Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருநாரையூர்
இறைவன் பெயர்சௌந்தரேஸ்வரர்
இறைவி பெயர்திரிபுரசுந்தரி
பதிகம்திருநாவுக்கரசர் - 2
திருஞானசம்பந்தர் - 3
எப்படிப் போவது சிதம்பரத்தில் இருந்து குமராட்சி வழியாக காட்டுமன்னார்குடி செல்லும் வழியில், சிதம்பரத்தில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவிலும், காட்டுமன்னார்குடியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலும் திருநாரையூர் சிவஸ்தலம் அமைந்துள்ளது. சிதம்பரம் - காட்டுமன்னார்குடி (வழி குமராட்சி) சாலையில் செல்லும் பேருந்துகளில் சென்று திருநாரையூர் விலக்கு நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து ஒரு கி.மீ. நடந்தால் இத்தலத்தை அடையலாம்.
ஆலய முகவரிஅருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோவில்
திருநாரையூர் அஞ்சல்
காட்டுமன்னார்குடி வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN - 608303

இவ்வாலயம் காலை 6 மணி முதல் 11-30 மணி வரையும், மாலை 3-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
tirunaraiyur route map

சிதம்பரத்தில் இருந்து திருநாரையூர் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

தல வரலாறு: ஒருமுறை கந்தர்வன் ஒருவன் ஆகாய வழியே சென்று கொண்டிருந்தான். அப்போது அவன் சாப்பிட்ட ஒரு பழத்தின் கொட்டையை கீழே போட்டான். அது அங்கு தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவர் மீது விழுந்தது. தவம் கலைந்த மகரிஷி, அவனை நாரையாக பிறக்கும்படி செய்து விட்டார். அவன் சாப விமோசனம் கேட்டு கதறியழுத போது இத்தலத்திலுள்ள சௌந்தரேஸ்வரரை தினமும் காசி கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து விமோசனம் பெறுக என்று கூறினார். சாபம் அடைந்த நாரை அதன்படி தினந்தோறும் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டது. தனது வாயில் கங்கை நீரைக் கொண்டு வந்து இங்கிருந்த லிங்கத்திற்கு கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து கந்தர்வனாக மீண்டும் சுய வடிவம் பெற்றது. நாரை வந்து பூஜித்த தலம் என்பதால் இவ்வூர் "திருநாரையூர்" எனப்பட்டது.

சாபம் அடைந்த நாரை, ஒருநாள் சுவாமியை வழிபட வந்தபோது, இறைவனின் சோதனையால் புயலுடன் கடும்மழை பிடித்துக் கொண்டது. காற்றை எதிர்த்து பறந்ததில், அதன் சிறகுகள் ஒவ்வொன்றாக விழுந்தன. அப்போது, வாயில் இருந்த தீர்த்தத்திலிருந்து சில துளிகள் பூமியில் விழுந்தன. இது ஒரு குளமாக மாறியது. இதற்கு "காருண்ய தீர்த்தம்" என்று பெயர். இத்தீர்த்தம் கோயிலுக்கு வெளியில் உள்ளது. நாரையின் சிறகு முறிந்து விழுந்த இடம் சிறகிழந்தநல்லூர் என்று பெயர் பெற்றது. இந்த சிறகிழந்தநல்லூர் என்ற ஊர் இங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு தேவார வைப்புத்தலமான ஞானபுரீஸ்வரர் கோயில் உள்ளது.

தலச் சிறப்பு: இத்தலத்திலுள்ள ஆலயம் சிவாலயமாக இருந்தாலும், இங்கு விநாயகருக்கே முக்கியத்துவம் அதிகம். இவர் "பொள்ளாப் பிள்ளையார்" என அழைக்கப்படுகிறார். "பொள்ளா" என்றால் "உளியால் செதுக்கப்படாத" என்று அர்த்தம். அதாவது, இந்தப் பிள்ளையார் உளியார் செதுக்கப்படாமல் சுயம்புவாக தானே நோன்றியவர்.

tirunaraiyur route map

காட்டுமன்னார்குடியில் இருந்து திருநாரையூர் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

