Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஆதிமூலநாதர் கோவில், திருபாற்றுறை

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருபாற்றுறை (இன்றைய நாளில் திருப்பாலத்துறை என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்ஆதிமூலேசுவரர், ஆதிமூலநாதர்
இறைவி பெயர்மோகநாயகி, மேகலாம்பிகை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருச்சி - திருவானைக்கா - கல்லணை வழித்தடத்தில் பனையபுரம் என்ற இடத்தில் இறங்கி சுமார் 1 கி.மி. நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். பாதை சற்று கடினமானது. மிகச் சிறிய ஊர். பனையபுரத்தில் ஆட்டோ வசதிகள் இல்லை. ஆகையால் திருச்சியில் இருந்து ஆட்டோ அல்லது காரில் செல்வது நல்லது.
ஆலய முகவரிஅருள்மிகு ஆதிமூலநாதர் திருக்கோவில்
திருப்பாலத்துறை
திருப்பாலத்துறை அஞ்சல்
வழி திருவானைக்காவல்
திருச்சி வட்டம்
திருச்சி மாவட்டம்
PIN - 620005

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 10-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இவ்வாலயத்தின் கோபுரம் 3 நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நந்தியும், பலிபீடமும் கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். புரட்டாசி மற்றும் பங்குனியின் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமியின் மீது சூரிய ஒளி விழுகிறது. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி கையில் வீணையுடன் காட்சி தருகிறார். அருகே சனகாதி முனிவர்கள் இல்லை. தட்சிணாமூர்த்தியின் இந்த வித்தியாசமான கோலத்தைக் காண்பது மிகவும் அபூர்வம். இசைக்கலைஞர்கள் இவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். அருகிலேயே பிட்சாடனர் இருக்கிறார். கருவறைக்கு பின்புற கோஷ்டத்தில் லிங்கோத்பவர் காட்சி அளிக்கும் இடத்தில் சங்கரநாராயணர் இருக்கிறார். பிரகாரத்தில் சத்யபாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதியும் இருக்கிறது.

அர்த்த மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடுடன் கூடிய நான்கு தூண்களுடன் உள்ள இடம் "தேவசபை" என்று aழைக்கப்படுகிறது. இந்த சபையில் இருந்து சிவன், மன்னர் போல ஆட்சி செய்வதாக சொல்லப்படுகிறது. அம்பாள் தெற்கு நோக்கிய சந்நிதியில் நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கின்றாள். குழந்தைகளை இழந்து மீண்டும் குழந்தை பாக்கியத்துக்காக வேண்டுபவர்கள் இத்தலத்தில் அம்பாளுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபட்டால் தீர்க்காயுள் உள்ள குழந்தை பிறக்கும் என நம்புகிறார்கள். பவுர்ணமிதோறும் இதற்குரிய விசேஷ பூஜை இவளது சந்நிதியில் நடக்கிறது. புதுமணத்தம்பதிகளும் நல்ல குழந்தைகள் வேண்டி இதே நாளில் பூஜை செய்கின்றனர்.

