ஐயாரப்பர் கோவில், திருவையாறு
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருவையாறு |
| இறைவன் பெயர் | ஐயாரப்பர், பஞ்சநாதேஸ்வரர் |
| இறைவி பெயர் | தர்மசம்வர்த்தினி, திரிபுரசுந்தரி |
| பதிகம் | திருநாவுக்கரசர் - 12 திருஞானசம்பந்தர் - 5 சுந்தரர் - 1 |
| எப்படிப் போவது | திருவையாற்றின் மையப்பகுதியில் இத்தலம் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து 10 கி.மி. தொலைவில் திருவையாறு இருக்கிறது. |
காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் 6 சிவஸ்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும். மற்ற 5 சிவஸ்தலங்கள் 1. திருவெண்காடு, 2. சாயாவனம், 3. மயிலாடுதுறை, 4. திருவிடைமருதூர் மற்றும் 5. திருவாஞ்சியம்.
கோவில் அமைப்பு: திருவையாறு சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் 7 நிலைகளையுடைய ராஜகோபுரமும், 5 பிரகாரங்களும் உள்ள ஒரு பெரிய கோவிலாகும். திருவையாறு மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்பும் உடைய தலமாகும்.முதல் பிரகாரத்தில் எழுந்தருளியுள்ள தக்ஷிணாமூர்த்தம் மிகச் சிறப்புடையது. இரண்டாம் பிரகாரத்தில் சோமஸ்கந்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அருகில் உள்ள ஜப்பேசுரமண்டபத்தில் பஞ்சபூதலிங்கங்களும், சப்தமாதர்களும், ஆதிவிநாயகரும், நவக்க்ரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் இச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், சோமச்கந்தர், தட்சினாமூர்த்தி, நடராஜர் ஆகிய திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூன்றாம் பிரகாரத்தில் கிழக்கிலும் தெற்கிலும் இருகோபுரங்கள் உள்ளன. நான்காம் பிரகாரத்தில் சூரியபுஷ்கரணி தீர்த்தமும், அப்பர் கைலாயக் காட்சி கண்ட வடகைலாயம் அமைந்துள்ளன. இச்சுற்றின் 4 புறமும் கோபுரங்கள் இருக்கின்றன. ஐந்தாம் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய ஐயாரப்பன் சந்நிதியும் திரிபுரசுந்தரி சந்நிதியும் இருக்கிறது. சுவாமி சந்நிதியிலும், அம்பாள் சந்நிதியிலும் தனித்தனியாக ராஜகோபுரங்கள் உள்ளன.
இறைவனுக்கும், இறைவிக்கும் கிழக்கு நோக்கியவாறு உள்ள சந்நிதிகளைக் கொண்டு தனித்தனி கோவில்கள் உள்ளன. மூலவர் ஐயாரப்பர் ஒரு சுயம்பு லிங்கமாகும். இந்த லிங்கம் ஒரு பிருத்வி லிங்கம் ஆகையால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். லிங்கத் திருமேனிக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும். திருக்கச்சி ஏகம்பம் ஆலய மூலவர் ஏகாம்பரநாதரும் ஒரு பிருத்வி லிங்கம் ஆதலால் அங்கும் புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும். திருவாரூர் ஆலய மூலவர் வன்மீகநாதரும் ஒரு பிருத்வி லிங்கம் என்பது குறிப்பிடதக்கது. இறைவி தர்மசம்வர்த்தினி காஞ்சி காமாட்சியைப் போன்றே இறைவனிடம் இருநாழி நெல் பெற்று 32 அறங்களையும் செய்தமையால் அறம் வளர்த்த நாயகி என்றும் அறியப்படுகிறாள். இத்தலத்தில் இறைவி இடக்கரம் இடுப்பில் ஊன்றியுள்ளபடியும், மேல் இரு கரங்களில் சங்கு சக்கரம் போன்றவையுடன் காணப்படுவதால் இத்தலத்தில் அம்பிகை மஹாவிஷ்னு ஸ்வரூபத்தில் தோற்றமளிக்கிறாள்.
இத்தலத்தில் முருகப்பெருமான் வில், வேல், அம்பு ஆகிய படைக்கலங்களுடன் வில்லேந்திய வேலவனாக "தனுசுசுப்ரமணியம்" என்ற பெயருடன் விளஙகுகிறார். இவர் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் பின்புறம் மயில் விளங்கக் காட்சி தருகின்றார். மயிலின் முகம் தெற்கு நோக்கி உள்ளது. அருகில் இருபுறமும் தேவியர் எழுந்தருளியுள்ளனர். அருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தல முருகப்பெருமான் மீது ஒரு பாடல் உள்ளது.
