Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

வில்வவனநாதர் கோவில், திருவைகாவூர்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவைகாவூர்
இறைவன் பெயர்வில்வவனநாதர்
இறைவி பெயர்சர்வஜனரட்சகி, வளைக்கை அம்மை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை வழியாக நகரப் பேருந்து வசதிகள் திருவைகாவூர் செல்ல இருக்கின்றன. சுவாமிமலையிலிருந்து நாகுகுடி என்ற ஊருக்குச் செல்லும் கிளைப்பாதையில் நாகுகுடி சென்று, அங்கிருந்து திருவைகாவூர் செல்லும் பாதையில் சென்று இத்தலத்தை அடையலாம்.
ஆலய முகவரிஅருள்மிகு வில்வவனநாதர் திருக்கோயில்
திருவைகாவூர்
திருவைகாவூர் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612301

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு: திருவைகாவூர் மகாசிவராத்திரி நாளுக்கு மிகவும் பெயர் பெற்ற தலம். வேடன் ஒருவனுக்கு ஒரு மகாசிவராத்திரி நாளில் இறைவன் காட்சி கொடுத்து அவனுக்கு அருளிய தலம். வேடன் ஒருவன் கொள்ளிடக் கரையிலுள்ள ஒரு புதரில் ஒரு மானைக் கண்டு அதை துரத்திச் தென்றான். மான் வேகமாக ஓடிச் சென்று அருகிலுள்ள வனத்தில் ஒரு மரத்தடியில் சிவலிங்கம் ஒன்றை பூஜை செய்து கொண்டிருந்த முனிவரிடம் தஞ்சம் அடைந்தது. மானைத் துரத்திச் சென்ற் வேடன் முனிவர் இருக்கும் இடத்தை அடைந்தான். மானின் மீது குறி பார்த்து அம்பெய்யச் சித்தமானான். முனிவர் மானை விட்டுவிடும்படி வேண்டினார். மானை விடாவிட்டால் முனிவரையே கொன்று விடுவேன் என்று வேடன் மிரட்டினான். முனிவர் தஞ்சமடைந்த மானை விடமாட்டேன் என்று கூற, அவர் மீது அம்பு தொடுக்க ஆயத்தமானான். அடியார்களை எப்போதும் காக்கும் இறைவன் ஒரு புலி வடிவில் அங்கு தோன்றி வேடனை துரத்தினார். வேடன் அருகிலுள்ள மரத்தின் மீது ஏறிக் கொண்டான். புலி மரத்தடியில் அமர்ந்து கொண்டு அவன் கீழே இறங்கினால் மிடித்துக் கொள்வதற்காக காத்திருந்தது. இரவு வந்துவிட, பயத்தினாலும், பசியினாலும் வேடன் தூங்காமல் மரத்தில் கண் விழித்து உட்கார்ந்திருந்தான். அவ்வாறு மரக்கிளையில் உட்கார்ந்து இருக்கும் போது மரத்திலுள்ள இலைகளை ஒவ்வொன்றாக்ப் பறித்துக் கீழே போட்டபடி பொழுதைப் போக்கினான்.

அன்று மகாசிவராத்திரி தினம். புலியாக மரத்தடியில் இருந்த சிவபெருமான் மீது அவன் பறித்துப் போட்ட இலைகள் விழுந்தன். அவன் உட்கார்ந்திருந்த மரம் விலவமரம். இரவு முழுவதும் சிவபெருமானை வில்வம் கொண்டு அர்ச்சித்ததால் அவனுக்குச் சிவபதம் கிடைத்தது. சிவபெருமான் அவனுக்கு காட்சி அளித்து மோட்சம் அளித்தார். சிவராத்திரியை அடுத்த நாள் விடியற் காலையில் வேடன் ஆயுள் முடிகிறது. யமன் அவன் உயிரைப் பறிக்க வந்தான். நந்திதேவர் அவன் வருவதைக் கவனிக்கவில்லை. சிவன் தட்சிணாமூர்த்தி வடிவம் கொண்டு யமனை விரட்டி அடித்தார். யமனை உள்ளே விட்டதற்காக சிவன் நந்திதேவரைக் கடிந்து கொள்ள, நந்தி வெளியே ஓடிவரும் யமனை தன் மூச்சுக் காற்றால் நிறுத்தி விட்டார். பின்னர் யமன் சிவனை வேண்டி மன்னிப்புக் கேட்க, யமனை வெளியேற அனுமதிக்கும்படி நந்திக்கு கட்டளையிட்டார்.

