Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

வடமூலநாதர் கோவில், திருப்பழுவூர்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருப்பழுவூர் ( தற்போது கீழப்பழுவூர் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்ஆலந்துறையார், வடமூலநாதர், வடமூலேஸ்வரர்
இறைவி பெயர்அருந்தவநாயகி, ஸ்ரீயோக தபஸ்வினி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது அரியலூர் - திருவையாறு சாலை வழித்தடத்தில் அரியலூரிலிருந்து தெற்கே சுமார் 12 கி.மி. தொலைவிலும், திருவையாறில் இருந்து வடக்கே சுமார் 20 கி.மீ. தொலைவிலும் கீழப்பழுவூர் உள்ளது. கீழப்பழுவூர் என்ற சிறிய ஊரில் பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில் இந்த சிவஸ்தலம் ஆலயம் இருக்கிறது. சாலையோரத்தில் கோயில் வளைவு உள்ளது. திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவையாறு ஆகிய இடங்களில் இருந்து கீழப்பழுவூர் வர பேருந்து வசதிகள் உள்ளன.
ஆலய முகவரிஅருள்மிகு ஆலந்துறையார் திருக்கோவில்
கீழப்பழுவூர் அஞ்சல்
அரியலூர் வட்டம்
அரியலூர் மாவட்டம்
PIN - 621707

இவ்வாலயம் தினமும் காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.
Tirupazhuvur route map

திருவையாறில் இருந்து திருப்பழுவூர்
செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

தலத்தின் சிறப்பு:

பழு என்னும் சொல் ஆலமரத்தைக் குறிக்கும். இங்கே தலமரமாக ஆலமரம் விளங்குவதால் பழுவூர் என்று பெயர் பெற்றது. இவ்வூர் மேலப்பழுவூர், கீழைப்பழுவூர் என்ற இரு பிரிவாக உள்ளது. கீழப்பழுவூரில் தான் பாடல் பெற்ற சிவாலயம் உள்ளது. இந்த சிவாலயம் ஒரு முகப்பு வாயிலுடனும், அதையடுத்து கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரத்துடனும் காட்சி அளிக்கிறது. முகப்பு வாயிலின் இருபுறமும் நந்திதேவர் வீற்றிருக்கிறார். ராஜகோபுரத்தைக் கடந்தால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. அம்பாள் சந்நிதி ஒரு சுற்றைக் கொண்டு தனிக் கோவிலாகவே காணப்பெறுகிறது. அம்பாள் இங்கு ஸ்ரீயோக தபஸ்வினி என்னும் திருநாமம் கொண்டு நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். தமிழில் இந்த அம்பாளுக்கு அருந்தவ நாயகி என்று பெயர். மகாதபஸ்வினி என்று அம்பிகை துதிக்கப்படுகிறாள். யோகக் கலையையும் திருமண வரத்தையும் ஒருசேர அளிப்பவள் இவள். அகிலாண்ட நாயகியாம் அன்னை பார்வதிதேவி ஆதியில் தவம் புரிந்த புண்ணிய திருத்தலம் திருப்பழுவூர். இதன் காரணமாக இத்தலம் யோக வனம் எனப்பட்டது.

சுவாமியை தரிசிக்க திறந்தவெளி மண்டபம் தாண்டி உள்ள ஒரு வாயில் வழியே உள்ளே சென்றால் மகா மண்டபம் உள்ளது. அதன் இருபுறமும் உள் பிராகாரத்திற்கான விசாலமான வழிகள் உள்ளன. அடுத்து, இடைமண்டபமும் கருவறையும் அமைந்துள்ளன. கருவறை வாயிலின்மேல் சயனக்கோலத்தில் திருமாலின் புடைப்புச் சிற்பம் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது. கருவறையுள் கருணாமூர்த்தியாய் மூலவர் ஸ்ரீவடமூலநாதர் அருள்பாலிக்கின்றார். புற்று வடிவாய், மண் லிங்கமாக சதுர ஆவுடையாரின் நடுவே அபூர்வ தோற்றத்துடன் அருட்காட்சி தருகிறார். புற்று மண்ணால் ஆன சிவலிங்கமானதால் இவருக்கு அபிஷேகத்தின்போது குவளை சாற்றப்படுகின்றது. மிகவும் அரிய தரிசனம் இது. இடை மண்டபத்தின் வலப்புறத்தில், அன்னை இங்கு அருந்தவம் புரிந்ததன் அடையாளமாக தவக்கோலத்தில் இருக்கும் தவசம்மன் ஸ்தாபிக்கப்பட்டுள்ளாள். கருவறை சுற்றில் சப்த ரிஷிகள், உமைபங்கர்,சப்தமாதா, காசி விஸ்வநாதர்- விசாலாட்சி, பஞ்சபூத லிங்கங்கள், கஜலட்சுமி, கால சம்ஹார மூர்த்தி, கஜ சம்ஹார மூர்த்தி ஆகிய தெய்வச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

