Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருஈங்கோய்மலை
இறைவன் பெயர்மரகதாசலேசுவரர், மரகதாசலர்
இறைவி பெயர்மரகதவல்லி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருச்சிக்கு - கரூர் சாலை வழியிலுள்ள குளித்தலை என்ற ஊரிலிருந்து காவிரி ஆற்றைக் கடந்து சென்றால் காவிரியின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு மரகதாசலேசுவரர் திருக்கோயில்
திருஈங்கோய்மலை
திருவிங்க நாதமலை
வழி மணமேடு
தொட்டியம் வட்டம்
திருச்சி மாவட்டம்
PIN - 621209

இவ்வாலயம் தினந்தோறும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.
eengoimalai route map

குளித்தலையில் இருந்து திருஈங்கோய்மலை செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

முன்னர் ஆதிசேஷனும் வாயுவும் தத்தம் வல்லமையை நிலை நாட்டிட கடும் போரில் ஈடுபட்டனர். அச்சமயம் ஆதிசேஷனால் முழுவதுமாக மூடப்பட்டிருந்த மேரு மலையிலிருந்து வைரம், சிவப்பு மணி, மரகதம், மாணிக்கம் மற்றும் நீலம் ஆகியவை சிதறி விழுந்தன. அவ்வாறு மரகதம் வீழ்ந்த இடமே திருஈங்கோய்மலை என்பர். இதன் காரணமாகவே இங்குள்ள மூலவர் மரகதாலேசுவரர் ஆனார். ஏனைய மணிகள் வீழ்ந்த இடங்களும் சிவத்தலங்களே: வைரம் திருப்பாண்டிக் கொடிமுடியிலும், மாணிக்கம் திருவாட்போக்கியிலும் (இது திரு ஈங்கோய் மலைக்கு அருகிலேயே உள்ளதாகும்), நீலம் பொதிகை மலையிலும், சிவப்புக் கல் திருவண்ணாமலையில் வீழ்ந்தனவாம்.

சோழ நாட்டுத் தலங்களுள் காவிரியின் வடகரையில் உள்ள திருமுறைத் தலங்களுள் இது கடைசித்தலம். தமிழ்நாட்டிலுள்ள கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகில் இருக்கும் 3 சிவஸ்தலங்களை ஒரே நாளில் காலை, பகல் மற்றும் மாலை வேளைகளில் சென்று தரிசனம் செய்து வணங்கினால் புண்ணியம் என்று கூறப்படுகிறது. கார்த்திகை மாதத்து திங்கட்கிழமையன்று இவ்வாறு தரிசனம் செய்தால் அது மேலும் சிறப்பு. இவற்றுள் திருஈங்கோய்மலை காவிரி வடகரைத் தலம். மற்ற இரண்டு தலங்களான திருவாட்போக்கியும், கடம்பந்துறையும் காவிரி தென்கரைத் தலங்கள். அவ்வகையில் திருஈங்கோய்மலை தலத்தில் உள்ள மரகதாசலேசுவரரை மாலையில் வழிபடுவது மிகவும் பலனுடையது என்று கருதப்படுகிறது. காலையில் கடம்பர் கோயிலையும் (கடம்பந்துறை), நண்பகலில் வாட்போக்கியையும் வழிபட வேண்டும். இவ்வாறு ஒரே நாளில் தரிசிப்பதற்கு எல்லா நாள்களும் ஏற்றவை எனினும், கார்த்திகைச் சோமவாரம் சிறப்பான நாளாகச் சொல்லப்படுகிறது.