யமன் த்ன் பக்தியை இறைவனுக்குக் காட்ட, ஒரு குளம் வெட்டி, அதன் தீர்த்தத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து சில நாட்கள் அங்கு தங்கி இருந்து வழிபட்டுச் சென்றான். யமன் பணி செய்த தீர்த்தம் யம தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் முகப்பு வாயிலுக்கு எதிரே இருக்கிறது. இங்குள்ள நந்தி இறைவனை நோக்கி இல்லாமல், வாசலைப் பார்த்தபடி உள்ளது. யமன் மறுபடி உள்ளே வராமல் இருப்பதற்காக அவ்வறு இருப்பதாக ஐதீகம்.

இத்தலத்தில் பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் துவாரபாலகர்களாக விளங்குகிறார்கள். பிரளய காலத்தில் தன்னுடைய ஆக்கும் தொழில் அழியாமல் இருக்க பிரம்மா இங்கே ஒரு கேணி உண்டாக்கி சிவபெருமானை வழிபட்டபின் ஆலய துவாரகாலகனாக ஒருபுறம் அமர்ந்து விட்டார். சலந்திரனை அழிப்பதற்காக அவன் மனைவியிடம் ஒரு பொய் கூறினார் திருமால். இதை அறிந்து கொண்ட அவள் மகாவிஷ்ணுவை சபித்தாள். அச்சாப்ம் தீரவே திருமால் இங்கே துவாரபாலகனாக நின்று தவம் புரிகிறார் என்கிறது தலபுராணம்.

அக்கினி தீர்த்தம் என்று அக்கினியால் தோற்றுவிக்கப்பட்ட வேறொரு தீர்த்தமும் இங்கே இருக்கிறது. வேதங்கள் வில்வ விருட்சங்களாக இங்கே தவம் புரிவதாக ஐதீகம்.

கோவில் அமைப்பு: ஆலயம் ஒரு முகப்பு வாயிலுடன் காட்சி தருகிறது. முகப்பு வாயிலின் மேற்புறம் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. முகப்பு வாயிலுக்கு எதிரே யம தீர்த்தம் உள்ளது. வாயில் வழியே உள்ளே சென்றால் பலிபீடத்தையும், வாசலை நோக்கி காட்சி தரும் நந்தியையும் காணலாம். வெளிப் பிராகாரத்தில் சப்தகன்னியர் சந்நிதியும், விநாயகர் சந்நிதியும், வள்ளி தெய்வயானையுடன் கூடிய ஆறுமுகப்பெருமான் சந்நிதியும் உள்ளன. இச் சந்நிதியில் மயிலின் முகம் திசை மாறியுள்ளது. இவற்றையடுத்து சுற்றிலும் மதிற்சுவருடனுள்ள ஒரு சிறிய 3 நிலை கோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால், இடதுபுறம் இத்தல வரலாறான வேடன் முக்தி பெற்ற நிகழ்ச்சி சுதைச் சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இறைவன் கருவறை கோஷ்ட மூர்த்தமாக உள்ள தட்சிணாமூர்த்தி அழகான திருவுருவம். அரிய வேலைப்பாடுடையது. லிங்கோத்பவரும், அர்த்தநாரீஸ்வரரும், பிரம்மாவும் கோஷ்டத்தில் உள்ளனர். துர்க்கைக்கு எதிரில் இரு சண்டேஸ்வரர் திருமேனிகள் உள்ளன. இத்தல மூலவர் வில்வவனநாதர் சுயம்புமூர்த்தியாக கிழக்கு நோக்கிய சந்நிதியில் காட்சி தருகிறார். இடதுபுறம் அம்பாள் சந்நிதி தனியே உள்ளது. கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலம். மிகவும் பிரசித்திபெற்ற அம்பாள். திருமால், நாராயணி, பைரவர், சூரியன், சந்திரன், சனிபகவான் முதலிய மூலத் திருமேனிகள் பீடமிட்டு வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தில் விநாயகர், பிரம்மா, விஷ்ணு, வீணா தட்சிணாமூர்த்தி மூலத் திருவுருவங்கள் உள்ளன.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

கோழைமிட றாககவி கோளுமில வாகஇசை கூடுவகையால்
ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழும் ஈசனிடமாந்
தாழையிள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை தாறுசிதறி
வாழையுதிர் வீழ்கனிகள் ஊறிவயல் சேறுசெயும் வைகாவிலே. 

