Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

பராய்த்துறைநாதர் கோவில், திருப்பராய்த்துறை

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருப்பராய்த்துறை
இறைவன் பெயர்பராய்த்துறைநாதர், தாருகாவன நாதர்
இறைவி பெயர்பசும்பொன்நாயகி, ஹேமவர்ணாம்பிகை
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது இத்தலம் திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலை வழியில் சுமார் 16 கி.மி. தொலைவில் உள்ளது. திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் திருப்பராய்த்துறை செல்ல இருக்கின்றன. கோவிலின் வாயிலில் பேருந்து நிறுத்தம் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு தாருகாவனேஸ்வரர் திருக்கோயில்
திருப்பராய்த்துறை
திருப்பராய்த்துறை அஞ்சல்
கரூர் மாவட்டம்
PIN - 639115

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
thirupparaaithurai route map
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பராய்த்துறை செல்லும் வழி வரைபடம்
Map by: Google Map

காவிரியின் தென்கரையில் உள்ள 127 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் ஆலயம் மிகவும் தொண்மையான ஒரு கோவிலாகும். இவ்விடத்தில் காவிரி மிகவும் அகலமாக ஓடுவதால் அகண்ட காவிரி என்று அழைக்கப்படுகிறது. பராய் மரங்கள் நிறைந்த தலமாக இவ்வூர் திகழ்வதால் பராய்த்துறை என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தின் தலவிருட்சம் பராய் மரமே ஆகும். மூலவர் சந்நிதிக்குப் பின்புறம் உள்ள இத்தல விருட்சம் புற்றுநோயையும் மற்றும் எளிதில் குணப்படுத்தமுடியாத சிலவகை தோல் நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. பராய் மரத்தின் இலையானது சீதபேதி மற்றும் ரத்த பேதியை குணமாக்கும். பராய் மரத்துப் பால், கால் வெடிப்புகளைச் சரியாக்கும். இத்தகைய நோய்களால் பீடிக்கப்பட்டு வருந்தும் மக்கள் இத்தல விருட்சத்திற்கு நீரூற்றி, தீபம் ஏற்றி, தூபம் காட்டி, வலம் வந்து வணங்கினால் இந்நோய் குணமாகும் அல்லது கட்டுப்படும் எனத் தலவரலாறு தெரிவிக்கிறது. வடமாநிலங்கள் மற்றும் பர்மாவில், தேயிலைக்கு மாற்றாக பராய் இலையைப் பயன்படுத்துகின்றனர். அந்தத் தேயிலை, ஆண்மையை அதிகரிக்கும் என்கிறது ஆயுர்வேதம். பராய் வேரைப் பாம்புக்கடி முறிவு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். மூக்கிலிருந்து ரத்தம் வடிதல், மூலம், பேதி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த பராய் மரத்து விதைகள் மருந்தாகின்றன.

தல புராண வரலாறு: இத்தலத்தில் தவம் செய்து வந்த தாருகவன முனிவர்கள் தான் என்ற அகந்தையால் மமதை கொண்டனர். தாங்கள் செய்யும் வேள்விகளே முதன்மையானது என்றும் அதனால் இறைவனை துதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கருதி நடந்து கொண்டனர். அவர்களின் மமதையை அடக்க இறைவன் சிவபெருமான் பிச்சாடனர் வேடம் பூண்டு தாருகாவனத்திற்கு வந்து முனிபத்தினிகளை மயக்கினார். முனிவர்கள் இறைவனை அழிக்க மாபெரும் யாகம் செய்தனர். யாக குண்டத்திலிருந்து தோன்றிய புலிகளை இறைவன் மீது ஏவினர். சிவபெருமான் அவற்றைக் கொன்று தோலை ஆடையாக அணிந்து கொண்டார். முனிவர்கள் பிறகு மானை ஏவினர். இறைவன் அவற்றை அடக்கி தனது இடக்கரத்தில் ஏந்திக் கொண்டார். முனிவர்கள் பாம்புகளை ஏவ சிவபெருமான் அவற்றைத் தனது அணிகலன்களாக்கி கொண்டார். பூதகணங்களை முனிவர்கள் ஏவினர். எதனாலும் இறைவனை வெல்ல முடியவில்லை என்று தெரிந்து கொண்ட முனிவர்கள் ஞானம் பெற்று வந்திருப்பது பரம்பொருள் சிவபெருமானே என்பதைப் புரிந்து கொண்டு மமதை அடங்கி இறைவனிடம் தஞ்சம் அடைந்தனர். இறைவன் அவர்களை மன்னித்து அவர்களுக்கு தாருகாவனேஸ்வரராக காட்சி அளித்தார். கருவறை அர்த்த மண்டபத்தில் பிச்சாடனர் வேடம் பூண்டு வந்த சிவபெருமானின் உற்சவத் திருமேனி உள்ளது. பிரகாரத்திலும் பிச்சாடனர் உருவச்சிலை இருக்கிறது.