தல வரலாறு: இப்பகுதியை ஆண்ட சோழன், இத்தலத்தின் வழியாக வேட்டைக்கு சென்றபோது தன் படைகளுடன் சற்று நேரம் இங்கு ஓய்வெடுத்தான். அப்போது அருகிலுள்ள ஒரு புதரில் இருந்து வெண்ணிற அதிசய பறவை பறந்து சென்றது. மன்னன் அப்பறவையின் மீது ஆசைகொண்டு அம்பு எய்தான். ஆனால் பறவை தப்பி விட்டது. சிலநாட்கள் கழித்து மன்னன் மீண்டும் இவ்வழியாக சென்றபோது, முன்பு பார்த்த அதே பறவை பறப்பதைக் கண்டான். புதர் தானே அதன் இருப்பிடம், அங்கு வந்ததும் பிடித்து விடலாம் எனக்கருதி மறைந்திருந்தான். அந்த இடம் முழுதும் பால் மணம் வீசியது. பறவை வரவே இல்லை. சந்தேகப்பட்ட மன்னன் புதரை வெட்டினான். ஒரு புற்று மட்டும் இருந்தது. புற்றை தோண்டியபோது பால் பீறிட்டது. பயந்த மன்னன் அரண்மனைக்கு திரும்பி விட்டான். அன்றிரவில் அவனது கனவில் அசரீரியாக ஒலித்த சிவன், பால் வெளிப்பட்ட இடத்தில் தான் லிங்க வடிவில் இருப்பதாக கூறினார். அதன்பின் மன்னன் இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டான். பால் பொங்கிய இடத்தில் இருந்து வெளிப்பட்டதால், சுவாமி "பாற்றுறை நாதர்" என்றும், தலம் "பாற்றுறை" (பால்துறை) என்றும் பெயர் பெற்றது.

இத்தலத்திற்கு வந்த மார்க்கண்டேயமுனிவர் சிவபூசைக்குப் பால் இல்லாமையால் வருந்திய போது, சிவபெருமான் அருளினால் பால் பெருகியது. ஆதலாலும் பாற்றுறை என்று இத்தலம் பெயர் பெற்றது.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

காரார் கொன்றை கலந்த முடியினர்
சீரார் சிந்தை செலச்செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
ஆரா ராதி முதல்வரே. 	

நல்லா ரும்மவர் தீய ரெனப்படுஞ்
சொல்லார் நன்மலர் சூடினார்
பல்லார் வெண்டலைச் செல்வரெம் பாற்றுறை
எல்லா ருந்தொழும் ஈசரே. 

விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர்
எண்ணார் வந்தென் எழில் கொண்டார்
பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை
யுண்ணா ணாளும் உறைவரே.

பூவுந் திங்கள் புனைந்த முடியினர்
ஏவின் அல்லா ரெயிலெய்தார்
பாவந் தீர்புனல் மல்கிய பாற்றுறை
ஓவென் சிந்தை யொருவரே. 

மாகந் தோய்மதி சூடிமகிழ்ந் தென
தாகம் பொன்னிற மாக்கினார்
பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை
நாகம் பூண்ட நயவரே. 	

போது பொன்றிகழ் கொன்றை புனைமுடி
நாதர் வந்தென் நலங்கொண்டார்
பாதந் தொண்டர் பரவிய பாற்றுறை
வேத மோதும் விகிர்தரே. 

வாடல் வெண்டலை சூடினர் மால்விடை
கோடல் செய்த குறிப்பினார்
பாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறை
ஆடல் நாகம் அசைத்தாரே. 

வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர்
எவ்வஞ் செய்தென் எழில்கொண்டார்
பவ்வம் நஞ்சடை கண்டரெம் பாற்றுறை
மவ்வல் சூடிய மைந்தரே. 

ஏனம் அன்னமும் ஆனவ ருக்கெரி
ஆன வண்ணத்தெம் அண்ணலார்
பான லம்மலர் விம்மிய பாற்றுறை
வான வெண்பிறை மைந்தரே. 

வெந்த நீற்றினர் வேலினர் நூலினர்
வந்தென் நன்னலம் வௌவினார்
பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை
மைந்தர் தாமோர் மணாளரே. 

பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
பத்து நூறு பெயரானைப்
பத்தன் ஞானசம் பந்தன தின்றமிழ்
பத்தும் பாடிப் பரவுமே. 	
Tirupattrurai temple photo Tirupattrurai temple photo Tirupattrurai temple photo Tirupattrurai temple photo Tirupattrurai temple photo
Tirupattrurai temple photo Tirupattrurai temple photo Tirupattrurai temple photo Tirupattrurai temple photo


Copyright © 2004 - 2019 - www.shivatemples.com - All rights reserved