Shiva Temples of Tamilnadu
தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
கோடீஸ்வரர் கோவில், திருக்கொட்டையூர்
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருக்கொட்டையூர் |
| இறைவன் பெயர் | கோடீஸ்வரர் |
| இறைவி பெயர் | பந்தாடு நாயகி |
| பதிகம் | திருநாவுக்கரசர் - 1 |
| எப்படிப் போவது | கும்பகோணம் - திருவையாறு சாலையில் கும்பகோணத்தில் இருந்து 4 கி.மி. தொலைவில் சுவாமிமலை செல்லும் வழியில் திருக்கொட்டையூர் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் நகரப் பேருந்து கொட்டையூர் வழியாகச் செல்கிறது. சாலையோரத்திலேயே கோயில், ஊர் உள்ளது. |
| ஆலய முகவரி | அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில் கொட்டையூர் மேலக்காவேரி அஞ்சல் கும்பகோணம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612 002 திருக்கோவில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை மணி 4 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
ஆமணக்கு கொட்டைச் செடியின் கீழ் சுயம்பு மூர்த்தியாக லிங்கம் வெளிப்பட்டதால் ஊர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது. சோழ மன்னனுக்கும் ஏரண்ட முனிவருக்கும் கோடிலிங்கமாகக் காட்சி தந்தமையால் கோடீஸ்வரர் என்று சுவாமிக்கும் கோடீச்சரம் என்று கோயிலுக்கும் பெயர் வந்தது. ஏரண்டம் என்றால் ஆமணக்கு கொட்டைச்செடியைக் குறிக்கும். அதன் கீழிருந்து தவம் செய்தமையால் அம்முனிவர் ஏரண்டமுனிவர் என்று பெயர் பெற்றார். இத்தலத்திற்கு வில்வாரண்யம், ஏரண்டபுரம் என்றும் வேறு பெயர்கள் உண்டு. ஊர் மக்களிடம் கோடீஸ்வரர் கோயில் என்று பெயர் சொல்லிக் கேட்டால் மக்கள் எளிதில் கோயிலைக் காட்டுகிறார்கள். இத்தலத்தில் மார்க்கண்டேயர் இறைவனை வழிபட்டுள்ளார். பத்திரயோகி முனிவருக்கு இறைவன் கோடிவிநாயகராக, கோடி அம்மையாக, கோடி முருகனாக, கோடி தம் திருவுருவாகக் காட்சி தந்ததால் இறைவன் கோடீஸ்வரர் எனப்பட்டார்.
கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. பிராகாரத்தில் விநாயகர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. இறைவன் கோடீஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மூலவர் மீது பாணம் முழுவதிலும் கொட்டை கொட்டையாக - ஆமணக்குச் செடியின் காய் காய்த்த மாதிரி காணப்படுகிறது. இத் தலத்தில் புண்ணியம் செய்தாலும் பாவஞ் செய்தாலும் கோடி மடங்காகப் பெருகும் என்பது நம்பிக்கை. இங்குப் பாவஞ் செய்தால் கோடி மடங்காகப் பெருகுவதால் அதற்குக் கழுவாயே இல்லாமற் போகும் என்பதை "கொட்டையூரிற் செய்த பாவம் கட்டையோடே" என்னும் பழமொழியால் அறியலாம். திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஐந்து மூர்த்திகளையும் காண்போர் வேறு தலங்களில் கோடித் திருவுருவம் கண்ட பயனைடவர். இங்குச் செய்த எப்புண்ணியமும் பிற தலங்களிற் செய்த புண்ணியங்களினும் கோடி மடங்கு பயன் தருமென்று தல புராணம் கூறுகிறது. இத்தலத்திலுள்ள நவக்கிரக சந்நிதி மண்டபம் சிறப்பானது. இக் கோயிலில் உள்ள நவக்கிரகங்கள் தங்களுக்குரிய வாகனங்களுடன், மண்டலம் பொருந்தி குடையுடன் அருமையாகக் காட்சி தருகின்றனர். இக்கோவிலின் தீர்த்தங்கள் காவிரியாறு, அமுதக்கிணறு எனகிற கோடி தீர்த்தம் என்பவை. அமுதக்கிணறு கோயிலின் முதல் பிரகாரத்தில் உள்ளது. தல விருட்சமாக ஆமணக்கு கொட்டைச் செடி உள்ளது.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. உட்பிரகாரத்திலுள்ள முருகப் பெருமான கோடி சுப்பிரமணயர் என்ற பெயருடன் உள்ளார். இவர் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கோவிலின் நுழைவாயிலில் தண்டாயுதபாணி சந்நிதி உள்ளது.
அம்பாள் பந்தாடு நாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. அம்பாள் சிலையின் ஒரு கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. செய்த பாவங்களை தன் காலால் எட்டி உதைத்து அருள்செய்பவள் என்ற பொருளில் இவ்வாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள் முன்னேற இந்த அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம். இங்குள்ள அமுதக்கிணறு தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால் புறத்தூய்மை மட்டுமின்றி அகத்தூய்மையும் கிடைப்பதாகவும் மேலும் கல்வி, அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றை இந்த தீர்த்தம் தருவதாக நம்பிக்கை.
