ்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக்
காளைவண்டு பாடமயில் ஆலும்வளர் சோலைக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. 

செருக்குவாய்ப் பைங்கண்வெள் ளரவரையி னானைத்
தேவர்கள்சூ ளாமணியைச் செங்கண்விடை யானை
முருக்குவாய் மலரொக்குந் திருமேனி யானை
முன்னிலையாய் முழுதுலக மாயபெரு மானை
இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்பு ளெங்கும்
வேள்வியிருந் திருநிதியம் வழங்குநக ரெங்கும்
கருக்குவாய்ப் பெண்ணையொடு தெங்குமலி சோலைக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. 

விடையரவக் கொடியேந்தும் விண்ணவர்தங் கோனை
வெள்ளத்து மாலவனும் வேதமுத லானும்
அடியிணையுந் திருமுடியுங் காணவரி தாய
சங்கரனைத் தத்துவனைத் தையல்மட வார்கள்
உடையவிழக் குழலவிழக் கோதைகுடைந் தாடக்
குங்குமங்கள் உந்திவரு கொள்ளிடத்தின் கரைமேற்
கடைகள்விடு வார்குவளை களைவாருங் கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. 

அருமணியை முத்தினை ஆனஞ்சும் ஆடும்
அமரர்கள்தம் பெருமானை அருமறையின் பொருளைத்
திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத்
தெரிவரிய மாமணியைத் திகழ்தருசெம் பொன்னைக்
குருமணிகள் கொழித்திழிந்து சுழித்திழியுந் திரைவாய்க்
கோல்வளையார் குடைந்தாடுங் கொள்ளிடத்தின் கரைமேற்
கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. 

இழைதழுவு வெண்ணூலும் மேவுதிரு மார்பின்
ஈசன்றன் எண்டோ ள்கள் வீசியெரி யாடக்
குழைதழுவு திருக்காதிற் கோளரவ மசைத்துக்
கோவணங்கொள் குழகனைக் குளிர்சடையி னானைத்
தழைதழுவு தண்ணிறத்த செந்நெலதன் அயலே
தடந்தரள மென்கரும்பின் தாழ்கிடங்கி னருகே
கழைதழுவித் தேன்றொடுக்குங் கழனிசூழ் பழனக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. 

குனிவினிய கதிர்மதியஞ் சூடுசடை யானைக்
குண்டலஞ்சேர் காதவனை வண்டினங்கள் பாடப்
பனியுதிருஞ் சடையானைப் பால்வெண்ணீற் றானைப்
பலவுருவுந் தன்னுருவே ஆயபெரு மானைத்
துனிவினிய தூயமொழித் தொண்டைவாய் நல்லார்
தூநீலங் கண்வளருஞ் சூழ்கிடங்கி னருகே
கனிவினிய கதலிவனந் தழுவுபொழிற் சோலைக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. 

தேவியம்பொன் மலைக்கோமன் றன்பாவை யாகத்
தனதுருவம் ஒருபாகஞ் சேர்த்துவித்த பெருமான்
மேவியவெந் நரகத்தில் அழுந்தாமை நமக்கு
மெய்ந்நெறியைத் தான்காட்டும் வேதமுத லானைத்
தூவிவாய் நாரையொடு குருகுபாய்ந் தார்ப்பத்
துறைக்கெண்டை மிளிர்ந்துகயல் துள்ளிவிளை யாடக்
காவிவாய் வண்டுபல பண்செய்யுங் கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. 

திரையினார் கடல்சூழ்ந்த தென்னிலங்கைக் கோனைச்
செற்றவனைச் செஞ்சடைமேல் வெண்மதியி னானைக்
கரையினார் புனல்தழுவு கொள்ளிடத்தின் கரைமேற்
கானாட்டு முள்ளூரிற் கண்டுகழல் தொழுது
உரையினார் மதயானை நாவலா ரூரன்
உரிமையால் உரைசெய்த ஒண்டமிழ்கள் வல்லார்
வரையினார் வகைஞாலம் ஆண்டவர்க்குந் தாம்போய்
வானவர்க்குந் தலைவராய் நிற்பரவர் தாமே.