Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

மாற்றுரைவரதீஸ்வரர் கோவில், திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருப்பாச்சிலாச்சிராமம் (தற்போது திருவாசி என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்மாற்றுரைவரதீஸ்வரர்
இறைவி பெயர்பாலாம்பிகை, பாலசுந்தரி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர் - 1
எப்படிப் போவது திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் சுமார் 14 கி.மி. தொலைவில் திருவாசி என்கிற பேருந்து நிறுத்தம் வரும். அங்கிருந்து ஊருக்குள் செல்லும் ஒரு கிளைச் சாலையில் சுமார் 1/2 கி.மி. செல்ல இந்த சிவஸ்தலம் ஆலயத்தை அடையலாம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவாசி செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்
திருவாசி
வழி பிச்சாண்டார் கோவில்
திருச்சி மாவட்டம்
PIN - 621216

ஆலய தொடர்புக்கு: மோகன் குருக்கள், தொலைபேசி: 0431-2908109, 98656 64870

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

5 நிலை கோபுரம்

இப்பகுதியை ஆண்டு வந்த கொல்லிமழவனின் மகளுக்கு முயலகன் (வலிப்பு நோய்) எனும் தீராத நோயிருந்தது. மன்னன் எவ்வளவோ வைத்தியம் செய்து பார்த்தும் மகளை குணப்படுத்த முடியவில்லை. எனவே, பெரியவர்களின் ஆலோசனைப்படி, பெருமான் அருள் புரியும் கோயிலில் அவளைக் கிடத்தி, அவள் பிணியை குணப்படுத்தும் பொறுப்பை பெருமானிடமே விட்டுவிட்டுச் சென்றான். அச்சமயத்தில் திருஞானசம்பந்தர் பல தலங்களை தரிசனம் செய்து கொண்டு மழவ நாட்டைச் சார்ந்த திருப்பாச்சிலாச்சிராமம் என்ற இத்தலத்திற்கு எழுந்தருளினார். இதையறிந்த மன்னன் அன்புடன் சம்பந்தரை வரவேற்றுத் தன் மகளின் நோயை நீக்கியருள வேண்டினான். அருள் உள்ளம் கொண்ட சம்பந்தர் சிவனை வேண்டி துணிவளர் திங்கள் துளங்கி விளங்க எனும் பதிகம் பாடி இறைவனை வணங்க நோய் நீங்கி மன்னன் மகள் குணமடைந்தாள். சிவபெருமான் அவளது நோயை ஒரு பாம்பாக மாற்றி, அதன் மீது நின்று ஆடினார். இதன் அடிப்படையில் இங்குள்ள நடராஜர் காலுக்கு கீழே முயலகன் உருவம் இல்லாமை அறியத்தக்கது. திருவடியின் கீழ் அதற்குப்பதில் ஒரு உள்ள சர்ப்பத்தின் மீது நடனமாடுகின்றார். நரம்புத் தளர்ச்சி, வாதநோய், வலிப்பு நோய், சர்ப்ப தோஷம், மாதவிடாய் பிரச்னைகள் முதலியன இத்தல இறைவனை வழிபட குணமாகும். இவ்வாலயத்திலுள்ள ஆவுடையாப்பிள்ளை மண்டபத்தில் கொல்லி மழவன் மகளுக்கு சம்பந்தர் நோய் நீக்கிய வரலாற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன.

