Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

கடம்பவன நாதேஸ்வரர் கோவில், திருகடம்பந்துறை

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருகடம்பந்துறை (தற்போது குளித்தலை என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்கடம்பவன நாதேஸ்வரர்
இறைவி பெயர்முற்றிலா முலையம்மை
பதிகம்திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது இத்தலம் குளித்தலையில் இருந்து 2 கி.மி. தொலைவில் உள்ளது. கரூரில் இருந்து 23 கி.மி. தொலைவிலும், திருச்சியில் இருந்து 55 கி.மி. தொலைவிலும் இருக்கிறது. குளித்தலை ரயில் நிலையம் திருச்சி - கரூர் - ஈரோடு ரயில் மார்க்கத்தில் இருக்கிறது.
ஆலய முகவரி அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்
குளித்தலை
குளித்தலை அஞ்சல்
கரூர் மாவட்டம்
PIN - 639104

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Kulithalai route map

Map courtesy by: Yahoo Maps

தமிழ்நாட்டிலுள்ள கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகில் இருக்கும் 3 சிவஸ்தலங்களை ஒரே நாளில் காலை, பகல் மற்றும் மாலை வேளைகளில் சென்று தரிசனம் செய்து வணங்கினால் புண்ணியம் என்று கூறப்படுகிறது. இவற்றுள் திருஈங்கோய்மலை காவிரி வடகரைத் தலம். மற்ற இரண்டு தலங்களான திருவாட்போக்கியும், கடம்பந்துறையும் காவிரி தென்கரைத் தலங்கள். அவ்வகையில் திருகடம்பந்துறை தலத்தில் உள்ள கடம்பவனநாதரை காலை தரிசனம் செய்து வழிபடுவது மிகவும் பலனுடையது என்று கருதப்படுகிறது.

கடம்பவன நாதர் கோவில் காவிரிக் கரையில் வடக்கு நோக்கி இருக்கிறது. சிவன் கோவில்கள் எல்லாம் ஒன்று கிழக்கு நோக்கி அல்லது மேற்கு நோக்கித் தான் அமைந்திருக்கும். கங்கைக் கரையில் காசி விஸ்வநாதர் கோவில் வடக்கு நோக்கி இருப்பது போல், காவிரிக் கரையில் வடக்கு நோக்கி இருக்கும் கோவில் இது ஒன்று தான். வடக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரமும், கோபுரத்திற்கு வெளியே 16 கால் மண்டபமும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. 5 நிலை கோபுர வாயில் வழியே உள்ளே நுழைநால் ஒரு நீண்ட மண்டபம் நம்மை வரவேற்கிறது. இம்மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தின் வடமேற்குப் பகுதியில் இறைவி முற்றிலா முலையம்மை சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அடுத்த வாயிலைக் கடந்து சென்றால் இறைவன் கருவறையை அடையலாம். இறைவன் கடம்பவன நாதர் லிங்கத் திருவுருவுக்குப் பின்னால் சப்த கன்னியர் உருவச் சிலைகள் இருக்கின்றன. சப்தகன்னிகைகளின் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியான தலம் இதுவாதலின், மூலவர் பின்னால் சப்தகன்னிகைகளின் உருவங்கள் கல்லில் பிம்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன. உள் பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், நலக்கிரகங்கள், ஜேஷ்டாதேவி, நால்வர், 63 மூவருடைய மூல, உற்சவத் திருமேனிகள், விஸ்வநாதர், கஜலட்சுமி ஆகிய சந்நிதிகள் உள்ளன. இக்கோவிலில் இரண்டு சோமஸ்கந்த மூர்த்திகள், இரண்டு நடராஜர் மூர்த்திகள் இருக்கின்றன. ஒரு நடராஜ மூர்த்தியின் காலடியில் முயலகன் இருக்க, மற்றொன்றில் இல்லை. தலவிருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் காவிரி நதி. கண்ணுவ முனிவரும், தேவர்களும் இத்தலத்து இறைவனை பூசித்துப் பேறு பெற்றுள்ளனர். கண்ணுவ முனிவருக்கு இறைவன் கடம்ப மரத்தில் காட்சி தந்த தலம். பிரம்மா, மகாவிஷ்ணு, முருகர், ச்பதகன்னியர்கள், அகத்தியர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.


