ஆடானை நாதர் கோவில், திருவாடானை
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்) |
| இறைவன் பெயர் | ஆடானை நாதர், ஆதிரத்தினேசுவரர் |
| இறைவி பெயர் | சிநேகவல்லி, அம்பாயி அம்மை |
| பதிகம் | சம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | காரைக்குடியில் இருந்து சுமார் 55 Km தொலைவில் உள்ளது. பேருந்து வசதிகள் காரைக்குடியில் இருந்து இருக்கின்றன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் இருந்து தொண்டி செல்லும் வழியில் இத்தலம் அமைந்திருக்கிறது. |
இத்தலம் நான்கு யுகங்களிலும் இருப்பதாகவும், தேவலோகத்தில் உள்ள அமிர்தத்திலிருந்து ஒரு துளி பூமியில் விழுந்ததால் இவ்வூர் உண்டாகியது எனவும் திருவாடானை தலபுராணம் கூறுகிறது. இத்தலத்து இறைவனை வணங்குவோருக்கு முக்தி அளிப்பதால் முக்திபுரம் எனவும், சூரியன் வணங்கியதால் ஆதிரத்தினேசுவரம் எனவும், வாருணி சாபம் நீக்கியதால் ஆடானை எனவும் இத்தலம் அழைக்கப்படுகிறது.
வருணனின் மகன் வாருணி ஒருமுறை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவரை மதிக்காமல் சென்றதால் கோபமுற்ற முனிவர், வாருணி ஆட்டுத்தலையும் யானை உடலும் பெறுமாறு சாபமிட்டார். வாருணியும் அவ்வாறே ஆக, தவறை உணர்ந்து முனிவரிடம் மன்னிப்புக் கேட்க, சூரியனால் வழிபடப்பட்ட இத்தலத்து மூர்த்தியான சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டால் சாபம் நீங்கும் என்று கூறினார். வாருணியும் இத்தலம் வந்து சூரிய தீர்த்தத்தில் நீராடி இத்தலத்து இறைவனை வணங்கி சுயரூபம் பெற்றான். வாருணி சாபம் நீக்கியதால் இத்தலத்து இறைவன் ஆடானை நாதர் என்று பெயர் பெற்றார்.
பிரம்மதேவர் கூறியபடி ஒருமுறை சூரியன் இத்தலத்திற்கு வந்து தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி ரத்தினமயமான லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டான். ஆதியாகிய சூரியன் நீல நிறமுள்ள ரத்தினமயமான இறைவனை வழிபட்டதால் இத்தலத்து இறைவன் ஆதிரத்தினேசுவரர் என்றும் பெயர் பெற்றார். இன்றும் உச்சிக்காலத்தில் பாலாபிஷேகம் செய்யும் போது இறைவன் நீல நிறமாக காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது.
சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோவில் 130 அடி உயரம் உள்ள 9 நிலைகளை உடைய அழகிய சுதைச் சிற்பங்களோடு கூடிய ராஜகோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. நீண்ட மதில் சுவர்களும்,பெரிய வெளிப் பிரகாரமும், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களை உடைய மண்டபமும் உடைய இக்கோவில் பாண்டிய நாட்டு தேவார சிவஸ்தலங்களில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இறைவன், இறைவி இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மாசி மாதத்தில் சூரியஒளி மூலவர் மற்றும் அம்பாள் மீது விழும்படி கோவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை தோறும் இத்தலத்தில் சுக்கிர தோஷ நிவர்த்திக்காக விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள பதிகம்
மாதோர் கூறுகந் தேற தேறிய ஆதியா னுறை ஆடானை போதினாற் புனைந் தேத்து வார்தமை வாதியா வினை மாயுமே. வாடல் வெண்டலை அங்கை யேந்திநின் றாடலா னுறை ஆடானை தோடுலா மலர் தூவிக் கைதொழ வீடும் நுங்கள் வினைகளே. மங்கை கூறினன் மான்ம றியுடை அங்கை யானுறை ஆடானை தங்கை யாற்றொழு தேத்த வல்லவர் மங்கு நோய்பிணி மாயுமே. சுண்ண நீறணி மார்பிற் றோல்புனை அண்ண லானுறை ஆடானை வண்ண மாமலர் தூவிக் கைதொழ எண்ணு வாரிடர் ஏகுமே. கொய்ய ணிம்மலர்க் கொன்றை சூடிய ஐயன் மேவிய ஆடானை கைய ணிம்மல ரால்வ ணங்கிட வெய்ய வல்வினை வீடுமே. வானி ளம்மதி மல்கு வார்சடை ஆனஞ் சாடலன் ஆடானை தேன ணிம்மலர் சேர்த்த முன்செய்த ஊன முள்ள வொழியுமே. துலங்கு வெண்மழு வேந்திச் சூழ்சடை அலங்க லானுறை ஆடானை நலங்கொள் மாமலர் தூவி நாடொறும் வலங்கொள் வார்வினை மாயுமே. வெந்த நீறணி மார்பிற் றோல்புனை அந்த மில்லவன் ஆடானை கந்த மாமலர் தூவிக் கைதொழுஞ் சிந்தை யார்வினை தேயுமே. மறைவல் லாரொடு வான வர்தொழு தறையுந் தண்புனல் ஆடானை உறையும் ஈசனை யேத்தத் தீவினை பறையும் நல்வினை பற்றுமே. மாய னும்மல ரானுங் கைதொழ ஆய அந்தணன் ஆடானை தூய மாமலர் தூவிக் கைதொழ தீய வல்வினை தீருமே. வீடி னார்மலி வேங்க டத்துநின் றாட லானுறை ஆடானை நாடி ஞானசம் பந்தன் செந்தமிழ் பாட நோய்பிணி பாறுமே.