காவிரி நதி திருவலஞ்சுழியில் வலம் சுழித்துச் செல்கிறது. அவ்வாறு வலம் சுழித்துச் சென்ற காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பிலத்துவாரம் (பள்ளம்) ஏற்பட்டது. பாய்ந்து வந்த காவிரியாறு ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கி விட்டது. அது கண்ட சோழமன்னன் கவலையுற்றுத் திகைத்தபோது, அசரீரியாக இறைவன், "மன்னனோ மகரிஷியோ இறங்கி அப்பாதாளத்தில் பலியிட்டுக் கொண்டால் அப்பிலத்துவாரம் மூடிக்கொள்ளும். அப்போது காவிரி வெளிப்படும்" என்றருளினார். அதுகேட்ட மன்னன் கொட்டையூர் என்ற இந்த ஊரில் ஏரண்டம் என்னும் கொட்டைச் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ள இடத்தில் தவம் செய்த ஏரண்ட முனிவரையடைந்து அசரீரி செய்தியைச் சென்னான். இதைக் கேட்ட ஏரண்ட முனிவர் நாட்டுக்காகத் தியாகம் செய்ய முன்வந்தார். அவர் அந்த பிலத்துவாரத்தில் இறங்கி தன்னைப் பலி கொடுக்கவும் பள்ளம் மூடிக்கொள்ள காவிரி வெளி வருகிறாள். இந்த ஏரண்ட முனிவருக்கு கோடீஸ்வரர் கோவிலில் தனி சந்நிதி உள்ளது.
திருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகம் திருக்கொட்டையூர் மற்றும் திருவலஞ்சுழி (காவிரி தென்கரைத் தலம்) ஆகிய இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்களுக்கும் பொதுவானது.
கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய் கல்லால நிழற்கீ ழிருந்தான் கண்டாய் பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய் பவளக்குன் றன்ன பரமன் கண்டாய் வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய் குருமணிபோல் அழகமருங் கொட்டை யூரிற் கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய் கலைபயில்வோர் ஞானக்கண் ணானான் கண்டாய் அலைக்கங்கை செஞ்சடைமே லேற்றான் கண்டாய் அண்ட கபாலத்தப் பாலான் கண்டாய் மலைப்பண்டங் கொண்டு வருநீர்ப் பொன்னி வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய் குலைத்தெங்கஞ் சோலைசூழ் கொட்டை யூரிற் கோடீச்சரத் துறையுங் கோமான் றானே. செந்தா மரைப்போ தணிந்தான் கண்டாய் சிவன்கண்டாய் தேவர் பெருமான் கண்டாய் பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய் பாலோடு நெய் தயிர்தே னாடி கண்டாய் மந்தார முந்தி வருநீர்ப் பொன்னி வலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய் கொந்தார் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற் கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. பொடியாடு மேனிப் புனிதன் கண்டாய் புட்பாகற் காழி கொடுத்தான் கண்டாய் இடியார் கடுமுழக்கே றூர்ந்தான் கண்டாய் எண்டிசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய் மடலார் திரைபுரளுங் காவி ரிவாய் வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய் கொடியாடு நெடுமாடக் கொட்டை யூரிற் கோடீச்சரத் துறையுங் கோமான் றானே. அக்கரவம் அரைக்கசைத்த அம்மான் கண்டாய் அருமறைக ளாறங்க மானான் கண்டாய் தக்கனது பெருவேள்வி தகர்த்தான் கண்டாய் சதாசிவன்காண் சலந்தரனைப் பிளந்தான் கண்டாய் மைக்கொண்மயிற் றழைகொண்டு வருநீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய் கொக்கமரும் வயற்புடைசூழ் கொட்டை யூரிற் கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. சண்டனைநல் லண்டர்தொழச் செய்தான் கண்டாய் சதாசிவன் கண்டாய்சங் கரன்றான் கண்டாய் தொண்டர்பலர் தொழுதேத்துங் கழலான் கண்டாய் சுடரொளியாய்த் தொடர்வரிதாய் நின்றான் கண்டாய் மண்டுபுனற் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய் மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய் கொண்டல்தவழ் கொடிமாடக் கொட்டை யூரிற் கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய் அவிநாசி கண்டாயண் டத்தான் கண்டாய் பணமணிமா நாக முடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய் மணல்வருநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய் மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய் குணமுடைநல் லடியார்வாழ் கொட்டை யூரிற் கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. விரைகமழு மலர்க்கொன்றைத் தாரான் கண்டாய் வேதங்கள் தொழநின்ற நாதன் கண்டாய் அரையதனிற் புள்ளியத ளுடையான் கண்டாய் அழலாடி கண்டாய் அழகன் கண்டாய் வருதிரைநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய் வஞ்சமனத் தவர்க்கரிய மைந்தன் கண்டாய் குரவமரும் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற் கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. தளங்கிளருந் தாமரையா தனத்தான் கண்டாய் தசரதன்றன் மகனசைவு தவிர்த்தான் கண்டாய் இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய் எட்டெட் டிருங்கலையு மானான் கண்டாய் வளங்கிளர்நீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய் மாமுனிகள் தொழுதெழுபொற் கழலான் கண்டாய் குளங்குளிர்செங் குவளைகிளர் கொட்டை யூரிற் கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. விண்டார் புரமூன் றெரித்தான் கண்டாய் விலங்கலில்வல் லரக்கனுட லடர்த்தான் கண்டாய் தண்டா மரையானும் மாலுந் தேடத் தழற்பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய் வண்டார்பூஞ் சோலைவலஞ் சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் மறையோ டங்கங் கொண்டாடு வேதியர்வாழ் கொட்டை யூரிற் கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
