Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்பெரும்புலியூர், (தஞ்சாவூர் மாவட்டம்)

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருப்பெரும்புலியூர் (தஞ்சாவூர் மாவட்டம்)
இறைவன் பெயர்வியாக்ரபுரீஸ்வரர்
இறைவி பெயர்சௌந்தர நாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருவையாற்றில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் உள்ள திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) சிவஸ்தலத்திலிருந்து மேற்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது
ஆலய முகவரிஅருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில்
பெரும்புலியூர்
தில்லைஸ்தானம் அஞ்சல்
வழி திருவையாறு
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 613203
Viyakrapureeswarar

மூலவர் வியாக்ரபுரீஸ்வரர்

பஞ்ச புலியூர்த்தலங்களில் பெரும்புலியூர் தலமும் ஒன்றாகும். மற்ற 4 தலங்கள்: 1) திருப்பாதிரிப்புலியூர், 2) பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), 3) எருக்கத்தம்புலியூர், 4) ஓமாம்புலியூர். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தினரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார். அன்று மலர்ந்த பூக்களைப் பறித்து வந்து இறைவனுக்கு அர்ச்சிப்பது இவரது வழக்கம். பொழுது புலர்ந்தால் வண்டுகள் மலர்களிலுள்ள மகரந்தத்தை உண்பதால் பூக்களின் தூய்மை போய்விடுகிறது என்று நினைத்த அவர், முன் இரவிலேயே மரங்களில் ஏறி பூ பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து பறிக்க புலியின் கண்களையும் பெற்றார். அதனால் இவருக்கு வியாக்ரபாதர் (வடமொழியில் வியாக்ரம் என்றால் புலி) என்று பெயர் வந்தது. தமிழில் புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்பட்டார். இந்த வீயாகரபாதர் வழிபட்ட தலங்களில் பெரும்புலியூர் தலமும் ஒன்றாகும்.

இவ்வாலயத்தின் இராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் மிகப் பழைமையானவை. கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் நேரே கொடிமரம் இல்லை. பலிபீடம் மட்டுமே உள்ளது. வெளிப் பிராகார வலம் வரும்போது சூரியன், விநாயகர் சந்நிதிகள் உள்ளன. அடுத்து சுப்பிரமணியர் சந்நிதியும் உள்ளது. அடுத்து உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நான்கு அடுக்குகளால் ஆன தாமரை மலரின் மேல் சுவாமி மூலஸ்தானம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பகுதி கருங்கல்லாலும் மேற்பகுதி சுதையாலும் ஆனது.

அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியுள்ளது. நின்றநிலையில் அம்பாள் அருட்காடசி தருகிறாள். நவக்கிரக சந்நிதியில் எல்லா உருவங்களும் நடுவிலுள்ள சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளது இத்தலத்தின் சிறப்பம்சம். கோஷ்ட மூர்த்தங்களாக தென் சுற்றில் தட்சிணாமூர்த்தியும், மேற்குச் சுற்றில் வழாக்கமாக லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரரும் காட்சி தருகிறார். வடக்குச் சுற்றில் சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது. நடராஜர் சந்நிதியில் ஒருபுறம் வியாக்ரபாதரும், மற்றொரு புறம் பதஞ்சலி முனிவரும் உள்ளனர்.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. முருகப்பெருமான் இத்தலத்தில் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார்
விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர்
கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார்
பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலியூர் பிரியாரே. 

துன்னு கடற்பவ ளஞ்சேர் தூயன நீண்டதிண் டோ ள்கள்
மின்னு சுடர்க்கொடி போலும் மேனியி னாளொரு கங்கைக்
கன்னி களின்புனை யோடு கலைமதி மாலை கலந்த
பின்னு சடைப்பெரு மானார் பெரும்புலியூர் பிரியாரே. 

கள்ள மதித்த கபாலங் கைதனி லேமிக ஏந்தித்
துள்ள மிதித்துநின் றாடுந் தொழிலர் எழில்மிகு செல்வர்
வெள்ள நகுதலை மாலை விரிசடை மேல்மிளிர் கின்ற
பிள்ளை மதிப்பெரு மானார் பெரும்புலியூர் பிரியாரே. 

ஆட லிலையம் உடையார் அருமறை தாங்கியா றங்கம்
பாட லிலையம் உடையார் பன்மை யொருமைசெய் தஞ்சும்
ஊட லிலையம் உடையார் யோகெனும் பேரொளி தாங்கி
பீட லிலையம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே. 

தோடுடை யார்குழைக் காதிற் சுடுபொடி யாரன லாடக்
காடுடை யாரெரி வீசுங் கையுடை யார்கடல் சூழ்ந்த
நாடுடை யார்பொரு ளின்ப நல்லவை நாளு நயந்த
பீடுடை யார்பெரு மானார் பெரும்புலியூர் பிரியாரே. 

கற்ற துறப்பணி செய்து காண்டுமென் பாரவர் தங்கண்
முற்றி தறிதுமென் பார்கள் முதலியர் வேதபு ராணர்
மற்றி தறிதுமென் பார்கள் மனத்திடை யார்பணி செய்யப்
பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலியூர் பிரியாரே. 

மறையுடை யாரொலி பாடல் மாமலர்ச் சேவடி சேர்வார்
குறையுடை யார்குறை தீர்ப்பார் குழகர் அழகர் நஞ்செல்வர்
கறையுடை யார்திகழ் கண்டங் கங்கை சடையிற் கரந்தார்
பிறையுடை யார்சென்னி தன்மேற் பெரும்புலியூர் பிரியாரே. 

உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடெளி தாகித்
துறவியுங் கூட்டமுங் காட்டித் துன்பமும் இன்பமுந் தோற்றி
மறவியென் சிந்தனை மாற்றி வாழவல் லார்தமக் கென்றும்
பிறவி யறுக்கும் பிரானார் பெரும்புலியூர் பிரியாரே. 

சீருடை யாரடி யார்கள் சேடரொப் பார்சடை சேரும்
நீருடை யார்பொடிப் பூசு நினைப்புடை யார்விரி கொன்றைத்
தாருடை யார்விடை யூர்வார் தலைவரைந் நூற்றுப்பத் தாய
பேருடை யார்பெரு மானார் பெரும்புலியூர் பிரியாரே. 

உரிமை யுடையடி யார்கள் உள்ளுற வுள்கவல் லார்கட்
கருமை யுடையன காட்டி அருள்செயும் ஆதி முதல்வர்
கருமை யுடைநெடு மாலுங் கடிமல ரண்ணலுங் காணாப்
பெருமை யுடைப் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே. 

பிறைவள ரும்முடிச் சென்னிப் பெரும்புலியூர்ப் பெருமானை
நறைவள ரும்பொழிற் காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
மறைவள ருந்தமிழ் மாலை வல்லவர் தந்துயர் நீங்கி
நிறைவளர் நெஞ்சின ராகி நீடுல கத்திருப் பாரே. 

திருப்பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


கோஷ்டத்தில் விநாயகர்


கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி


நவக்கிரக சந்நிதி


அம்பாள் சௌந்தர நாயகி


ஆலயத்தின் உட்புறத் தோற்றம்


நால்வர் சந்நிதி


கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர்


காலபைரவர்Copyright © 2004 - 2019 - www.shivatemples.com - All rights reserved