Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

சத்யகிரீஸ்வரர் கோவில், திருசேய்ஞலூர்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருசேய்ஞலூர் (இத்தலம் இந்நாளில் சேங்கனூர் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்சத்யகிரீஸ்வரர்
இறைவி பெயர்சகிதேவியம்மை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது கும்பகோணம் - அணைக்கரை பேருந்து மார்க்கத்தில் திருப்பனந்தாள் செல்லும் வழியில் சோழபுரம் ஊரைத் தாண்டி சேங்கனூர் நிறுத்தத்தில் இறங்கி கிழக்கே செல்லும் ஒரு சிறிய சாலையில் (சாலையில் நுழைவு வாயில் உள்ளது) சுமார் 1 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம். அருகிலுள்ள மற்ற சிவஸ்தலங்கள் திருஆப்பாடி மற்றும் திருப்பனந்தாள். திருப்பனந்தாளில் இருந்து ஆட்டோ மூலம் திருஆப்பாடி மற்றும் சேங்கனூர் ஆகிய இரு தலங்களையும் தரிசிப்பது நல்லது. நேரம் மிச்சமாகும்
ஆலய முகவரிஅருள்மிகு சத்யகிரீஸ்வரர் திருக்கோயில்
சேங்கனூர்
திருப்பனந்தாள் அஞ்சல்
திருவிடைமருதூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612504

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Chenganur route map

திருப்பனந்தாளில் இருந்து சேங்கனூர்
செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

சண்டேசுவர நாயனார் வரலாறு: 63 நாயன்மார்களில் முதண்மையான இடத்தைப் பெற்ற சண்டேசுவர நாயனாரின் அவதார தலம் சேய்ஞலூர். இத்தலத்தில் எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் விசாரசருமன். இவன் தன் இளம் வயதில் அனைத்தும் கற்றான். ஏழாவது வயதில் குல முறைப்படி உபநயனம் நடந்தது. சிவனே அனைத்தும் என நினைத்து அதன்படி வாழ்ந்து வந்தான்.அப்பகுதி அந்தணர்களின் பசுக்களை விசாரசருமன் தானே மேய்த்து வந்தான். தாயன்புடன் இவன் மேய்த்ததால் அதிக பால் கொடுத்தது. விசாரசருமன் எப்போதும் சிவசிந்தனையிலேயே இருந்ததால், மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் ஆத்திமர நிழலின் கீழ் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தான். அதற்கு பசுக்கள் சொரியும் பாலை அபிஷேகம் செய்தான். இருந்தாலும் பசுவின் சொந்தக்காரருக்கு சரியான அளவு பால் கிடைத்து வந்தது. விசாரசருமரின் இந்த செயலை பார்த்த சிலர், வேள்விக்கு உபயோகப்படுத்தும் பாலை வீணாக்குவதாக கூறினர். இவனது தந்தையும் இதை கேள்விப்பட்டு, மறைந்திருந்து நடப்பதை பார்த்தார். இதையெல்லாம் அறியாத விசாரசருமன் எப்போதும் போல் நீராடி விட்டு தன் பூஜைகளை தொடர்ந்தான். பசுவின் பாலால் அபிஷேகமும் செய்தான். இதைப்பார்த்த தந்தை அவனை அடித்ததுடன், பால்குடங்களையும் தன் காலால் தட்டி விட்டார். சிவ பூஜையில் ஆழ்ந்திருந்த விசாரசருமன், பூஜைக்கு இடையூறு செய்தவரை ஒரு கோலால் தாக்க, அதுவே மழுவாக மாறி எச்சதத்தரின் கால்களை வெட்டியது. கால்கள் வெட்டப்பெற்றவர் தன் தந்தை என்பதை அறியாத விசாரசருமன் மீண்டும் சிவபூஜையில் ஆழ்ந்தான். இதைக்கண்ட சிவபெருமான் பார்வதியுடன் தரிசனம் தந்து, "என் மீது கொண்ட பக்தியால் தந்தையின் கால்களை வெட்டினாய். இனி நானே உனக்கு தந்தையாவேன்", என்று கூறி தன் கழுத்திலிருந்த கொன்றை மாலையை விசாரசருமனுக்கு சூட்டி "சண்டிகேஸ்வரர்" ஆக்கினார். விசாரசருமன் சிவபூஜை செய்து முக்தி பெற்ற திருஆப்பாடி தலம் சேய்ஞலூரிலிருந்து சற்று தொலைவில் உள்ளது. 63 நாயன்மார்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் இவரே.

சூரனை அழிப்பதற்காக வந்த முருகப்பெருமான் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு சர்வசங்காரப் படைக்கலத்தை, உருத்திர பாசுபதத்தை பெற்றார். சேய் என்பது முருகனைக் குறிக்கும். சேய்க்கு நல்லதாக அமைந்த ஊராதலின் சேய் + நல் + ஊர் = சேய்ஞலூர் என்று பெயர் பெற்றது. சேய்ஞலூர் தலத்தின் சிறப்பைப் பற்றி கந்தபுராணத்தில், வழிநடைப் படலத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது. முருகனுக்கு இத்தலத்தில் பெரிய தனி சன்னதி உள்ளது.