ஆலயத்திற்கு வெளியே தல மரமான ஆலமரம் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது. தல தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும் கொள்ளிடமும் விளங்குகின்றன. பரசுராமர், தந்தை உத்தரவிட்டதின் பேரில் தன் தாயைக் கொன்ற பழிதீரும் பொருட்டு வழிபட்ட தலம் இதுவாகும். மேலப் பழுவூரில் உள்ள மற்றொரு சிவாலயத்தில் (பசுபதீஸ்வரம்) ஜமதக்னி முனிவருக்கு சிலா உருவம் உள்ளது. பங்குனியில் நடைபெறும் விழாவில் மூன்றாம் நாள் சுவாமி மேலப்பழுவூர் சென்று அங்குள்ள ஜமத்கனி முனிவருக்குக் காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. மலையாள அந்தணர்கள் அக்காலத்தில் பழுவூரில் வாழ்ந்து வந்தனர் என்பதை தனது பதிகத்தின் 4வது மற்றும் 11வது பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

முத்தன்மிகு மூவிலைநல் வேலன்விரி நூலன்
அத்தன்எமை யாளுடைய அண்ணலிட மென்பர்
மைத்தழை பெரும்பொழிலின் வாசமது வீசப்
பத்தரொடு சித்தர்பயில் கின்றபழு வூரே. 

கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல்
ஆடரவம் வைத்தபெரு மானதிட மென்பர்
மாடமலி சூளிகையி லேறிமட வார்கள்
பாடலொலி செய்யமலி கின்றபழு வூரே. 

வாலிய புரத்திலவர் வேவவிழி செய்த
போலிய வொருத்தர்புரி நூலரிட மென்பர்
வேலியின் விரைக்கமல மன்னமுக மாதர்
பாலென மிழற்றிநட மாடுபழு வூரே. 

எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார்
கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர்
மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப்
பண்ணினொலி கொண்டுபயில் கின்றபழு வூரே. 
(எண், எழுத்து, இசை இவற்றை ஆராய்வார்
கருதும் முதற்பொருளாய கடவுளின் இடம், 
மலையாள அந்தணர் உலகில் பாடியாடித் தொழுது
ஏத்திப்பாடி வழிபடும் தலம் பழுவூர் என்பர்.)

சாதல்புரி வார்சுடலை தன்னில்நட மாடும்
நாதன்நமை யாளுடைய நம்பனிட மென்பர்
வேதமொழி சொல்லிமறை யாளரிறை வன்றன்
பாதமவை யேத்தநிகழ் கின்றபழு வூரே. 

மேவயரு மும்மதிலும் வெந்தழல் விளைத்து
மாவயர வன்றுரிசெய் மைந்தனிட மென்பர்
பூவையை மடந்தையர்கள் கொண்டுபுகழ் சொல்லிப்
பாவையர்கள் கற்பொடு பொலிந்தபழு வூரே. 

மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி
சிந்தவிளை யாடுசிவ லோகனிட மென்பர்
அந்தணர்கள் ஆகுதியி லிட்டஅகில் மட்டார்
பைந்தொடிநன் மாதர்சுவ டொற்றுபழு வூரே. 

உரக்கடல் விடத்தினை மிடற்றிலுற வைத்தன்
றரக்கனை யடர்த்தருளும் அப்பனிட மென்பர்
குரக்கினம் விரைப்பொழிலின் மீதுகனி யுண்டு
பரக்குறு புனல்செய்விளை யாடுபழு வூரே. 

நின்றநெடு மாலுமொரு நான்முகனும் நேட
அன்றுதழ லாய்நிமிரும் ஆதியிட மென்பர்
ஒன்றுமிரு மூன்றுமொரு நாலுமுணர் வார்கள்
மன்றினி லிருந்துடன் மகிழ்ந்தபழு வூரே. 

மொட்டையமண் ஆதர்துகில் மூடுவிரி தேரர்
முட்டைகள் மொழிந்தமுனி வான்றனிட மென்பர்
மட்டைமலி தாழைஇள நீரதிசை பூகம்
பட்டையொடு தாறுவிரி கின்றபழு வூரே. 

அந்தணர்க ளானமலை யாளரவ ரேத்தும்
பந்தமலி கின்றபழு வூரரனை யாரச்
சந்தமிகு ஞானசம் பந்தனுரை பேணி
வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே.
(மலையாள அந்தணர்கள் ஏத்தும் 
அருளுறவு நிறைந்த பழுவூர் இறைவனை ஞானசம்பந்தன் 
மனம் ஆரச்சந்த இசையால் பாடிய இப்பாடல்களை 
விரும்பித் தமக்கு இயன்ற இசையோடு 
ஏத்தித் தொழுபவர் சிவலோகம் பெறுவர்.)

பொழிப்புரை: www.thevaaram.org

திருப்பழுவூர் ஆலந்துறையார் ஆலயம் புகைப்படங்கள்


முகப்பு வாயில்


3 நிலை கோபுரம்


சப்தமாதர்கள்


பிரகாரத்தில் சிலா உருவங்கள்


வடமூலநாதர் சந்நிதி நுழை வாயில்


அருந்தவநாயகி சந்நிதி நுழை வாயில்


கஜ சம்ஹார மூர்த்தி


சுவாமி சந்நிதி விமானம்


கால சம்ஹார மூர்த்தி


கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி


அருந்தவநாயகி


அத்தரி மகரிஷி, ஆங்கீரச மகரிஷி, பிருகு மகரிஷி, புலஸ்திய மகரிஷி, நடுவில் ஞான தட்சிணாமூர்த்திCopyright © 2004 - 2019 - www.shivatemples.com - All rights reserved