இத்தலம் அருணகிரிநாதர் பாடல் பெற்ற ஒரு திருப்புகழ் தலம். இங்கு முருகப்பெருமான் ஒரு திருமுகமும் இரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் மயில் மீதமர்ந்து காட்சி தருகிறார். உற்சவரும் இதே அமைப்பில் உள்ளார். திருப்பகழில் ஒரு பாடல் உள்ளது.

கோவிலின் சிறப்பு: இத்தலத்து இறைவன் ஒரு சுயம்பு லிங்கமாக தாருகாவனேஸ்வரர், பராய்த்துறை நாதர் என்ற திருநாமங்களுடன் கிழக்கு நோக்கியும், இறைவி பசும்பொன் மயிலாம்பிகை, ஹேம வர்ணாம்பிகை என்ற திருநாமங்களுடன் தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். ஆலயத்தின் முன் உள்ள மண்டப வாயிலில் மேலே சுதையால் ஆன ரிஷபாரூடர் சிற்பம் உள்ளது. வாயில் வழியாக உள்ளே நுழைத்தவுடன் இடதுபுறம் குளம் உள்ளது. வலதுபுறம் உள்ள கல் மண்டபத்தில் (வசந்த மண்டபத்தில்) விவேகானந்தர் தொடக்கபள்ளி நடைபெறுகின்றது. நேரே இராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் உள்ளது. முகப்பில் விநாயகர் காட்சி தருகிறார். இராஜகோபுர வழி உள் நுழைந்தால் நேரே செப்புக் கவசமிட்ட கொடிமரம். இதுவும் பலிபீடமும் நந்தியும் சேர்த்து ஒரு மண்டபத்தில் உள்ளன. இது நந்தி மண்டபம் எனப்படும். இத்தூண்களில் சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் உருவங்களும், திருப்பணி செய்த செட்டியாரின் உருவமும் உள்ளன. வெளிப்பிராகாரத்தில் விநாயகரும் தண்டபாணியும் உள்ளனர்.

அடுத்துள்ள கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. உள்ளே நுழைந்ததும் நேரே கிழக்கு நோக்கிய மூலவர் சந்நிதி தெரிகின்றது. உள்சுற்றில் வலம்புரி விநாயகரும், சப்தகன்னியரும், 63 மூவரும் உள்ளனர். அடுத்து சோமாஸ்கந்தர், மகா கணபதி, பஞ்சபூத லிங்கங்கள், ஆறுமுகர், பிட்சாடனர், பிரம்மா, துர்க்கை, கஜலட்சுமி, சண்முகர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. நவக்கிரகங்களுள் சனீஸ்வரனுக்கு மட்டும் காக்கை வாகனமுள்ளது. பைரவரும் உள்ளார்.

கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், இலிங்கோத்பவர் இடத்தில் அர்த்தநாரீஸ்வரரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. சிங்கங்கள் தாங்கி நிற்கின்ற அழகிய வேலைப்பாடமைந்த தூண்கள் - பரந்த கல்லால மர வேலைப்பாடுடன் உள்ளன. நடராசர் சந்நிதியும் இங்குள்ளது. துவாரபாலகர்களைத் தரிசித்து உட்சென்று மூவலரைத் தரிசிக்கலாம். மூலவர் அழகான திருமேனி. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. அம்பாள் மண்டபத்தில் உள்ள முன்தூணில் ஊர்த்துவ தாண்டவ சிற்பமும், எதிர்த் தூணில் காளியின் சிற்பமும் உள்ளன.

ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் முதல்நாள் இத்திருத்தலத்தில் காவிரியில் புனித ஸ்நானம் செய்வதை முதல் முழுக்கு எனப் பெரியோர் போற்றுவர். அன்றைய தினம் இறைவன் ரிஷப வாகனத்தில் அம்பிகையோடு எழுந்தருளி காவிரிக் கரையில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருளுவார். (ஐப்பசி கடைசி நாளன்று காவிரியில் மயிலாடுதுறை திருத்தலத்தில் ஸ்நானம் செய்வதைக் "கடை முழுக்கு" என்று போற்றுகின்றனர்). பராய்த்துறைக்கு வந்து தரிசித்தால் பாவங்கள் நீங்கப் பெறும் என்பது ஐதீகம்.


திருப்பராய்த்துறை ஆலயம் முதல் கோபுரம்


திருப்பராய்த்துறை ஆலயம் 2வது கோபுரம்


கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம்

தல விருட்சம் பராய்
மரத்தடியில் பராய்நாதர்Copyright © 2004 - 2021 - www.shivatemples.com - All rights reserved