கோயில் அமைப்பு: கோச் செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும்., கோயில் கட்டுமலை மேல் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கர்ப்பக்கிருகத்தைச் சுற்றிலும் மலைமேல் ஒரு பிராகாரமும், சுற்றிக் கீழே ஒரு பிராகாரமும் உள்ளன. கட்டுமலை மீது மேலே மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவை உள்ளன. மகா மண்டபத்தில் நடராஜர், தட்டினால் வெங்கல ஒலி கேட்கும் பைரவர், நால்வர் சன்னதிகள் உள்ளன. கருவறை சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, சண்டேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. சண்டேசுவரரின் திருமுடியில் பிறை, சடை, குண்டலம், கங்கையுள்ளன. நாயனாருக்குக் காட்சி தந்த சிறப்பைக் குறிக்கும் வகையில் இவ்வாறு அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். மூலவர் சத்தியகிரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கட்டுமலைக்குக் கீழே அம்பாள் ஆலயம் தெற்கு நோக்கிய சந்நிதியாகவுள்ளது.

சோழர்களின் முக்கிய ஐந்து நகரங்களுள் சேய்ஞலூர் தலமும் ஒன்று. வைணவத்தில் நாலாயிர திவ்விய பிரபந்தத்திற்கு உரை எழுதிய பெரியவாய்ச்சான் பிள்ளை அவதார தலம் இது. எதிரே இவருக்கு கோயில் உள்ளது.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சண்டேசுவர நாயனார் வரலாற்றைப் பற்றி தனது பதிகத்தின் 7-வது பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார். சண்டேஸ்வரர் அவதாரஸ்தலம் என்று சம்பந்தர் சுவாமிகள் சிவிகை யினின்றும் இறங்கி நடந்து சென்று இத்தல இறைவனை வழிபட்டார் என்று பெரிய புராணம் கூறும்.

1. நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல்மேவி யருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே. 

2. நீறடைந்த மேனியின்கண் நேரிழையா ளொருபால்
கூறடைந்த கொள்கையன்றிக் கோலவளர் சடைமேல்
ஆறடைந்த திங்கள்சூடி யரவம் அணிந்ததென்னே
சேறடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே. 

3. ஊனடைந்த வெண்டலையி னோடுபலி திரிந்து
கானடைந்த பேய்களோடு பூதங் கலந்துடனே
மானடைந்த நோக்கிகாண மகிழ்ந்தெரி யாடலென்னே
தேனடைந்த சோலைமல்கு சேய்ஞலூர் மேயவனே. 

4. வீணடைந்த மும்மதிலும் வில்மலை யாவரவின்
நாணடைந்த வெஞ்சரத்தால் நல்லெரி யூட்டலென்னே
பாணடைந்த வண்டுபாடும் பைம்பொழில் சூழ்ந்தழகார்
சேணடைந்த மாடம்மல்கு சேய்ஞலூர் மேயவனே. 

5. பேயடைந்த காடிடமாப் பேணுவ தன்றியும்போய்
வேயடைந்த தோளியஞ்ச வேழம் உரித்ததென்னே
வாயடைந்த நான்மறையா றங்கமோ டைவேள்வித்
தீயடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே. 

6. காடடைந்த ஏனமொன்றின் காரண மாகிவந்து
வேடடைந்த வேடனாகி விசயனொ டெய்ததென்னே
கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்க ணாற்கருள்செய்
சேடடைந்த செல்வர்வாழுஞ் சேய்ஞலூர் மேயவனே. 

7. பீரடைந்த பாலதாட்டப் பேணா தவன்தாதை
வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்
தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே
சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே. 

பொழிப்புரை : 

சிறப்புமிக்க மாடக் கோயிலாய் விளங்கும் திருச்சேய்ஞலூரில்
விளங்கும் இறைவனே! பசுவின் முலைக் காம்பின் வழிச்சுரந்து
நின்ற பாலைச் சண்டீசர் மணலால் தாபித்த இலிங்கத்துக்கு
ஆட்டி வழிபட, அதனை விரும்பாது சினந்து பாற்குடத்தை
இடறிய தன் தந்தையின் காலைத் தடிந்த சண்டீசரின் பக்தியை
மெச்சி உன் தாரையும் மாலையையும் சூட்டி அவரைச்
சிவகணங்களின் தலைவர் ஆக்கியது ஏனோ?

8. மாவடைந்த தேரரக்கன் வலிதொலை வித்தவன்றன்
நாவடைந்த பாடல்கேட்டு நயந்தருள் செய்ததென்னே
பூவடைந்த நான்முகன்போற் பூசுரர் போற்றிசெய்யுஞ்
சேவடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே. 

9. காரடைந்த வண்ணனோடு கனக மனையானும்
பாரிடந்தும் விண்பறந்தும் பாத முடிகாணார்
சீரடைந்து வந்துபோற்றச் சென்றருள் செய்ததென்னே
தேரடைந்த மாமறுகிற் சேய்ஞலூர் மேயவனே. 

10. மாசடைந்த மேனியாரும் மனந்திரி யாதகஞ்சி
நேசடைந்த ஊணினாரும் நேசமி லாததென்னே
வீசடைந்த தோகையாட விரைகமழும் பொழில்வாய்த்
தேசடைந்த வண்டுபாடுஞ் சேய்ஞலூர் மேயவனே. 

11. சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன சீர்பரவித்
தோயடைந்த தண்வயல்சூழ் தோணி புரத்தலைவன்
சாயடைந்த ஞானமல்கு சம்பந்தன் இன்னுரைகள்
வாயடைந்து பாடவல்லார் வானுல காள்பவரே. 

திருசேய்ஞலூர் சத்யகிரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


பைரவர்


சண்டேசுவரர்


கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி


முருகர்


முகப்பு வாயில்


சூரியன், சந்திரன்


சுவாமி சந்நிதி விமானம்


ஆலயத்தின் உட்புறத் தோற்றம்