அண்டமுறு மேருவரை யங்கிகணை நாணரவ தாகஎழிலார்
விண்டவர்த முப்புரமெ ரித்தவிகிர் தன்னவன் விரும்புமிடமாம்
புண்டரிக மாமலர்கள் புக்குவிளை யாடுவயல் சூழ்தடமெலாம்
வண்டினிசை பாடஅழ கார்குயில்மி ழற்றுபொழில் வைகாவிலே. 

ஊனமில ராகியுயர் நற்றவமெய் கற்றவையு ணர்ந்தஅடியார்
ஞானமிக நின்றுதொழ நாளுமருள் செய்யவல நாதனிடமாம்
ஆனவயல் சூழ்தருமல் சூழியரு கேபொழில்கள் தோறுமழகார்
வானமதி யோடுமழை நீள்முகில்கள் வந்தணவும் வைகாவிலே. 

இன்னவுரு இன்னநிறம் என்றறிவ தேலரிது நீதிபலவுந்
தன்னவுரு வாமெனமி குத்ததவன் நீதியொடு தானமர்விடம்
முன்னைவினை போம்வகையி னால்முழு துணர்ந்துமுயல் கின்றமுனிவர்
மன்னஇரு போதுமரு வித்தொழுது சேரும்வயல் வைகாவிலே. 

வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி யாறுசமயம்
ஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள்செ யொருவனிடமாம்
மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழலவை மிக்கஅழகான்
மாதவிம ணங்கமழ வண்டுபல பாடுபொழில் வைகாவிலே. 

நஞ்சமுது செய்தமணி கண்டன்நமை யாளுடைய ஞானமுதல்வன்
செஞ்சடையி டைப்புனல் கரந்தசிவ லோகனமர் கின்றஇடமாம்
அஞ்சுடரொ டாறுபத மேழின்இசை யெண்ணரிய வண்ணமுளதாய்
மைஞ்சரொடு மாதர்பல ருந்தொழுது சேரும்வயல் வைகாவிலே. 

நாளுமிகு பாடலொடு ஞானமிகு நல்லமலர் வல்லவகையாற்
தோளினொடு கைகுளிர வேதொழும வர்க்கருள்செய் சோதியிடமாம்
நீளவளர் சோலைதொறும் நாளிபல துன்றுகனி நின்றதுதிர
வாளைகுதி கொள்ளமது நாறமலர் விரியும்வயல் வைகாவிலே. 

கையிருப தோடுமெய்க லங்கிடவி லங்கலையெ டுத்தகடியோன்
ஐயிருசி ரங்களையொ ருங்குடன் நெரித்தஅழ கன்றனிடமாங்
கையின்மலர் கொண்டுநல காலையொடு மாலைகரு திப்பலவிதம்
வையகமெ லாமருவி நின்றுதொழு தேத்துமெழில் வைகாவிலே. 

அந்தமுதல் ஆதிபெரு மானமரர் கோனையயன் மாலுமிவர்கள்
எந்தைபெரு மான்இறைவன் என்றுதொழ நின்றருள்செ யீசனிடமாஞ்
சிந்தைசெய்து பாடும்அடி யார்பொடிமெய் பூசியெழு தொண்டரவர்கள்
வந்துபல சந்தமலர் முந்தியணை யும்பதிநல் வைகாவிலே. 	

ஈசனெமை யாளுடைய எந்தைபெரு மானிறைவ னென்றுதனையே
பேசுதல்செ யாவமணர் புத்தரவர் சித்தமணை யாவவனிடந்
தேசமதெ லாமருவி நின்றுபர வித்திகழ நின்றபுகழோன்
வாசமல ரானபல தூவியணை யும்பதிநல் வைகாவிலே. 

முற்றுநமை யாளுடைய முக்கண்முதல் வன்திருவை காவிலதனைச்
செற்றமலி னார்சிரபு ரத்தலைவன் ஞானசம் பந்தனுரைசெய்
உற்றதமிழ் மாலையீ ரைந்துமிவை வல்லவர் உருத்திரரெனப்
பெற்றமர லோகமிக வாழ்வர்பிரி யாரவர்பெ ரும்புகழொடே. 

திருவைகாவூர் வில்வவனநாதர் ஆலயம் புகைப்படங்கள்


முகப்பு வாயில்


யம தீர்த்தம்


3 நிலை கோபுரம்


பிச்சாடனர்


வள்ளி, தெய்வானையுடன் முருகர்


வரிசையில் சிலா உருவங்கள்


பிரம்மா, விஷ்ணு, விநாயகர்


ஸ்ரீகணபதி


வாசலை நோக்கியுள்ள நந்தி, பலிபீடம்


நவக்கிரக சந்நிதி


அகஸ்தியர்


லிங்கோத்பவர்