அனந்தேசர் என்ற பக்தர் இவருக்கு பூஜை செய்து வந்தார். சுவாமிக்குப் படைக்கும் நைவேத்யத்தை பக்தர்களுக்கு கொடுத்துவிட்டு வீட்டிற்கு செல்வது அவரது வழக்கம். வீட்டிலிருக்கும் அவரது மகன் (சிறுவன்) நம்பியாண்டார்நம்பி அவரிடம் பிரசாதம் கேட்கும்போது, "விநாயகர் சாப்பிட்டுவிட்டார்" என சொல்லிவிடுவார். ஒருசமயம் அனந்தேசர் வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், மகனை பூஜை செய்ய அனுப்பினார். அவன் விநாயகருக்கு நைவேத்யம் படைத்தான். தந்தை சொன்னபடி, விநாயகர் அதை சாப்பிடுவார் என நினைத்து காத்திருந்தான். ஆனால், விநாயகர் சாப்பிடவில்லை. எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான். ஆனாலும், நைவேத்யம் அப்படியே இருந்தது. இதனால் சிறுவன் நம்பி, சுவாமி சிலையின் மீது முட்டி நைவேத்யத்தை ஏற்றுக் கொள்ளும்படி முறையிட்டான். விநாயகர் அவனுக்கு காட்சி தந்து நைவேத்யத்தை எடுத்துக் கொண்டார். இப்படி தன் மீது நிஜபக்தி செலுத்துவோரின் வேண்டுதல்களை ஏற்று அருளுபவராக இத்தல விநாயகர் அருளுகிறார்.

திருமுறை காட்டிய தலம்: பொள்ளாப் பிள்ளையாரின் எல்லையற்ற கருணையினால்தான் தேவாரப் பாடல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. மூவர் பாடிய தேவார பாடல்களை தொகுக்க ராஜராஜ அபயகுலசேகர சோழன் முயற்சித்தான். அவனுக்கு பாடல்கள் இருக்குமிடம் தெரியவில்லை. நம்பியாண்டார் நம்பியின் பெருமையை அறிந்த மன்னன், இங்கு வந்து தனக்கு உதவும்படி கேட்டான். நம்பி, விநாயகரிடம் முறையிட்டார். அப்போது ஒலித்த அசரீரி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் தென்மேற்கு மண்டபத்தில் திருமுறை சுவடிகள் இருப்பதாகக் கூறியது. (இன்றும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின் மேற்கு உள்பிராகாரத்தில் திருமுறை காட்டிய விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது.)

மன்னன், நம்பியாண்டார் நம்பியுடன் சிதம்பரம் சென்று, ஒரு புற்றுக்குள் மூடிக்கிடந்த திருமுறை சுவடிகளை எடுத்தான். அவற்றை நம்பியாண்டார் நம்பி ஒழுங்கு படுத்தி 7 திருமுறைகளாகத் தொகுத்தார். தொகுத்த தேவாரப் பதிகங்களுக்கு பண் அமைக்க விரும்பிய நம்பியும், அரசனும் திருஎருக்கத்தம்புலியூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வேண்டினார்கள். "திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் பிறந்த பாடினி என்ற ஒரு பெண்ணுக்கு பண்களை அருளினோம். இத்தலத்திலுள்ள அப்பெண்ணை அழைத்துச் சென்று பதிகங்களுக்குப் பண்முறை அமைக்கச் செய்வீர்" என்று தெய்வவாக்கு கிடைத்தது. மனம் மகிழ்ந்த மன்னனும், நம்பியும் அத்தலத்திலுள்ள அந்தப் பெண்ணைக் கண்டறிந்து, தில்லை கனகசபைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எல்லோரது முன்னிலையிலும் அப்பெண்ணைக் கொண்டு தேவாரப் பதிகங்களுக்குப் பண்முறைகளை முறையாக அமைக்கச் செய்தனர். இவ்வாறு, திருமுறைகள் கிடைக்க காரணமாக இருந்ததால் பொள்ளாப் பிள்ளையாருக்கு "திருமுறை காட்டிய விநாயகர்" என்ற பெயரும் உண்டானது. இந்தப் பிள்ளையார் சந்நிதிக்கு எதிரில் ராஜராஜ அபயகுலசேகர சோழ மன்னனுக்கும், நம்பியாண்டார் நம்பிக்கும் சிலை உள்ளது.

விநாயகருக்கும் ஆறுபடை வீடு: முருகப்பெருமானுக்கு ஆறு படைவீடுகள் இருப்பதைப்போல, அவரது அண்ணன் விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளன. இவற்றில் திருநாரையூர் தலம் முதல் படை வீடாகும். திருவண்ணாமலை, விருத்தாச்சலம், திருக்கடையூர், மதுரை, காசி ஆகியவை பிற தலங்களாகும். முழுமுதற்கடவுளான விநாயகரை முதல் படைவீடான இத்தலத்தில் வணங்குவது சிறப்பான பலம் தரும்.