இத்தலத்தில் இறைவன் மாற்றுரைவரதீஸ்வரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார். இறைவன் இந்த பெயர் பெறக் காரணமாக உள்ள வரலாறு சுவையானது. இத்தலம் வந்த சுந்தரர், சிவனிடம் பொன் கேட்டார். அவரை சோதிப்பதற்காக சிவன் பொன் தரவில்லை. கோபம் கொண்ட சுந்தரர், "சிவன் இருக்கிறாரா, இல்லையா" என்ற அர்த்தத்தில் இகழ்ந்து வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என்று தோடங்கும் பதிகம் பாடினார். பதிகத்தின் கடைசி பாடலில் "திரு நாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் இவரைப் பேசிய பேச்சுக்கள், உண்மையில் ஏசினவும் அல்ல, இகழ்ந்தனவும் அல்ல, ஆதலின், அவைகளை இவர் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும், அது செய்யாராயினும், அடியேனது பிழைகளைப் பொறுத்து ஆளும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை" என்று குறிப்பிடுகிறார். சிறிதுநேரம் கழித்து சுந்தரருக்கு காட்சி தந்த சிவன், பொன் முடிப்பு தரவே, அந்தப் பொன் தரமானது தானா என்ற சந்தேகம் சுந்தரருக்கு வந்தது. அப்போது அங்கு வந்த இரண்டு வணிகர்கள் தங்கத்தை சோதித்துத் தருவதாகச் சொல்லி வாங்கிக் கொண்டனர். ஒருவர் பொன்னை உரைத்துப் (சோதித்து) பார்த்துவிட்டு, பொன் தரமானதுதான் என்றார். உடன் வந்தவரும் அதை ஆமோதித்தார். பின் இருவரும் மறைந்து விட்டனர். சுந்தரர் வியந்து நின்றபோது, சிவனே வணிகர் வடிவில் வந்து உரைத்து காட்டியதையும், மகாவிஷ்ணு அவருடன் வந்ததையும் உணர்த்தினார். தங்கத்தை உரைத்துக் காட்டியதால் சிவனுக்கு "மாற்றுரைவரதர்' என்ற பெயர் ஏற்பட்டது.


திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து
திருவாசி செல்லும் வழி வரைபடம்

இவ்வாலயம் ஒரு 5 நிலை இராஜகோபுரத்துடனும், இரண்டு பிராகாரங்களுடனும் விளங்குகிறது. இத்தலத்தில் சுவாமி ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். இராஜகோபுரத்தின் கீழே அதிகார நந்தி, மனைவியுடன் இருக்கிறார். இங்குள்ள நவக்கிரக சந்நிதியில் சூரியன் தன் மனைவியர் உஷா, பிரத்யுஷாவுடன் இருக்க மற்ற கிரகங்கள் அனைத்தும் அவரை பார்த்தபடி உள்ளன. திருவாசியில் வசித்த கமலன் என்னும் வணிகனுக்கு மகளாகப் பிறந்த அம்பிகை, சிவனை வேண்டி தவமிருந்து, அவரை மணந்தாள். இவள் இத்தலத்தில் பாலாம்பிகை என்ற பெயரில் எழுந்தருளியுள்ளாள். அர்த்தஜாமத்தில் இவளுக்கே முதல் பூஜை நடக்கும். அம்பாள் சன்னதி எதிரே செல்வ விநாயகர் இருக்கிறார். அருகில் அன்னமாம்பொய்கை தீர்த்தம் இருக்கிறது. அம்பாள் சன்னதி முகப்பில் இரண்டு துவாரபாலகியர் உள்ளனர். திருமணமாகாத பெண்கள் நல்ல வரன் அமையவும், திருமணத்தடை உள்ளவர்கள் தடை நீங்கவும் இவர்களுக்கு மஞ்சள் கயிறு கட்டி பிரார்த்திக்கின்றனர். குழந்தையில்லாத பெண்களும் இவர்கள் முன் தொட்டில் கட்டுகின்றனர். துவாரபாலகியர் மூலமாக பக்தர்களின் கோரிக்கைகளை அம்பாள் ஏற்றுக் கொள்வதாக ஐதீகம். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்ட தோஷம் நீங்க அம்பிகைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடப்பட்ட இத்தலத்தில் வைகாசி விசாகத்தில் திருத்தேர் உலா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கே சுவாமிக்கு தினசரி நான்கு கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து 48 நாட்கள் இத்தலத்திலுள்ள நடராசருக்கு அர்ச்சனை செய்து வந்தால் தீராத நோய்கள், வயிற்று வலி, பித்தம், வாதம் போன்ற நோய்கள் நீங்கப் பெறலாம். கோயிலில் உள்ள மாற்றுரைவரதேஸ்வரரை திங்கள் கிழமைகளில் இலுப்பை, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பொருளாதார நிலை உயரும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

துணி வளர் திங்கள் துளங்கி விளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணி வளர் கொள்கையர் பாரிடம் சூழ வாரிடமும் பலி தேர்வர்
அணி வளர் கோலம் எலாம் செய்து பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல்செய்வதோ இவர் மாண்பே. 