இங்குள்ள தட்சினமூர்த்தி ஸ்ரீஹரிகுருசிவயோக தட்சினாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள தட்சினாமூர்த்தியின் பாதத்தின் கீழே கூர்மம் (ஆமையின் உருவம்) அமைந்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும். ஆலயத்தின் தென்கோபுர வாசலில் உள்ள ஆட்கொண்டார் சந்நிதி மிகவும் முக்கியமானது. எப்போதும் குங்கிலியம் இங்கு மணந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் இங்குள்ள குண்டத்தில் குங்கிலியம் அர்ப்பணிப்பார்கள். சிவபெருமான் சுசரிதன் என்ற சிறுவனை எமனிடமிருந்து காப்பாற்றிய சமயம் எடுத்த உருவமே ஆட்கொண்டார். இவரை வணங்கி விட்டு கோவிலுக்குச் செல்வது ஒரு மரபு. இவரை வணங்கினால் எமபயம் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
சுந்தரரும், சேரமான் பெருமானும் திருவையாறு வரும் போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிகொண்டிருந்தது. கலங்கி அக்கரையில் நின்ற சுந்தரர் பதிகம் பாட, இக்கரையில் இருந்த விநாயகர் "ஓலம் ஓலம்" என்று குரல் கொடுத்து காவிரியில் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி அவரை அழைத்து வந்ததால் இங்குள்ள விநாயகர் ஓலமிட்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
அப்பர் கண்ட கைலாயம்: திருநாவுக்கரசர் கைலாயம் சென்று சிவபெருமானை தரிசிக்க விரும்பினர். காசியில் தன்னுடன் வந்த அடியார்களை தங்கியிருக்குமாறு சொல்லிவிட்டு தனித்துப் புறப்பட்டார். கைலாயப் பயணம் மிகவும் கடினமாக இருந்ததால் முதலில் நடந்து சென்ற அவர் பிறகு நடக்க முடியாமல் தவழ்ந்து செல்லத் தொடங்கினார். திருநாவுக்கரசர் படும் சிரமத்தைப் பார்த்த இறைவன் அவரை ஆட்கொள்ள நினைத்தார். அருகில் ஒரு குளத்தை ஏற்படுத்தி ஒரு முனிவர் வேடத்தில் அவரை நெருங்கி கைலாயம் செல்லும் வழியில் உள்ள சிரமங்களை எடுத்துக் கூறி திரும்பிச் செல்லும்படி கூறினார். இறந்தாலும் கைலைநாதனைக் காணாமல் ஊர் திரும்ப மாட்டேன் என்ற உறுதியுடன் இருந்த திருநாவுக்கரசரை ஆகாயத்தில் இருந்து அசரீரியாக அழைத்த சிவபெருமான் அங்குள்ள குளத்தில் மூழ்கி திருவையாற்றில் எழுவாய்! அங்கே உனக்கு கைலாயக் காட்சி தருகிறேன் என்று அருளினார். அதே போல் குளத்தில் மூழ்கி திருவையாற்றில் சூரியபுஷ்கரணி தீர்த்தத்தில் எழுந்தார். சிவபெருமான் தான் கூறியபடி அவருக்கு கைலாயக் காட்சி தந்து அருளினார். திருநாவுக்கரசரும்
மாதர் பிறைகண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் போதோடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாம லையா றடைகின்றபோது காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டேனவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்
என்ற பாடலுடன் தொடங்கும் பதிகம் பாடி இறைவனை தரிசித்தார். இந்த வரலாற்றை உணர்த்தும் வகையில் ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் உள்ள வடகைலாயம் (ஓலோகமாதேவீச்சரம்), தென்கைலாயம் ஆகிய இரண்டும் காண வேண்டிய ஒன்றாகும்.
இறைவன் ஆதி சைவராக வந்தது: திருவையாற்றில் இறைவனுக்கு பூஜை செய்யும் உரிமை பெற்றவர்கள் 24 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் காசி யாத்திரை மேற்கொண்டார். நெடுநாள் ஆகியும் அவர் திரும்பி வராததால் அவருக்குரிய நிலபுலன்கள் மற்ற சொத்துக்களை தமக்கே உரிமை என்று ஏனைய 23 ஆதி சைவ அந்தணர்களும் கைப்பற்றிக் கொண்டனர். காசி யாத்திரை சென்ற ஆதி சைவரின் மனைவியும், மகனும் இறைவனிடம் நடந்ததை முறையிட்டு வேண்டினார்கள். அவர்களுக்கு அருள் புரியவும் மற்ற அந்தணர்களுக்கு பாடம் புகட்டவும் எண்ணிய சிவபெருமான் காசிக்குச் சென்ற அந்தணர் உருவத்தில் கங்கை நீருடன் ஐயாரப்பர் ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு பூஜையும் செய்தார். மனைவியும், மகனும் மகிழ மற்ற 23 அந்தணர்களும் ஒடுங்கிப் போயினர். சில நாட்கள் கழித்து உண்மையான அந்தணர் காசியில் இருந்து கங்கை நீருடன் திரும்பிவர, இருவரில் யார் உண்மையான ஆதி சைவர் என்ற குழப்பம் ஏற்பட்டது. உண்மை அறியும் பொருட்டு யாவரும் கூடியிருக்க முதலில் வந்த ஆதி சைவர் திடீரென்று மறைந்துவிடுகிறார். வந்தவர் சிவபெருமானே என்று எல்லோரும் உணர்கின்றனர். இவ்வாறு ஆதி சைவராக வந்து தனக்குத் தானே பூஜை செய்து கொண்டவர் இத்தலத்து இறைவன் ஐயாரப்பர்.