கோவில் அமைப்பு: கோவில் முகப்பு வாயிலுக்கு வெளியே கிழக்கில் காருண்ய தீர்த்தம் என்ற திருக்குளம் உள்ளது. முகப்பு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் சிறிய விநாயகரும், நந்தி மண்டபமும் உள்ளன. கொடி மரம் இல்லை. அதைத் தொடர்ந்து 78 அடி உயரமுள்ள கிழக்கு நோக்கிய கம்பீரமான மூன்றுநிலை ராஜகோபுரத்துடன் சுமார் 5.5 ஏக்கர் நிலப்பரப்புடன் ஆலயம் அமைந்துள்ளது. மூலவர் சௌந்தரேஸ்வரர் லிங்க வடிவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் இவருக்கு சுயம்பிரகாச ஈஸ்வரர் என்ற பெயரும் உண்டு. இறைவன் கருவறைச் சுற்றில் மேற்குப் பிரகாரத்தில் ஸ்ரீசுப்பிரமணியர் சந்நிதியும், வடமேற்கில் ஸ்ரீகஜலட்சுமி சந்நிதியும், வடக்குப் பிரகாரத்தில் ஸ்ரீ திருமூலநாதர் சந்நிதியும், ஸ்ரீசண்டிகேஸ்வரர் சந்நிதியும், தலவிருட்சமான புன்னை மரமும் உள்ளன. வடகிழக்கில் ஸ்ரீபைரவர், சூரியன்,சந்திரன், நவக்கிரக சந்நிதிகள் அமையப்பெற்றுள்ளன. சுவாமி சந்நிதி வெளிப்புற கோஷ்ட மூர்த்திகளாக ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றார்கள்.அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதி தெற்கு நோக்கி சிவன் சன்னதிக்கு வெளியே வெளிபிராகாரத்தில் வடகிழக்கில் தனிக்கோயில் அமைப்பில் அமைந்துள்ளது. இறைவன் சந்நிதி விமானம் அர்த்த சந்திர வடிவில் இரண்டு கலசங்களுடன் காணப்படுகிறது. இத்தகைய அமைப்பிலுள்ள விமானத்தை தரிசிப்பது அபூர்வம். சிவன், சக்தியின் வடிவமாகிய அம்பிகையை தனக்குள் ஐக்கியப்படுத்தியிருக்கிறார் என்ற தத்துவத்தின் அடிப்படையில், அவளுக்கும் சேர்த்து இரண்டு கலசங்கள் அமைத்திருப்பதாகச் சொல்கின்றனர். நடராஜருக்கும் இத்தலத்தில் தனிச்சன்னதி இருக்கிறது. சிவன் கோயில்களில் ஒரு சண்டிகேஸ்வரர் இருப்பார். இங்கு ஒரே சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு சண்டிகேஸ்வரரை தரிசிக்கலாம். மூலவர் சவுந்தரேஸ்வரருக்கு ஒருவர், பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கும் திருமூலநாதருக்கு ஒருவர் என இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர் இருக்கின்றனர். பிரகாரத்தில் ஒரே இடத்தில் மூன்று பைரவர்கள் காட்சிஅளிக்கின்றனர். இவர்களது தரிசனம் விசேஷமானது.

சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, கிருத்திகை, ஐப்பசி கந்தர் சஷ்டி விழா, பிரதோஷம், மகா சிவராத்திரி முதலியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் ஸ்ரீநம்பியாண்டர் நம்பி முக்தி அடைந்த நாளான புனர்பூச நட்சத்திரத்தில் "நம்பி குருபூஜை விழா" சிறந்த திருமுறை விழாவாக கொண்டாடப்படுகின்றது.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் இது. சம்பந்தர் தனது உரையினில் வந்தபாவம் உணர்நோய்களும் என்று தொடங்கும் பதிகத்தில் இத்தல இறைவனை வழிபடுவதால் வாக்கு, மனம், காயம் ஆகியவற்றால் விளைந்த பாவங்கள் தீரும், உடலால் செய்யப்பெறும் குற்றம் முதலானவும், அவ்வுடலைப்பற்றிய பிணி நோய்களும் கெடும், தீவினையால் உலகிற் பிறந்து அடையும் துன்பங்கள் அகலும், உடல் நீங்கும் காலத்தில் உயிர் கொள்ள வரும் இயமன் மிகவும் அஞ்சுவான். ஆதலின் நீர் நறுமணமுள்ள மலர்களைத் தூவி திருநாரையூர் இறைவனை கை கூப்பித் தொழுது வழிபாடு செய்வீர்களாக என்று குறிப்பிடுகிறார். இதனால், தெரிந்தோ தெரியாமலோ பாவம் செய்தவர்கள், இத்தல இறைவனை வேண்டி விமோசனம் பெறலாம். திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

Top
சௌந்தரேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
ஆலயத்தின் 3 நிலை கோபுரம்
கோபுரம் கடந்து உள் தோற்றம்
நடராஜர், சிவகாமி
தல விருட்சம் புன்னை மரம்
சனீஸ்வரர், 3 பைரவர் மற்றும் சூரியன்
நவக்கிரக சந்நிதி
நம்பியாண்டார் நம்பி
நம்பியாண்டார் நம்பி
காருண்ய தீர்த்தம்
பொள்ளாப் பிள்ளையார்