Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

தாயுமானவர் கோவில், திருச்சிராப்பள்ளி

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருச்சிராப்பள்ளி
இறைவன் பெயர்தாயுமானவர்
இறைவி பெயர்சுகந்த குந்தளாம்பிகை, மட்டுவார் குழலியம்மை
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருச்சி நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை என்று சொல்லும் ஒரு குன்றின் மேல் அமைந்திருக்கிறது. திருச்சி தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய நகரம். தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களில் இருந்தும் திருச்சிக்கு ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகள் உண்டு.

Temple entrance
தாயுமானசுவாமி ஆலயம் நுழைவு வாயில்

Steps leading to the temple
தாயுமானசுவாமி ஆலயம் செல்ல படிக்கட்டுகள்

திருச்சி நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை என்று சொல்லும் ஒரு குன்றின் மேல் அமைந்திருக்கும் இந்த ஆலயம் தென் கயிலாயம் என்று போற்றப்படுகிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்குப் பார்த்த நிலையில் ஒரு பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். மலையில் உள்ள பாறைகள் மீது மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் பழங்கால கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. இத்தலத்து இறைவன் தாயுமானசுவாமியை தரிசிக்க சுமார் 200 படிகள் ஏறினால் போதும். முதல் தளத்தில் இறைவி மட்டுவார் குழலம்மை சந்நிதியும், இரண்டாம் தளத்தில் இறைவன் தாயுமானசுவாமியின் சந்நிதியும் அமைந்துள்ளன. இறைவன், இறைவி இருவர் சந்நிதியும் மேற்குப் பார்த்தவாறு அமைந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய சிவலிங்கத் திருமேனிகளில் தாயுமானவர் லிங்கத் திருமேனியும் ஒன்றாகும். லிங்கத் திருமேனி சுமார் 5 அடி உயரம் உள்ளது. கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகேந்திரவர்மனால் குடையப் பெற்ற இரண்டு குடவரைக் கோவில்கள் இங்கு உள்ளது. மலையின் உச்சியில் உச்சிப் பிள்ளையார் கோவில் இருக்கிறது.

குடைவரைக் கோவில் சிற்பம்
குடைவரைக் கோவில் சிற்பம்

தல வரலாறு: இரத்தினாவதி என்ற பெண்ணிற்கு அவள் தாய் வடிவில் வந்து இறைவனே சுகப் பிரசவம் செய்வித்து அருளிய தலம் இதுவாகும். இத்தலத்தில் வசித்து வந்த இரத்தினாவதி என்ற பெண் ஒரு சிவபக்தை. அவளின் பிரசவ காலத்தில் அவளுக்கு உதவி செய்ய அவள் தாயார் வெளியூரில் இருந்து வந்த போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. காவிரி நதியின் அக்கரையில் இருந்த இரத்தினாவதியின் தாயாரால் இக்கரை வ்ரமுடியவில்லை.இங்கு இரத்தினாவதிக்கு பிரசவ நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. தனது பக்தையின் துயரம் கண்டு இறைவன் அவளது தாய் உருவில் வந்து இரத்தினாவதிக்கு சுகப்பிரசவம் ஆக அருள் செய்தார். இதனாலேயே இறைவன் தாயுமானசுவாமி என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார். குழந்தைப் பேறு, சுகப்பிரசவம் ஆக இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளும் தலமாக இந்த சிவஸ்தலம் விளங்குகிறது. கர்ப்பமுற்ற பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்காக தாயுமானவர் சந்நிதியில் வாழைத்தார் வாங்கிக் கட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள். பிரசவம் ஆன பிறகு தாயுமானவர் சந்ந்தியில் வாழைத்தாரைக் கட்டி அதை அர்ச்சகர் சற்று நேரம் ஊஞ்சல் போல ஆடவிட்டு பிறகு அங்கு வரும் பக்தர்களுக்கு வாழைப்பழங்களை பிரசாதமாக விநியோகிப்பார்கள்.

உச்சிப்பிள்ளையார் கோவில்
உச்சிப்பிள்ளையார் கோவில்

மூலவர் கருவறை தெற்குச் சுற்றில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி எட்டு முனிவர்களுடன் தர்ப்பாசனத்தில் அமர்ந்து அருள் பாவிப்பது மற்ற தலங்களில் இல்லாத சிறப்பாகும். இவரை வழிபட்டால் கல்வியும், ஞானமும கிட்டும். இத்தலத்தில் நவக்கிரகங்கள் அனைத்தும் சூரிய பகவானைப் பார்த்தவாறு எழுந்தருளியுள்ளதால் இங்கு வந்து வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும். பங்குனி மாதம் 23, 24, 25 ஆகிய நாட்களில் சூரியனின் கிரணங்கள் சிவலிங்கத் திருமேனி மீது படுவது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும்.

இத்தலத்தில் முருகப் பெருமான் குத்துக்குமாரசாமியாக பன்னிரு திருக்கரங்களும், ஆறு திருமுகமும் கொண்டு மயில் மீதமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். வள்ளி, தெய்வசேனா தேவியர் இருபுறமும் விளங்குகின்றனர். மற்றொரு சந்நிதியில் முருகப் பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு தனது இரு தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். இத்தலத்து முருகர் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றவராவார். திருப்புகழில் 16 பாடல்கள் உள்ளன.