சிவபெருமானின் பாடல் பெற்ற தலங்களில், மலை மீது இருக்கும் கோவில்கள் மிகக்குறைவு. அவற்றில் ஒன்று திருச்சி மாவட்டம் காவிரி வடகரைத் தலமான ஈங்கோய்மலை. அகத்தியர் ஈ உருவத்தில் இங்குள்ள இறைவனை வழிபட்டதால் ஈங்கோய்மலை என்று பெயர் வந்தது. அம்பாள் இறைவனை வழிபட்ட இடமாதலின் இத்தலத்திற்கு சிவசக்திமலை என்றும் பெயருண்டு. இத்தலத்து இறைவன் ஒரு சிறிய குன்றின் மீது அமர்ந்திருக்கிறார். திருவாட்போக்கி மலையைப் போன்று அவ்வளவு உயரமில்லை. சுமார் 500 படிகள் ஏறினால் கோவில் வந்தடையலாம். மலை ஏறும் படிகள் சுமாராக அமைந்திருப்பதாலும், வழியில் இளைப்பாற ஒரேஒரு மண்டபத்தைத் தவிர வேறு வசதி இல்லாததாலும், நிதானமாகத் தான் மலையேற வேண்டும். ஏறும் வழியில் நிழல் தரும் மரங்களும் இல்லை. (படங்கள் பார்க்கவும்) மலை அடிவாரத்தில் கொங்கு நாட்டுத் தலங்களுக்கே உரித்தான கல் விளக்குத் தூண் இங்கு காணப்படுகிறது. போக முனிவர் சந்நிதியும் அடிவாரத்திலுள்ளது. சிவபெருமானின் சந்நிதியில் உள்ள தீபம் காற்று பட்டாலும் அசையாத கொழுந்துடன் விளங்குகிறது. அதனால் சுவாமிக்கு அசல ஈசுவரர் என்ற பெயரும் உண்டு. கோயிலுள் நுழையும் போது தட்சிணாமூர்த்தி, விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. வலமாக வரும்போது கோயிலின் விசாலமான பழைமையான திறந்தவெளி அமைப்பைக் காண முடிகிறது. உள் பிரகாரத்தில் விநாயகர், முருகர், நவக்கிரகம், நால்வர் முதலிய சந்நிதிகள் உள்ளன. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோயில் விமானங்கள், கொடிமரங்கள் உள்ளன. பால தண்டாயுதபாணி சந்நிதி தனியே உள்ளது.

மூலவர் மரகதாலேஸ்வரர் பெயருக்கு ஏற்றாற் போல மரகதம் போன்று பச்சை நிறத்தில் அமைந்துள்ளார். சிவராத்திரி நாளின் முனபின் நாடகளில் சூரிய ஒளி இத்தல இறைவன் மீது படுகிறது. அச்சமயம் இலிங்கம் பல வண்ணத்தில் காட்சி அளிப்பதைக் காணலாம். சிவனுக்கு தீபாராதனை காட்டும்போது லிங்கத்தில் ஜோதி ஜொலிப்பதைக் காணலாம். சங்ககாலப் புலவர் நக்கீரர் இத்தல இறைவன் மீது ஈங்கோய் எழுபது என்ற் பாமாலை பாடியுள்ளார். அம்காள் கருவறை கோஷ்டத்தில் மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கையும், மற்றொரு துர்க்கை சாந்தமாகவும் உள்ளனர். ஒரே இடத்தில் துர்க்கையின் இரண்டு வடிவங்களையும் காண்பது அரிதான ஒன்று.

ஈங்கோய் மலையிலிருந்து தெற்கே நோக்கினால் காவிரி நதியையும் அதன் மறுகரையிலுள்ள திருவாட்போக்கி (அய்யர்மலை) தலத்தையும் காணலாம்.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

Top
மரகதாசலேசுவரர் ஆலயம் புகைப்படங்கள்
மலை அடிவாரத்திலுள்ள
கல் விளக்குத் தூண்
மலை ஏற படிகள்
மலை எறும் வழியிலுள்ள மண்டபம்
மலை மேல் 3 நிலை கோபுர வாயில்
இறைவன் சந்நிதி விமானம்
இறைவி சந்நிதி விமானம்
ஆலயத்தின் உட்புறத் தோற்றம்
ஆலயத்தின் உட்புறம் மற்றொரு தோற்றம்
காவிரி நதியும் அதன் மறுகரையில் திருவாட்போக்கி மலை தோற்றம்