Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

மாற்றுரைவரதீஸ்வரர் கோவில், திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருப்பாச்சிலாச்சிராமம் (தற்போது திருவாசி என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்மாற்றுரைவரதீஸ்வரர்
இறைவி பெயர்பாலாம்பிகை, பாலசுந்தரி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர் - 1
எப்படிப் போவது திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் சுமார் 11 கி.மி. தொலைவில் திருவாசி என்கிற பேருந்து நிறுத்தம் வரும். அங்கிருந்து ஊருக்குள் செல்லும் ஒரு கிளைச் சாலையில் சுமார் 1/2 கி.மி. செல்ல இந்த சிவஸ்தலம் ஆலயத்தை அடையலாம்.
ஆலய முகவரி அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்
திருவாசி
வழி பிச்சாண்டார் கோவில்
திருச்சி மாவட்டம்
PIN - 621216

ஆலய தொடர்புக்கு: மோகன் குருக்கள், தொலைபேசி: 0431-2908109, 98656 64870

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இப்பகுதியை ஆண்டு வந்த கொல்லிமழவனின் மகளுக்கு முயலகன் எனும் தீராத நோயிருந்தது. அச்சமயத்தில் திருஞானசம்பந்தர் பல தலங்களை தரிசனம் செய்து கொண்டு மழவ நாட்டைச் சார்ந்த திருப்பாச்சிலாச்சிராமம் தலத்திற்கு எழுந்தருளினார். இதையறிந்த மன்னன்அனபுடன் சம்பந்தரை வரவேற்றுத் தன் மகளின் நோயை நீக்கியருள வேண்டினான்., கோயிலுக்கு வந்து அவரிடம் தன் மகளின் நிலையைக் கூறினான். அருள் உள்ளம் கொண்ட சம்பந்தர் சிவனை வேண்டி துணிவளர் திங்கள் துளங்கி விளங்கஎனும் பதிகம் பாடி இறைவனை வணங்க நோய் நீங்கி மன்னன் மகள் குணமடைந்தாள். சிவபெருமான் அவளது நோயை ஒரு பாம்பாக மாற்றி, அதன் மீது நின்று ஆடினார். இதன் அடிப்படையில் இங்குள்ள நடராஜர் காலுக்கு கீழே முயலகன் உருவம் இல்லாமை அறியத்தக்கது. திருவடியின்கீழ் அதற்குப்பதில் ஒரு உள்ள சர்ப்பத்தின் மீது நடனமாடுகின்றார். நரம்புத் தளர்ச்சி, வாதநோய், வலிப்பு நோய், சர்ப்ப தோஷம், மாதவிடாய் பிரச்னைகள் முதலியன இத்தல இறைவனை வழிபட குணமாகும்.

இத்தலத்தில் இறைவன் மாற்றுரைவரதீஸ்வரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார். இறைவன் இந்த பெயர் பெறக் காரணமாக உள்ள வரலாறு சுவையானது. இத்தலம் வந்த சுந்தரர், சிவனிடம் பொன் கேட்டார். அவரை சோதிப்பதற்காக சிவன் பொன் தரவில்லை. கோபம் கொண்ட சுந்தரர், "சிவன் இருக்கிறாரா, இல்லையா" என்ற அர்த்தத்தில் இகழ்ந்து வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என்று தோடங்கும் பதிகம் பாடினார். பதிகத்தின் கடைசி பாடலில் "திரு நாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் இவரைப் பேசிய பேச்சுக்கள், உண்மையில் ஏசினவும் அல்ல, இகழ்ந்தனவும் அல்ல, ஆதலின், அவைகளை இவர் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும், அது செய்யாராயினும், அடியேனது பிழைகளைப் பொறுத்து ஆளும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை" என்று குறிப்பிடுகிறார். சிறிதுநேரம் கழித்து சுந்தரருக்கு காட்சி தந்த சிவன், பொன் முடிப்பு தரவே, அந்தப் பொன் தரமானது தானா என்ற சந்தேகம் சுந்தரருக்கு வந்தது. அப்போது அங்கு வந்த இரண்டு வணிகர்கள் தங்கத்தை சோதித்துத் தருவதாகச் சொல்லி வாங்கிக் கொண்டனர். ஒருவர் பொன்னை உரைத்துப் (சோதித்து) பார்த்துவிட்டு, பொன் தரமானதுதான் என்றார். உடன் வந்தவரும் அதை ஆமோதித்தார். பின் இருவரும் மறைந்து விட்டனர். சுந்தரர் வியந்து நின்றபோது, சிவனே வணிகர் வடிவில் வந்து உரைத்து காட்டியதையும், மகாவிஷ்ணு அவருடன் வந்ததையும் உணர்த்தினார். தங்கத்தை உரைத்துக் காட்டியதால் சிவனுக்கு "மாற்றுரைவரதர்' என்ற பெயர் ஏற்பட்டது.

இத்தலத்தில் சுவாமி ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். இராஜகோபுரத்தின் கீழே அதிகார நந்தி, மனைவியுடன் இருக்கிறார். இங்குள்ள நவக்கிரக சந்நிதியில் சூரியன் தன் மனைவியர் உஷா, பிரத்யுஷாவுடன் இருக்க மற்ற கிரகங்கள் அனைத்தும் அவரை பார்த்தபடி உள்ளன. திருவாசியில் வசித்த கமலன் என்னும் வணிகனுக்கு மகளாகப் பிறந்த அம்பிகை, சிவனை வேண்டி தவமிருந்து, அவரை மணந்தாள். இவள் இத்தலத்தில் பாலாம்பிகை என்ற பெயரில் எழுந்தருளியுள்ளாள். அர்த்தஜாமத்தில் இவளுக்கே முதல் பூஜை நடக்கும். அம்பாள் சன்னதி எதிரே செல்வ விநாயகர் இருக்கிறார். அருகில் அன்னமாம்பொய்கை தீர்த்தம் இருக்கிறது. அம்பாள் சன்னதி முகப்பில் இரண்டு துவாரபாலகியர் உள்ளனர். திருமணமாகாத பெண்கள் நல்ல வரன் அமையவும், திருமணத்தடை உள்ளவர்கள் தடை நீங்கவும் இவர்களுக்கு மஞ்சள் கயிறு கட்டி பிரார்த்திக்கின்றனர். குழந்தையில்லாத பெண்களும் இவர்கள் முன் தொட்டில் கட்டுகின்றனர். துவாரபாலகியர் மூலமாக பக்தர்களின் கோரிக்கைகளை அம்பாள் ஏற்றுக் கொள்வதாக ஐதீகம். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்ட தோஷம் நீங்க அம்பிகைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) மாற்றுரைவரதீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

5 நிலை கோபுரம்

சுவாமி விமானம்

கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி

கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர்

கோஷ்டத்தில் பிரம்மா

கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர்

கோஷ்டத்தில் துர்க்கை
திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) மாற்றுரைவரதீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள் அனுப்பி உதவியவர் சேலத்தைச் சார்ந்த திரு விவேக் அவர்கள்