மூலவர் கடம்பவன நாதர் - பின்புறம் சப்த கன்னியர்

தல வரலாறு: தூம்ரலோசனன் என்ற அசுரன் தரும் துன்பங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றும்படி தேவர்கள் அம்பிகையிடம் முறையிட்டனர். அவர்களுக்காக அம்பாள் துர்க்கை வடிவம் எடுத்து அசுரனை அழிக்கச் சென்றாள். அசுரன் தான் பெற்றிருந்த வரத்தினால் துர்க்கையுடன் தொடர்ந்து சமபலத்துடன் மோத, துர்க்கையின் பலம் குறைந்தது. எனவே சப்தகன்னிகளை அனுப்பி அசுரனுடன் போர் புரியச் செய்தாள். அவர்களை எதிர்க்க முடியாத அசுரன் அவர்களிடமிருந்து தப்பி வனத்திற்குள் ஓடினான். அங்கு கார்த்தியாயன மகரிஷியின் ஆசிரமத்திற்குள் அசுரம் ஒளிந்து கொள்ள, அங்கு வந்த சப்த கன்னியர்களும் ஆசிரமத்திற்குள் சென்றனர். அங்கு முனிவர் தவத்தில் இருந்ததைக் கண்ட அவர்கள், தூம்ரலோசனன் தான் முனிவர் போல உருமாறி அமர்ந்திருப்பதாக கருதி, முனிவரை அழித்து விட்டனர். இதனால், அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அவர்கள் தங்களது தோஷம் நீங்க அருளும்படி அம்பாளை வேண்டினர். அம்பாளின் கூற்றுப்படி இத்தலத்தில் சிவனை வேண்டிக் கொண்டு சாப விமோசனம் பெற சப்தகன்னிகள் இங்கு வந்து தவமிருந்தனர். சிவன் அவர்களுக்கு கடம்ப மரத்தில் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். அசுரனை அழித்தால் தங்களுக்கு மீண்டும் தோஷம் ஏற்படும் அன்று கருதிய சப்தகன்னியர், அசுரனை அழித்து தங்களைக் காக்கும்படி இறைவனிடர் முறையிட்டனர். சிவபெருமானும் அசுரனை அழித்தார். இத்தலத்தில் சப்தகன்னியர்களுக்கு இறைவன் பாதுகாப்பாக இருப்பதாக ஐதீகம்.

இத்தலம் அருணகிரிநாதர் பாடல் பெற்ற ஒரு திருப்புகழ் தலம். இங்கு முருகப்பெருமான் ஆறு திருமுகமும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். உற்சவர் ஒரு திருமுகத்துடன் மயில் மீதமர்ந்து காட்சி தருகிறார். திருப்பகழில் ஒரு பாடல் உள்ளது.

திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது:

முற்றி லாமுலை யாளிவ ளாகிலும்
அற்றந் தீர்க்கும் அறிவில ளாகிலுங்
கற்றைச் செஞ்சடை யான்கடம் பந்துறைப்
பெற்ற மூர்தியென் றாளெங்கள் பேதையே. 

தனகி ருந்ததோர் தன்மைய ராகிலும்
முனகு தீரத் தொழுதெழு மின்களோ
கனகப் புன்சடை யான்கடம் பந்துறை
நினைய வல்லவர் நீள்விசும் பாள்வரே. 

ஆரி யந்தமி ழோடிசை யானவன்
கூரி யகுணத் தார்குறி நின்றவன்
காரி கையுடை யான்கடம் பந்துறைச்
சீரி யல்பத்தர் சென்றடை மின்களே. 

பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை
வண்ண நன்மல ரான்பல தேவருங்
கண்ண னும்மறி யான்கடம் பந்துறை
நண்ண நம்வினை யாயின நாசமே. 

மறைகொண் டமனத் தானை மனத்துளே
நிறைகொண் டநெஞ்சி னுள்ளுற வைம்மினோ
கறைகண் டனுறை யுங்கடம் பந்துறை
சிறைகொண் டவினை தீரத் தொழுமினே. 

நங்கை பாகம்வைத் தநறுஞ் சோதியைப்
பங்க மின்றிப் பணிந்தெழு மின்களோ
கங்கைச் செஞ்சடை யான்கடம் பந்துறை
அங்க மோதி அரனுறை கின்றதே. 

அரிய நான்மறை ஆறங்க மாயைந்து
புரியன் தேவர்க ளேத்தநஞ் சுண்டவன்
கரிய கண்டத்தி னான்கடம் பந்துறை
உரிய வாறு நினைமட நெஞ்சமே. 	

பூமென் கோதை உமையொரு பாகனை
ஓமஞ் செய்தும் உணர்மின்கள் உள்ளத்தாற்
காமற் காய்ந்த பிரான்கடம் பந்துறை
நாம மேத்தநந் தீவினை நாசமே. 

பார ணங்கி வணங்கிப் பணிசெய
நார ணன்பிர மன்னறி யாததோர்
கார ணன்கடம் பந்துறை மேவிய
ஆர ணங்கொரு பாலுடை மைந்தனே. 

நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப்
பாலான் ஐந்துடன் ஆடும் பரமனார்
காலால் ஊன்றுகந் தான்கடம் பந்துறை
மேலால் நாஞ்செய்த வல்வினை வீடுமே. 

திருகடம்பந்துறை கடம்பவன நாதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


16 கால் வெளி முகப்பு மண்டபம்


5 நிலை கோபுரம்


கோபுரம் கடந்து நாம் காணும் நீண்ட மண்டபம்


முற்றிலா முலையம்மை சந்நிதி


கொடிமரம், பலிபீடம், நந்தி

திருகடம்பந்துறை கடம்பவன நாதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


தட்சிணாமூர்த்தி சந்நிதி


நால்வர் சந்நிதி


உட்பிரகாரத்தில் 63 மூவர்


வள்ளி, தெய்வானையுடன் சண்முகர்


ஆலயம் உட்புறத் தோற்றம்