கலை புனை மான் உரி தோலுடை ஆடை கனல் சுட ரால் இவர் கண்கள்
தலை அணி சென்னியர் தார் அணி மார்பர் தம் அடிகள் இவர் என்ன
அலை புனல் பூம்பொழில் சூழ்ந்த் அமர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
இலைபுனை வேலரோ ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே.

வெஞ்சுடர் ஆடுவர் துஞ்சு இருள் மாலை வேண்டுவர் பூண்பது வெண்நூல்
நஞ்சு அடை கண்டர் நெஞ்சு இடம் ஆக நண்ணுவர் நம்மை நயந்து
மஞ்சு அடை மாளிகை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச் சிதை செய்வதோ இவர் சீரே.

கன மலர்க்கொன்றை அலங்கல் இலங்கக் கனல் தரு தூ மதிக்கண்ணி
புன மலர் மாலை அணிந்சு அழகாய புனிதர் கொல் ஆம் இவர் என்ன
வனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மனமலி மைந்தரோ மங்கையை வாட மயல்செய்வதோ இவர் மாண்பே.

மாந்தர்தம் பால் நறு நெய் மகிழ்ந்து ஆடி வளர்சடை மேல் புனல் வைத்து
மோந்தைமுழாக்குழல் தாளமொர்வீணை முதிரவோர் வாய்மூரிபாடி
ஆந்தைவிழிச் சிறு பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சாந்து அணி மார்பரோ தையலை வாடச் சதுர்செய்வதோ இவர் சார்வே.

நீறுமெய் பூசி நிறைசடை தாழ நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி
ஆறு அது சூடி ஆடரவு ஆட்டி ஐவிரல் கோவண ஆடை
பால் தரு மேனியர் பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
ஏறு அது ஏறியல் ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே.

பொங்கு இள நாகம் ஓர் ஏகவடத்தோடு ஆமை வெண் நூல் புனை கொன்றை
கொங்கு இள மாலை புனைந்து அழகாய குழகர் கொல் ஆம் இவர் என்ன
அங்கு இளமங்கை ஓர் பங்கினர் பாச்சிலாச்சிராமத்து ஊறைகின்ற
சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாடச் சதிர்செய்வதோ இவர் சார்வே.

ஏவலத்தால் விசயற்கு அருள் செய்து இராவணனை ஈடு அழித்து
மூவரிலும் முதலாய் நடுவாய மூர்த்தியை அன்றி மொழியாள்
யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
தேவர்கள் தேவரோ சேயிழை வாடச் சிதைசெய்வதோ இவர் சேர்வே.

மேலது நான்முகன் எய்தியது இல்லை கீழ் அது சேவடி தன்னை
நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை என இவர் நின்றதும் அல்லால்
ஆல் அது மா மதி தோய் பொழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
பால் அது வண்ணரோ பைந்தொடி வாடப் பழிசெய்வதோ இவர் பண்பே.

நாணொடு கூடிய சாயினரேனும்  நகுவர் அவர் இருபோதும்
ஊணொடுகூடிய  உட்கும் நகையால் உரைகள் அவை கொள வேண்டா
ஆணொடு பெண்வடிவு ஆயினர் பாச்சிலாச்சிராமத்து ஊறைகின்ற
பூண்நெடு மார்பரோ பூங்கொடி வாடப் புனைசெய்வதோ இவர் பொற்பே.

அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க ஆச்சிராமத்து உறைகின்ற
புகைமலி மாலை புனைந்து அழகாய புனிதர் கொலாம் இவர் என்ன
நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
தகை மலி தண் தமிழ் கொண்டு இவை ஏத்தச் சார் அகிலா வினைதானே.

இன்றைக்கும் ஓதுவாரது நோய் தீர்க்கும் தகுதி வாய்ந்த தமிழ் மாலை இப்பாடல் பத்தையும் பாடுவோரை வினைகள் சாராது என்று சம்பந்தர் தமிழ் மொழியை சிறப்பித்துப் பாடியிருப்பது குறிப்பிடத் தக்கது.

திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) மாற்றுரைவரதீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


சுவாமி விமானம்


கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி


கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர்


கோஷ்டத்தில் பிரம்மா


கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர்


கோஷ்டத்தில் துர்க்கை